வரும் அக்டோபர் மாதம் 01ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் - திருத்தல் செய்வதற்கான சுருக்கமுறை திருத்தம் நடைபெறவுள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை பின்வருமாறு:-
*** வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் 2013இல், 01.10.2012 முதல், 31.10.2012 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட / நீக்கிட / திருத்தம் செய்திட மனுக்கள் அளிக்கலாம்.
*** வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட, 01.01.2013 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
*** 01.10.2012 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் - மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், அனைத்து வரையறுக்கப்பட்ட இடங்களில் (வாக்குச் சாவடிகளில்) பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
*** மனுக்களை அந்தந்த பகுதிக்குரிய வரையறுக்கப்பட்ட இடமான வாக்குச்சாவடி மையத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் அளிக்கலாம்.
*** வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட, படிவம் 6இல் புகைப்படம் ஒட்டியும், பெயர் நீக்கம் செய்திட படிவம் 7ஐயும், திருத்தம் செய்திட படிவம் 8ஐயும், வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8ஏ-வையும் பூர்த்தி செய்து அளித்திட வேண்டும்.
*** படிவம் 6 அளிக்கும்போது, மனுதாரர் தமது முந்தைய முகவரி, வாக்காளர் அடையாள அட்டை ஏற்கனவே பெற்றிருப்பின் - அதன் எண், தமது குடும்ப உறுப்பினர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பின் அவர்களது பெயர் இடம்பெற்றுள்ள பாகம் எண் மற்றும் வரிசை எண் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும்.
*** படிவம் 6ஏ, வெளிநாட்டில் வசிக்கும் (Overseas Elector) வாக்காளர் பெயரை சேர்க்க அனுமதிக்கப்படும் மனுவாகும். பூர்த்தி செய்யப்பட்ட இம்மனுவை, வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் தபால் மூலமாகவும், நேரடியாகவும் வழங்கலாம். கடவுச்சீட்டு பக்கங்களின் நகல் இணைத்து அனுப்பப்பட வேண்டும். அசல் கடவுச் சீட்டை வாக்காளர் பதிவு அலுவலர் சரிபார்த்து, உடனே ஒப்படைத்து விடுவார். இம்மனுக்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் மட்டுமே பெறப்படும்.
*** படிவம் 7 மற்றும் 8 ஆகியவற்றை அளிக்கும்போது, வாக்காளரின் பெயர் அடங்கியுள்ள பாகம் எண் மற்றும் வரிசை எண் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். பாகம் எண் மற்றும் வரிசை எண் குறிப்பிடப்படாத மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
*** படிவம் 8 அளிக்கும்போது, திருத்தம் செய்யப்பட வேண்டிய இனத்தினை தெளிவாகக் குறிப்பிட்டு, உரிய ஆவணத்துடன் மனு அளிக்க வேண்டும்.
*** படிவம் 8ஏ-இல், மனுதாரர் பெயர் இடம்பெற்றுள்ள பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டும், மனுதாரர் பெயர் தற்போது எந்த பாகம் மற்றும் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டும் மனு அளித்திட வேண்டும்.
*** 07.10.2012, 14.10.2012 மற்றும் 21.10.2012 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய மூன்று சிறப்பு முகாம் நாட்களில், அனைத்து வரையறுக்கப்பட்ட இடங்களிலும் மனுக்கள் பெறப்படும்.
*** அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், பொதுமக்கள் சார்பாக மனுக்கள் அளிக்கக் கூடாது. மேலும், மொத்தமாக அளிக்கப்படும் (Bulk Application) மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.
*** மனுதாரர்களே நேரடியாக மனு செய்து, மனு அளித்தமைக்கு ஒப்புதல் பெற்றுக்கொள்ள வேண்டும்.
*** மனுதாரர்கள் மனுவில் புகைப்படத்தை ஒட்டாமல், தைத்து / பின் செய்து அளிக்கும் புகைப்படங்கள் தவறிவிட வாய்ப்புள்ளதால், புகைப்படத்தை மனுவில் ஒட்டியே அளித்திட வேண்டும்.
*** “வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2013” பணிகள் முடிவுற்று, இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் 05.01.2013 அன்று வெளியிடப்படும்.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |