காயல்பட்டினம் நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை சரிசெய்யுமாறும், அதற்கு வாய்ப்பில்லையெனில் நகராட்சியைக் கலைக்குமாறும் காயல்பட்டினம் மக்கள் சேவாக் கரங்கள் அமைப்பின் சார்பில், சென்னையிலுள்ள நகராட்சிகள் நிர்வாக ஆணையருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலி நகராட்சிகள் நிர்வாக ஆணையரகத்தில் நேரடியாக அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் இரண்டாம் நிலை நகராட்சியின் நிர்வாக சீர்கேடு குறித்து பலமுறை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் திருநெல்வேலியிலுள்ள நகராட்சி நிர்வாக மண்டல அலுவலர் ஆகியோருக்கு மனுக்கள் அளித்தோம். உரிய விசாரணை மேற்கொள்ளப்படாமல், நகராட்சி நிர்வாக மண்டல அலுவலர் (ஆர்.டி.எம்.ஏ,) அவர்கள் எமது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
இத்துடன் சி.டி. ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக நகர்மன்றக் கூடட்ங்கள் வெளிநடப்புடன் முடிந்துள்ளன. நகராட்சி தலைவி (பெண்) மற்றும் உறுப்பினர்களுக்கிடையே கருத்து ஒற்றுமைகள் கிடையாது. எனவே, நகர்மன்ற மாதாந்திர சாதாரண கூட்டங்கள் நடக்கவில்லை.
மொத்தம் 19 உறுப்பினர்கள் (தலைவி உட்பட) ஒற்றுமையின்மை காரணமாகவும், மாதாந்திர கூட்டங்கள் நடைபெறாததாலும், காயல்பட்டினம் நகர பொதுமக்களின் (ஏறத்தாழ 55,000 பொதுமக்கள்) பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. குடிநீர் பிரச்சினை, நிர்வாகத்தில் ஊழியர் பற்றாக்குறைகள், மனுக்கள் தொலைந்து போவது - இப்படிப்பட்ட குறைகளினால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குடிநீர் பற்றாக்குறை இருந்தபோதிலும் 10 நாட்களுக்கு ஒருமுறையே காயல்பட்டினம் (தூத்துக்குடி மாவட்டம்) நகருக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
சி.டி.யில் பதிவு செய்யப்பட்ட (www.kayalpatnam.com இணையதளத்தில் உள்ளது) உறுபு்பினர்களின் ஆடியோ ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, தாங்கள் நேரடியாக விசாரணை செய்து, நிர்வாகத்தை சீர்தூக்கி, சிறப்பாக்கித் தருமாறு வேண்டுகிறேன். தலைவி - உறுப்பினர்களின் ஒத்துழைப்பின்மை ஆகும் பட்சத்தில், நகர்மன்றத்தைக் கலைத்து, மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டுகிறோம்.
இவ்வாறு, சென்னையிலுள்ள நகராட்சிகள் நிர்வாக ஆணையரகத்திற்கு காயல்பட்டினம் மக்கள் சேவாக் கரங்கள் அமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலி அளித்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். |