காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தின் சார்பில், சென்னைவாழ் காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சி 23.09.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில், காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரிலுள்ள அபூ கார்டன் குளியல் பூங்காவில் நடைபெற்றது. இதுகுறித்த தொகுப்பு பின்வருமாறு:-
காயலர் குடும்ப சங்கமம்:
காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தின் சார்பில், சென்னைவாழ் காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சி 23.09.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில், காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரிலுள்ள அபூ கார்டன் குளியல் பூங்காவில் நடைபெற்றது.
எழும்பூரில் ஒன்றுகூடல்:
முன்னதாக காலை 08.00 மணியிலிருந்து காயலர்கள், சந்திப்பிடமான சென்னை - எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கு அருகில் ஒன்றுகூடினர். அங்கு, உணவு மற்றும் போக்குவரத்து வகைக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையை, அதன் பொறுப்பாளரான கிழுறு முஹம்மதிடம் பங்கேற்பாளர்கள் செலுத்தினர்.
அனைவரும் சங்கமித்த பின்னர், ஆண்கள் தனியாகவும், பெண்கள் மற்றும் அவர்கள் பாதுகாப்பிற்காக சில ஆண்கள் தனியாகவும் என இரண்டு சொகுசுப் பேருந்துகள் மூலம் எழும்பூரிலிருந்து, நிகழ்விடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
நிகழ்விட ஏற்பாடுகள்:
பரந்து விரிந்த மைதானத்தையும், பசுமை படர்ந்த நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு நீச்சல் குளங்களையும் ஒன்றாகப் பெற்றுள்ள அப்பூங்காவில், பெண்களின் வசதிக்காக பெரிய திரை கட்டப்பட்டிருந்தது. ஆண் - பெண்கள் பகுதி திரையின் கீழ்ப்பகுதியில் சமையல் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
காலை உணவு:
துவக்கமாக அனைவருக்கும் சிக்கன் சேமியாவுடன் தேனீர் பரிமாறப்பட்டது. கையேந்தி பவனில் பெறுவது போல அனைவரும் தமது காலை உணவை ஏற்பாட்டாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
குலுக்கல்:
குடும்ப சங்கம நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் துண்டுச் சீட்டு வினியோகிக்கப்பட்டது. தமது பெயர் மற்றும் தொடர்பு எண்ணை அதில் பதிவு செய்து, மூடப்பட்ட பெட்டிக்குள் போட வேண்டும்... பரிசளிப்பு நிகழ்ச்சியின்போது, குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து அனைவரும் உற்சாகத்துடன் தமது விபரங்களைப் பதிவு செய்து பெட்டிக்குள் செலுத்தினர்.
சாதாரண கூட்டம்:
பின்னர், கே.சி.ஜி.சி.யின் சாதாரண கூட்டம் துவங்கியது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் துணைத்தலைவர் பிரபு ஷுஅய்ப் கலந்துகொண்டார்.
அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஆடிட்டர் ரிஃபாய் மகன் மாணவர் நூஹ் நஃபீஸ் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் எஸ்.எச்.ஷமீமுல் இஸ்லாம் (எஸ்.கே.எஸ்.) நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியதுடன், அமைப்பின் அண்மைச் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார்.
சென்னை காயலர்களை ஒருங்கிணைத்து...
சென்னையிலுள்ள பல நூற்றுக்கணக்கான காயலர்கள் உள்ளதாகத் தெரிவித்த அவர், அவர்களனைவரையும் ஒருங்கிணைத்து, ஒரு மாபெரும் அமைப்பாக இந்த அமைப்பை இயக்கிட அனைவரும் விரும்புவதாகத் தெரிவித்தார்.
மண்ணடியில் இடம் தேவை:
தற்சமயம், சென்னை க்ரீம்ஸ் சாலையிலுள்ள ஓரிடத்தில் வாடகையின்றி அலுவலகம் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், காயலர்கள் பெரும்பாலும் சென்னை மண்ணடி பகுதியிலேயே செறிவாக இருப்பதால், அப்பகுதியில் குறைந்த வாடகையில் தரமான இடம் அலுவலகத்திற்காக எதிர்பார்க்கப்படுவதாகவும், அவ்வாறு இடம் இருப்பதாக யாருக்கேனும் தெரிந்தால் தெரிவிக்குமாறும் அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
மருத்துவர் உரை:
அதனைத் தொடர்ந்து, மஞ்சள் காமாலை (ஹெபடிடிஸ் பி) நோயின் பாதிப்புகள் மற்றும் அதற்கெதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அமைப்பின் மருத்துவக் குழு உறுப்பினர் டாக்டர் கானி ஷேக் விரிவாக பேசினார்.
நடைபெறவுள்ள மருத்துவ முகாமில் கண் மருத்துவ பரிசோதனையும், மஞ்சள் காமாலை பரிசோதனையும் இலவசமாகவே செய்யப்படுவதாகவும், மஞ்சள் காமாலை தடுப்பூசி மட்டும் - விருப்பப்படுவோருக்கு சலுகை கட்டணத்தில் போடப்படும் என்றும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.
பின்னர், பங்கேற்பாளர்கள் மருத்துவரிடம் உடல் நலன் குறித்த சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க, அவர் பொறுமையுடன் அவர்களுக்கு விளக்கமளித்தார்.
மருத்துவ முகாமுக்கு முன்பதிவு:
பின்னர், மருத்துவ முகாமில் பரிசோதனை செய்வோரின் பெயர்களை நெட்காம் புகாரீ பதிவு செய்ய, மருத்துவ பரிசோதனை இலவச முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கலந்துகொண்ட காயலர்களுக்கு கண் பார்வை பரிசோதனையும், மஞ்சள் காமாலை மருத்துவ பரிசோதனையும் இலவசமாக செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, விருப்பப்பட்டோருக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி சலுகை விலையில் போடப்பட்டது. மருத்துவ முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஷஃபீயுல்லாஹ் ஒருங்கிணைத்தார்.
உற்சாகக் குளியல்:
இவ்வாறாக, சின்ஸியராகத் துவங்கிய கூட்டம், உரைகள் நிறைவுற்று விளையாட்டுகள் துவங்கியதும் சிரிப்பலையில் மூழ்கியது. சென்னை வெப்ப வானிலையின் கோரப்பிடியில் சிக்கித் திணறும் தமக்கு தோட்டக்குளியல் இதமூட்டும் என்று கருதி எதிர்பார்ப்புடன் வந்திருந்த காயலர்கள், குளிப்பதற்கு அனுமதி கிடைத்ததும், பூங்காவின் கீழ்ப்பகுதியிலுள்ள பசுமை படர்ந்த மைதானத்திற்கு விரைந்து சென்று, நீல நிற நீச்சல் தொட்டியில் - வயது வேறுபாடின்றி உற்சாகத்துடன் துள்ளிக்குதித்து இன்பக்குளியலை அனுபவித்தனர்.
எறிபந்து போட்டி:
ஒருபுறம் குளியல் நடைபெற்றுக்கொண்டிருக்க மறுபுறம் மேற்புற மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் துவங்கின. துவக்கமாக, பந்து எறியும் போட்டி (த்ரோ பால்) நடைபெற்றது. சுமார் 20 அடி தொலைவில் உள்ள இலக்கை குறி பார்த்து பந்தால் அடிக்க வேண்டும் என்பதே போட்டியின் விதிமுறை. கிடடத்தட்ட குடும்ப சங்கம நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ஒரு கண்ணைப் பொத்திக்கொண்டு குறிபார்த்து பந்தை எறிந்தபோதிலும், “23ஆம் புலிகேசி” (?) போல அனைவரும் இலக்கைத் தவிர எல்லா இடங்களிலும் பந்தால் அடித்தனர். (ஓ... அந்த புலிகேசியா...??) பத்து வயதே நிரம்பிய ஒரேயொரு சிறுவனும், 42 வயது நிரம்பிய ஒரு பெரியவரும் மட்டுமே சரியாக இலக்கு நோக்கி பந்தால் அடித்தனர்.
மோர்...
இந்தப் போட்டியில் பங்கேற்றும் - ரசித்தும் களைத்துப் போன அனைவருக்கும் சூடான மோர் பரிமாறப்பட்டது. (குளிரூட்டி கொண்டு வரப்பட்ட மோர், பயணத்தின் பாதி தொலைவிலேயே சூடாகிவிட்டது! :-)
மழலையருக்கான சன்-மூன்-ஸ்டார் போட்டி:
பின்னர், மழலையர் பங்கேற்கும் சன் - மூன் - ஸ்டார் போட்டி துவங்கியது. “சன்” என்று சொல்லும்போது இரு கைகளையும் இரு புறத்திலும் விரிக்கவும், “மூன்” என்று சொல்லும்போது இரு கைகளையும் மேலே தூக்கவும், “ஸ்டார்” என்று சொல்லும்போது இரு கைகளையும் இறக்கவும் வேண்டும் என்பதும், மாற்றி செய்தால் போட்டியிலிருந்து நீக்கப்படுவர் என்பதும் போட்டியின் விதி.
இந்த விதிமுறையை கச்சிதமாக கருத்திற்கொண்ட மழலையர் மற்றும் சிறுவர் - சிறுமியர், ஆட்டமிழக்காமல் உற்சாகமாக விளையாடினர். இருப்பினும், நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க இயலாமல் பல குழந்தைகள் ஆட்டமிழந்தனர். அதனையடுத்து அவர்களை போட்டியிலிருந்து விலகச் சொன்னபோது அவர்களின் முகம் வாடியது பார்க்க பரிதாபமாக இருந்தது. எங்கே தன் குழந்தை ஆட்டமிழந்து விடக்கூடாதே... என்ற பெற்றோரின் - குறிப்பாக தாய்க்குலத்தின் ஏக்கம் ரசிக்கும்படியாக இருந்தது.
மழலையருக்கான கிராஅத் போட்டி:
அதனைத் தொடர்ந்து, மழலையருக்கான கிராஅத் (இனிய குரலில் திருமறை குர்ஆனை ஓதும்) போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியை ஷமீமுல் இஸ்லாம் வழிநடத்தினார். போட்டியில் பங்கேற்ற மழலையர் தமதினிய குரலால், தமக்கு மனனமான திருமறை குர்ஆனின் சிற்சிறு அத்தியாயங்களை அழகுற ஓதி அனைவரையும் மகிழ்வித்தனர்.
மதிய உணவாக களறி சாப்பாடு:
பின்னர் மதிய உணவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அதனையடுத்து, விளையாடிக் கொண்டிருந்தோர் மற்றும் நீச்சல் குளங்களில் குளித்துக் கொண்டிருந்தோர் உணவுண்ண அமர்ந்தனர்.
சுத்தமான மண் தரையில் பாய் விரித்து, அதன் மேல் காகித விரிப்பு விரித்து, அதன் மேல், பலர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் தாளங்கள், இயற்கை இலையாலான தட்டுக்களை வைத்து அனைவருக்கும் காயல்பட்டினம் பாரம்பரிய களறி சாப்பாடு பரிமாறப்பட்டது.
(மனம் கொள்ளை கொள்ளும் மணத்துடன் தயாரிக்கப்பட்டிருந்த இந்த உணவை, கூடுதலாக சில மணித்துளிகள் சட்டியிலேயே விட்டிருந்தால் இன்னும் ரசித்து சாப்பிட்டிருக்கலாம்!) தாமதமாக உணவுண்ண அமர்ந்து வேகமாக முடித்துக்கொண்டு எழுந்தோரையும், துவக்கமாக உணவுண்ண அமர்ந்து கடைசியாக ஆற - அமர உண்டு முடித்து எழுந்தோரையும் நண்பர்கள் வட்டம் கேலி செய்தபோதிலும், எதைப்பற்றியும் அவர்கள் கவலைப்படாமல், கடமையிலேயே கண்ணாயிருந்தனர்.
லுஹர் தொழுகை:
மதிய உணவு உபசரிப்பு நிறைவுற்றதும், லுஹர் தொழுகைக்கு அதான் சொல்லப்பட்டு, கூட்டாக தொழுகை நடத்தப்பட்டது. பின்னர் மூத்தவர்கள் கட்டையை சாய்க்க (அதாங்க... ஓய்வெடுக்க!), இளசுகள் மீண்டும் துள்ளிக்குதித்து விளையாடத் துவங்கினர்.
கல்வி அமர்வு:
மதியம் 02.30 மணியளவில் கே.சி.ஜி.சி. கல்விக்குழுவின் சார்பில் கல்வி அமர்வு நடைபெற்றது. காயல்பட்டினம் மாணவ-மாணவியரின் கல்வி முன்னேற்றம், அவர்களது மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல்கள் குறித்து இவ்வமர்வில் நீண்ட நேரம் கருத்துப் பரிமாறப்பட்டு, முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
தேனீர் - சிற்றுண்டியுபசரிப்பு:
மாலை 04.00 மணியளவில் அனைவருக்கும் சிற்றுண்டியுடன் தேனீர் பரிமாறப்பட்டது.
சிறுவர்-சிறுமியருக்கான மியூசிக்கல் சேர் போட்டி:
அதனைத் தொடர்ந்து, சிறுவர், சிறுமியர், பெரியோர் (அனைவர்) பங்கேற்ற மியூசிக்கல் சேர் போட்டி தனித்தனியே நடைபெற்றது.
சிறுவர் - சிறுமியருக்கான மியூசிக்கல் சேர் போட்டியில் ஆட்டமிழந்த சிறுவர்கள், “எங்களை விட வயசுல கூடுன பையன்களையெல்லாம் சேர்த்துட்டாங்க! அதனால நாங்க தோத்துட்டோம்... ஆனா விடப்போறதில்லை... பெரியவங்க போட்டியில் நாங்களும் பங்கேற்போம்” என்று கோபம் கொப்பளிக்கக் கூறி போர்க்கொடி தூக்கிய காட்சி - மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் போலிருந்தது.
அஸ்ர் தொழுகை:
பின்னர் அஸ்ர் தொழுகைக்கு அதான் சொல்லப்பட்டு, கூட்டாக தொழுகை நடத்தப்பட்டது.
பெரியோருக்கான மியூசிக்கல் சேர் போட்டி:
பின்னர், இந்த குடும்ப சங்கம நிகழ்ச்சியையே கலகலப்பாக்கி - பலத்த சேதத்தையும் விளைவித்த - பெரியோருக்கான (அனைவரும் பங்கேற்கும்) மியூசிக்கல் சேர் போட்டி நடைபெற்றது.
15 வயது முதல் 65 வயது வரையிலான அனைவரும் தம் வயது வேறுபாடுகளை மறந்து ஒன்றாக போட்டியில் பங்கேற்றனர். மொத்த போட்டியாளர்களின் எண்ணிக்கைக்கு ஒன்று குறைவாக நாற்காலிகள் போடப்பட்டன. மடிக்கணணியில் இசை ஒலிக்கப்பட்டது. இசை நிறுத்தப்பட்டவுடன் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும்... நாற்காலி கிடைக்காமல் நிற்பவர் ஆட்டத்திலிருந்து நீக்கப்படுவார். இதுவே விதி!
சிறுவருக்காக நடத்தப்பட்ட இதே போட்டி, எவ்வித சேதமுமின்றி உற்சாகமாக நடத்தப்பட்டது. ஆனால் 30 கிலோ முதல் 130 கிலோ வரை உடல் எடை கொண்ட போட்டியாளர்கள் பங்கேற்ற இப்போட்டியில் சிறுவர்கள் சீக்கிரமாகவே ஆட்டமிழந்தனர். (போட்டியின் ஓட்டப் பாதையை பெரியவர்கள் தம் முழு உடலால் மறைத்துக்கொண்டதால்தான் சிறுவர்கள் ஆட்டமிழக்க நேர்ந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.) பெரியவர்களோ சளைக்காமல் ஓடிக்கொண்டிருந்தனர்.
மடிக்கணணியில் இசையை ஓடவிட்ட இளைஞரோ - சிறுவர் போட்டியில் உடனுக்குடன் இசையை நிறுத்தி போட்டியை நடத்தினார். ஆனால் பெரியோர் பங்கேற்ற இப்போட்டியில் மட்டும் அவர்கள் இளைத்துக் களைப்புறும் அளவுக்கு இசையை ஓடவிட்டார். (இப்படியாவது சிறிது நேரம் ஓடி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளட்டுமே... என்ற இரக்கத்திலேயே தான் அவ்வாறு செய்ததாக பின்னர் தன்னிலை விளக்கமளித்தார்.)
இசை ஓடிக்கொண்டிருந்தபோது, திடீரென வயர்லெஸ் ஒலிபெருக்கிக்கு சிக்னல் கிடைக்காததால் பாட்டு நிறுத்தப்பட்டதாகக் கருதிக்கொண்டு பெருசுகள் வேக வேகமாக நாற்காலியில் அமரச் செல்ல, அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கிடக்க, தான் இசையை நிறுத்தவில்லை என்று கட்டுப்பாட்டாளர் தெரிவித்ததும், முக்கி முனங்கி எழுந்து நின்று மீண்டும் ஓடிச்சென்றது எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத காட்சிகள்!
ஒவ்வோர் ஓட்டத்திலும் ஒருவர் ஆட்டமிழக்க, நாற்காலியின் எண்ணிக்கை ஒருபுறம் குறைய, போட்டியாளர்களின் வேகம் மறுபுறம் கூடியது. வெறும் இரண்டே முக்கால் கிலோ எடை கொண்ட ப்ளாஸ்டிக் சேரில் 200 கிலோ எடை கொண்டவர்களெல்லாம் நான்கு மடங்கு அழுத்தத்துடன் வேகமாக அமர்ந்ததால், ‘நில்கமல்’ சேர்கள் நில்லாக்கமல் சேர்களாக மாறின.
ஒவ்வொரு ரவுண்டிலும் ஒவ்வொரு சேர் உடையவே, பயத்தில் உறைந்த போட்டி நடத்துநர்கள், இறுதியில் நாற்காலியைத் தவிர்த்து அலுமினிய சட்டியை தலை குப்புற கிடத்தி போட்டியை நடத்தினர். ஆனால், பாவம்... போட்டியாளர்கள் அமர்ந்த வேகத்தில் அலுமினிய சட்டியின் நடுப்பகுதியும் கிழிந்தது.
ஒரு கட்டத்தில், ஒரு பெரியவர் மேல் நாற்காலியைப் பிடித்தவாறு இளைஞர் ஒருவர் விழுந்து கிடக்க, அவரை எழுந்திடுமாறு இவர் கட்டளையிட, “நான்தான் சேரைப் பிடித்தேன்...” என்று அவர் சொல்ல, ”சேரையும், பரிசையும் நீயே வச்சிக்கோடா... எனக்கு மூச்சு முட்டுது... எழும்புடா...!” என்று பெரியவர் சொன்னபோதுதான் அவரது இயலாமை அனைவரின் கண்ணுக்கும் தெரிந்தது. போட்டியை நிறுத்திவிட்டு அவரைத் தூக்கி நிறுத்தியபோது, “நான் அவுட்டா, இல்லையா?” என்று அவர் கேட்டது இன்றும் சிரிக்க வைக்கும் காட்சி!
அதுபோல, குறைந்தளவு நாற்காலிகள் மட்டுமே இருக்கையில், இசை நிறுத்தப்பட்டவுடன் தனக்குக் கிடைத்த நாற்காலியில் அமர்வதை விட்டுவிட்டு, நாற்காலியையே கையில் தூக்கிக் கொண்டு ஓடிய பெரியவர்கள் பி.டி.உஷாவையெல்லாம் மறக்கடித்துவிட்டனர் என்றே சொல்ல வேண்டும்.
ஒன்ஸ் மோர்...
இவ்வாறாக, பல்வேறு நகைச்சுவை - சண்டைக் காட்சிகளுடன் கலகலப்பாக நிறைவுற்ற இப்போட்டியை துவக்கம் முதல் இறுதி வரை கண்டு ரசித்த பொதுமக்கள் - குறிப்பாக பெண்கள், “இந்தப் போட்டியை முதலிலேயே நடத்தியிருக்கலாமே...? இனி அடிக்கடி இந்தப் போட்டியை மட்டும் நடத்துங்க!” என்று சொன்னதும், வீட்டுக்காரர்கள் தம் வீட்டுக்காரிகளை கோபத்துடன் முறைத்ததும் இனி எப்போது கிடைக்குமோ என்று ஏங்க வைத்த காட்சிகள்!
பெண்கள் நிகழ்ச்சி:
பெண்கள் பகுதியில், ஆலிமா பெண்கள் இணைந்து, இஸ்லாம் மார்க்கம் தொடர்பான பல பொதுவான கேள்விகளை சேகரித்து கொண்டு வந்திருந்தனர். அவற்றை வைத்து அவர்கள் மகளிருக்கான வினாடி-வினா போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை தனியே நடத்தி பரிசுகளை வழங்கினர்.
பரிசளிப்பு:
நிறைவாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. நடைபெற்று முடிந்த போட்டிகளில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பந்து எறியும் (த்ரோ பால்) போட்டியில் பிரபு முஹ்யித்தீன் என்பவரின் மகன் முஅவ்வித் (வயது 10) முதற்பரிசையும், ஹாஜி எஸ்.ஏ.கே.முஹம்மத் உமர் (வயது 42) இரண்டாம் பரிசையும் பெற்றனர்.
சிறுவருக்கான மியூசிக்கல் சேர் போட்டியில், ஷேக், ரிழ்வான், அமீர் ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளைப் பெற்றனர்.
மழலையர், சிறுவர் - சிறுமியருக்கான சன் - மூன் - ஸ்டார் போட்டியில், மர்ஜூனா (த.பெ. ஷமீமுல் இஸ்லாம் எஸ்.கே.எஸ்.) முதற்பரிசையும், ஆயிஷா நமீரா (த.பெ. நெட்காம் புகாரீ) இரண்டாம் பரிசையும், ஷரீஃபா (த.பெ.ஸாஜித்) மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
சிறுமியருக்கான மியூசிக்கல் சேர் போட்டியில் நூர் உமைரா, ஆயிஷா நமீரா, மர்யம் ஆகிய சிறுமியர் முதல் மூன்று பரிசுகளைப் பெற்றனர்.
சிறுவருக்கான மியூசிக்கல் சேர் போட்டியில், கே.ஆர்.கபீர், முஅவ்வித், முஃபீத் ஆகிய சிறுவர்கள் முதல் மூன்று பரிசுகளைப் பெற்றனர்.
பெரியோர் (அனைவர்) பங்கேற்ற மியூசிக்கல் சேர் போட்டியில், பிரபு முஹ்யித்தீன் முதற்பரிசையும், பாளையம் சுலைமான் இரண்டாம் பரிசையும், ஷேக் ஸதக்கத்துல்லாஹ் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
மழலையர் கிராஅத் போட்டியில் நுஃபைஸ் (த.பெ. இஃப்ஹாம் ஷாதுலீ) முதற்பரிசு பெற்றார். அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பிடம் பெற்ற சிறுவராக முஆத் மொகுதூம் (த.பெ. பிரபு முஹ்யித்தீன்) தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டார். சிறுமியர் பிரிவில் சிறுமி ஆக்கிலா சிறப்பிடத்திற்கான பரிசைப் பெற்றார்.
நன்றியுரைக்குப் பின், துஆவுடன் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
திரளானோர் பங்கேற்பு:
இந்நிகழ்வில், ஆண்கள், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் உள்ளிட்ட பெண்கள், சிறுவர் - சிறுமியர், மழலையர் என சுமார் 150 பேர் கலந்துகொண்டனர். மந்தமாகத் துவங்கி, மகிழ்ச்சி பொங்க - ஆவலைத் தூண்டிய வண்ணம் நிறைவுற்ற நிகழ்வுகள் அனைத்திலும் பங்கேற்ற - கண்டுகளித்த பொதுமக்கள், அடுத்த “குடும்ப சங்கம” நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களாக ஆனந்தப் புன்னகையுடன் விடைபெற்றனர்.
மீண்டும் மக்களைத் தாங்கிய சொகுசுப் பேருந்துகள் ஒரு மணி நேர பயணத்திற்குப் பின் அனைவரையும் எழும்பூரில் இறக்கிவிட்டுச் சென்றது.
ஏற்பாட்டாளர்கள்:
அனைத்து நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளையும், ஆடிட்டர் ரிஃபாய், ஸ்மார்ட் அப்துல் காதிர், எஸ்.எச்.ஷமீமுல் இஸ்லாம் (எஸ்.கே.எஸ்.), ஏ.எச்.எம்.முக்தார். கிழுறு முஹம்மத், ஹனீஃபா, அரஃபாத், ஃபைஸல், ஷேக் ஸதக்கத்துல்லாஹ், ஸூஃபீ, யூஸுஃப், ஜாஃபர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
நிகழ்வுகளின் படப்பதிவுகளை தொகுப்பாகக் காண இங்கே சொடுக்குக!
தகவல் உதவி:
A.H.M.முக்தார்
படங்களில் உதவி:
ஹாஜி M.S.முஹம்மத் லெப்பை
M.A.அப்துல் பாஸித்
மற்றும்
முஹம்மத் நூஹ்
[செய்தியில் கூடுதல் தகவல்களும், சில படங்களும் இணைக்கப்பட்டன @ 13:24/29.09.2012] |