உலகம் முழுவதும் போராட்டம் வெடிப்பதற்குக் காரணமாக அமைந்த, முஸ்லிம்களுக்கு எதிரான Innocence of Muslims என்ற திரைப்படம் தயாரித்த நகூலா என்பவரை அமெரிக்க போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. எனினும், முஸ்லிம்களுக்கு எதிரான திரைப்படம் தயாரித்தது தொடர்பாக அவர் கைது செய்யப்படவில்லை.
வங்கி மோசடி வழக்கு ஒன்றில் தொடர்புடைய நகூலா பஸ்ùஸலே நகூலா என்பவரை கலிஃபோர்னியா போலீசார் வியாழக்கிழமை கைது செய்து லாஸ் ஏஞ்சலீஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வங்கி மோசடி வழக்கில் பரோலில் உள்ள நகூலா, அதற்கான விதிமுறைகளை மீறி உள்ளதாக அட்டர்னி ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து, நகூலாவை சிறையில் அடைக்குமாறு நீதிபதி சுஜன்னே செகல் உத்தரவிட்டார்.
அமெரிக்காவில் பல்வேறு பெயர்களில் போலியான அடையாள அட்டைகளை தயாரித்து, அதன் பெயரில் கிரெடிட் கார்டுகளை வாங்கி லட்சக் கணக்கான டாலர்களை மோசடி செய்ததாக நகூலா கடந்த 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். எகிப்தைச் சேர்ந்த இவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பரோலில் நகூலா விடுவிக்கப்பட்டுள்ளார். அப்போது, கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் ஆகியவற்றை 5 ஆண்டுகளுக்கு நீதிமன்ற அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் வெவ்வேறு பெயரில் சுற்றித் திரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில்தான் இம்மாத தொடக்கத்தில் முகமது நபியை தவறாக சித்திரிக்கும் திரைப்படம் ஒன்றின் "முன்னோட்டம்" இன்டர்நெட்டில் வெளியானது. இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் முன்பு முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உலக நாடுகளுக்கும் போராட்டம் பரவியதுடன், வன்முறையாக மாறியதில் பலர் உயிரிழந்தனர்.
இந்தத் திரைப்படத்தை சாம் பசிலி என்பவர் இயக்கியதாகக் கூறப்பட்டது. நகூலாதான் பசிலி என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிரான திரைப்படத்தைத் தயாரித்ததாகவும், அவர் வங்கி மோசடி வழக்கின் விதிமுறைகளை மீறி முஸ்லிம்களுக்கு எதிரான திரைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது.
தகவல்:
தினமணி |