ஆறுமுகனேரி - ஆத்தூர் இடையே அகோபாலபுரம் பாலத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் தீயை அணைக்கச் சென்ற திருச்செந்தூர் தீயணைப்பு வாகனம் 27.09.2012 வியாழக்கிழமையன்று தலைகுப்புற கவிழ்ந்தது. இவ்விபத்தில் நான்கு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.
ஆத்தூர் அருகே கொழுவைநல்லூரில் வாழைத் தோட்டத்தில் புதன்கிழமை தீப்பற்றியது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் திருச்செந்தூர் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு மீட்பு வாகனத்தை எடுத்துக்கொண்டு தீயை கட்டுப்படுத்துவதற்காக ஆத்தூர் நோக்கிச் சென்றனர். தீயணைப்பு வாகனத்தை டிரைவர் சந்தர் (36) ஓட்டிச் சென்றுள்ளார். சாகுபுரத்தையடுத்து அகோபாலபுரம் (வரண்டியவேல்) விலக்கில் உள்ள தரைப்பாலத்தில் திரும்பியபோது, எதிரே மோட்டார் சைக்கிளுக்கு வழிவிட்டு டிரைவர் சந்தர் வாகனத்தை ஒதுக்கியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தரைப்பாலத்தின் இடதுபுறம் உள்ள தடுப்பு கம்பியைத் தகர்த்து தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் தீயணைப்பு வீரர்கள் மெஞ்ஞானபுரம் ஜேசுபால் ஞானதுரை (39), திருச்செந்தூர் அனந்தபெருமாள் (52), வரண்டியூர் லிங்கதுரை, டிரைவர் சந்தர் ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த 4 பேருக்கும் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தீயணைப்பு வண்டியின் கண்ணாடிகள் முழுவதும் சேதமடைந்ததுடன் வாகனமும் பலமாக சேதமடைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியன் நிகழ்விடத்தைப் பார்வையிட்டார். பின்னர், தீயணைப்பு வீரர்கள் சாகுபுரம் டி.சி.டபிள்யு. நிறுவன உதவியுடன் தீயணைப்பு வாகனத்தை மீட்டனர்.
விபத்து நிகழ்ந்த வரண்டியவேல் பகுதியிலுள்ள இந்த வளைவில், கடந்த 08.05.2011 அன்று டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் வேதிப்பொருள் ஏற்றிச் சென்ற வாகனமும் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது. பெரும் ஆபத்தை விளைவிக்கத்தக்க இந்த மோசமான வளைவில் போதிய தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன. |