காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், தினமும் மார்க்க உரைகள் பதிவேற்றம் செய்யப்படுவதாகவும், விரைவில் நேரலை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மஹ்ழரா அரபிக்கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கடந்த ஷஃபான் மாதத்தில் நடைபெற்ற நமது மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், கல்லூரியின் கண்ணியத்திற்குரிய முதல்வர் பெருந்தகை அவர்களால், கல்லூரியின் www.mahlara.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் துவக்கி வைக்கப்பட்டது.
இவ்விணையதளத்தில், கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ, கல்லூரியின் பேராசிரியர்கள் உள்ளிட்ட மார்க்க அறிஞர்களின் பல்வேறு தலைப்புகளிலான இஸ்லாமிய உரைகள் தினமும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
தவ்ஹீத், ஷிர்க், சுன்னத், பித்அத் ஆகிய தலைப்புகளில் ஆற்றப்பட்ட உரைகள் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கோட்பாடுகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் இன்னும் பல உரைகள் பதிவேற்றப்படவுள்ளது.
அத்துடன், இன்ஷாஅல்லாஹ் வெகு விரைவில் நேரலை நிகழ்ச்சிகளும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஹஜ் பருவமாக உள்ளதால், உள்ஹிய்யா தொடர்பான விளக்கங்களடங்கிய உரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
உலகளாவிய முஸ்லிம் பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.
இவ்வாறு, மஹ்ழரா அரபிக்கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
பேராசிரியர் M.I.புகாரீ
புரூனே தாருஸ்ஸலாம். |