சிங்கப்பூரில் 26.10.2012 வெள்ளிக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாளை முன்னிட்டு, வழமை போல சிங்கப்பூர் காயல் நல மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் காயலர் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மஃரிப் தொழுகைக்கான நேரம் நெருங்குகையில் காயலர்கள் சிற்சிலராக தம் குடும்பத்தினருடன் நிகழ்விடம் வந்தடைந்தனர். துவக்கமாக, மஃரிப் தொழுகை கூட்டாக நிறைவேற்றப்பட்டது.
கால இடைவெளிக்குப் பின் சந்தித்துக்கொண்ட காயலர்கள் ஒருவருக்கொருவர், கட்டித் தழுவி - கைலாகு செய்து, மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
பின்னர், துவங்கிய சாதாரண கூட்டத்தை, ஹாஃபிழ் எஸ்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் மஸ்ஜித் அப்துல் கஃபூர் பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் உமர் ரிழ்வானுல்லாஹ் ஃபாழில் ஜமாலீ சிறப்புரையாற்றினார்.
ஒற்றுமையைின் அவசியம், இதுபோன்ற பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வுகளால் கிடைக்கப்பெறும் நற்பலன்கள் குறித்து திருமறை குர்ஆன் - நபிகளாரின் பொன்மொழிகளிலிருந்து சான்றுகளுடன் விளக்கிப் பேசிய அவர், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உறுப்பினர்கள் - கொள்கை மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, நகர்நலன் என்ற ஒரே குறிக்கோளில் ஒன்றுபட்டு செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
பரபரப்பு மிகுந்த சிங்கை நாட்டில் - பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையிலும் - ஒவ்வொரு பெருநாளையொட்டியும் இதுபோன்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் ஏற்பாடு செய்யும் - மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களுக்கு மனதார நன்றி தெரிவிப்பதாக அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.
அடுத்து உரையாற்றிய சிறப்பு விருந்தினர் ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத், சஊதி அரபிய்யா - ஜித்தாவில் தாம் பணியாற்றிய காலத்தி்ல் - அங்குள்ள காயல் ஹவுஸில் இதுபோன்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்திய நிகழ்வுகளை தனதுரையில் நினைவுகூர்ந்ததுடன், சிங்கப்பூரில் நடக்கும் இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பங்கேற்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், இதற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
ஒன்றுகூடல் நிகழ்ச்சியையொட்டி - வழமை போல அனைவருக்கும் வெற்றுரை (Blank envelope) வழங்கப்பட்டது. அதில் மன்ற உறுப்பினர்கள் தாராள மனதுடன் அளித்த நன்கொடையால் இந்திய ரூபாய் ஒரு லட்சம் சேகரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கொழும்புவில் வசிக்கும் ஹாஜி இஸ்மத் ஷாஜஹான், சென்னையில் வசிக்கும் ஹாஜி பாளையம் ஹபீப் முஹம்மத், மலேஷியாவில் வசிக்கும் ஷாஹுல் ஹமீத், வியட்நாமில் வசிக்கும் ஹாஜி அப்துர்ரஹ்மான் ஆகிய காயலர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அதுபோல, சிங்கப்பூர் மஸ்ஜித் பெங்கூலன், மஸ்ஜித் ஹாஜ்ஜா ஃபாத்திமா ஆகிய பள்ளிவாசல்களின் இமாம்கள் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் - பல்வேறு உணவுப் பதார்த்தங்களை உள்ளடக்கி - பஃபே முறையில் பெருநாள் இரவுணவு பரிமாறப்பட்டது. அனைவரும் இணைந்தமர்ந்து விருந்துண்டனர்.
இந்த ஒன்றுகூடலில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக அனைவரும் மன்ற ஆலோசகருக்கு நன்றி தெரிவித்ததுடன் - அவரது நீடித்த ஆயுளுக்கும், நிறைவான வளத்திற்கும் பிரார்த்தித்தவாறு விடைபெற்றுச் சென்றனர்.
தகவல்:
மொகுதூம் முஹம்மத்
செயலாளர், சிங்கை காயல் நல மன்றம்
படங்கள்:
முஷ்தாக்
[செய்தியில் கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 10:33 / 01.11.2012] |