பெண்களிடம் பாலியல் வன்கொடுமையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காயல்பட்டினத்தில் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மின்வெட்டிருந்ததால் அரிக்கேன் லைட் வெளிச்சத்தில் காயல்பட்டினம் பேரூந்து நிலையத்தின் முன்பாக நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாதர் சங்க தலைவி டி.கலைச்செல்வி தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார்.
தான் மாதர் சங்க நிர்வாகி என்பதால் காயல்பட்டினம் நகராட்சியின் பெண் தலைவருக்கு எதிரான சதிச்செயல்களையும் இனங்காட்ட கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், நகராட்சிக்கு நல்ல - நேர்மையான தலைமை கிடைத்தும், உறுப்பினர்கள் பலரின் ஒத்துழைப்பின்மையால் நிர்வாகம் சீர்கெட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நகராட்சிக்குச் சொந்தமான ஆவணம் இல்லாத வாகனத்தைப் பழுது நீக்கி பயன்படுத்துவதற்கு நிறைவேற்றப்பட்ட நகர்மன்றத் தீர்மானத்திற்காக தலைவியை தொடர்ந்து குற்றஞ்சாட்டும் உறுப்பினர்கள், கடந்த 20 ஆண்டுகளாக இதே வாகனம் இயக்கப்பட்டபோது என்ன செய்தார்கள் என்று கேள்வியெழுப்பினார். கடந்த நகர்மன்றத்தில் இருந்த உறுப்பினர்கள் சிலரும் இந்த நகர்மன்றத்திலும் உறுப்பினர்களாக இருந்துகொண்டு - அன்று சொல்லாத குற்றச்சாட்டை இன்று சொல்வது உள்நோக்கம் கொண்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளருமான திருத்துவராஜ் உரையாற்றினார்.
காயல்பட்டினத்திற்கு தற்போது 21 லட்சம் லிட்டர் தண்ணீர் - ஆத்தூரிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் அனுப்பப்படுவதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலும், 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதால், ஒருவேளை அருகிலுள்ள தொழிற்சாலைக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகர்மன்றத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்து பேசிய அவர், நகர்மன்றத் தலைவர் மிகவும் நேர்மையாகவும், களத்தில் இறங்கி முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துவிட்டு, இப்படிப்பட்ட நேர்மையான தலைவருக்கு எதிராக உறுப்பினர்கள் களமிறங்குவது வேதனைக்குரியது என்றார்.
தலைவர் - உறுப்பினர்கள் பிரச்சினையால், நகராட்சி அதிகாரிகள் தங்கள் சட்டைப்பைகளை நிரப்பிக்கொள்வர் என்று தெரிவித்த அவர், இவர்களின் கருத்து வேறுபாடுகளால் ஊர் நலன் பாதிக்கப்படுவதாகவும், அதிகாரிகள் அதனால் தவறான முறையில் பயனடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகராட்சியில் அதிகாரப்பூர்வமாக 8,000க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளது ஒருபுறமிருக்க, திருட்டுத் தனமாகவும் சுமார் 8000 குடிநீர் இணைப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தெருவிளக்கு பராமரிப்பைப் பொருத்த வரை இந்த நகராட்சி நிர்வாகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகத் தெரிவித்த அவர், தான் சார்ந்துள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் - தனது பகுதியான அருணாச்சலபுரம், அதனையடுத்த கொம்புத்துறை (கடையக்குடி) பகுதிகளில் எட்டிக்கூட பார்ப்பதில்லையென்றும், இதுவே கடந்த நகர்மன்றத்தின்போது இதே வார்டில் தான் உறுப்பினராக இருக்கையில், தெரு வேறுபாடுகளின்றி - வார்டின் அனைத்து தெருக்களுக்கும் சென்று இயன்றளவு குறைகளைத் தீர்த்துக் கொடுத்ததாகத் தெரிவித்தார்.
ப்ளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக மாவட்ட ஆட்சியரகம், காயல்பட்டினம் நகராட்சி உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் தொடர்ந்து மக்களுக்கு அறிவுரை வழங்கி வரும் நிலையிலும், இன்றளவும் யாராவது கையில் துணிப்பையுடன் கடைகளுக்குச் சென்றதுண்டா என்று கேள்வியெழுப்பினார். நகராட்சியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே தன் கண் முன் கடையில் வாங்கிய பொருளை ப்ளாஸ்டிக் கேரி பையில் போட்டுக் கேட்டது வேதனையானது என்று தெரிவித்தார்.
மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ஊதியம் வாங்குவோர் கூட ஊர் சுற்ற நேரமின்றி இருக்கையில், வெறும் 2000 ரூபாய் அளவில் ஊதியம் பெறும் நகராட்சியின் ஊழியர் தினமும் மோட்டார் பைக்கில் கவலையின்றி ஊர் சுற்றுவதைப் பார்க்கும்போது தனக்கு மிகவும் வியப்பளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனிடமிருந்து, நகரில் தெருவிளக்கு பொருத்துவதற்காக பெறப்பட்ட சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியைக் கொண்டு எத்தனை தெருவிளக்கு வாங்கினார்கள்... அவற்றில் எத்தனை விளக்குகளைப் பொருத்தினார்கள்... அதற்கான கணக்கு வழக்குகள் என்னென்ன என்பன போன்ற - மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டிய அனைத்து விபரங்களும் மூடி மறைக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
நேர்மை - நாணயம் - ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் ஆகிய குறிக்கோள்களுடன் செயல்பட்டு வரும் நகர்மன்றத் தலைவிக்கு தமது கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்த அவர், தலைவியும் அனைத்து விஷயங்களிலுமே கறாராக இருக்காமல் - அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொண்டு நிர்வாகத்தை சீராக்க முயற்சிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், காயல்பட்டினம் மின்வாரிய அலுவலகத்திலுள்ள துணைப்பொறியாளரின் நிர்வாகக் குறைபாடுகள் குறித்தும் பேசினார். மின்வாரியத்தில் கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்களை உடனுக்குடன் கையெழுத்திட்டு நடவடிக்கையெடுக்கும் விஷயத்தில் அவர் மந்தப் போக்கில் செயல்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு அனுதினமும் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
திருச்செந்தூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் எஸ்.பன்னீர் செல்வம், மாவட்ட குழு உறுப்பினர் செ.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் லட்சுமி புரம் கிளை செயலாளர் டி.ஜான் ஸ்டான்லி, ஆறுமுகனேரி நகர கிளை செயலாளர் ஜெயபாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் பி.கே.கல்யாணசுந்தரம், ச.கண்ணன், ஏ.துரைராஜ், சிவதாணுதாஸ், ஓ.எம்.எஸ். ஆண்டி, காந்தி நகர் கிளை செயலாளர் சி.ராமலட்சுமி, நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
|