காயல்பட்டினம் சுலைமான் நகர் என்றழைக்கப்படும் மாட்டுக்குளம் மற்றும் அதனையொட்டியுள்ள சல்லித்திரடு பகுதிகளில், அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக, மழை நீர் தேங்கி, குடிசைப் பகுதிகளைச் சூழ்ந்துள்ளது.
தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றுவது குறித்து 26.10.2012 அன்று காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார் தலைமையில், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அப்பகுதியிலுள்ள தமக்குச் சொந்தமான நிலப்பரப்பின் மீது எதுவும் செய்யக்கூடாது என தனியார் நில உடமையாளர்கள் சிலர் தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனால், அங்கு நிவாரணப் பணிகண் எதுவும் செய்யப்படவில்லை.
28.10.2012 அன்று, அப்பகுதி மக்களின் முறையீட்டைத் தொடர்ந்து காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தனியார் உடமையாளர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தம் நிலங்களின் மீது தற்காலிகமாக நிவாரணப் பணிகள் மேற்கொள்ள இசைவு தெரிவிப்பதாகத் தெரிவித்தனர்.
அதனையடுத்து, நகர்மன்றத் தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் அஷோக் குமார் ஆகியோருடன் அன்று மாலை 05.30 மணியளவில் அப்பகுதிக்கு வந்து, பொதுமக்களிடம் நேரடியாகப் பேசி, சாத்திமான வழிகளில் தேங்கிய மழை நீரை அகற்றிட ஆவன செய்யப்படும் என்று கூறிச் சென்றனர்.
தினமும் நீர்த்தேக்கத்திற்குள் அல்லல் படும் நிலையில் உடனடி தீர்வு கிடைக்காததாகக் கூறி, 01.11.2012 அன்று காலை 10.30 மணியளவில், சுலைமான் நகர் பகுதி மக்கள் காயல்பட்டினம் நகராட்சி நுழைவாயிலின் முன் திரண்டமர்ந்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தம் பகுதியில் தேங்கிய மழை நீரை வெட்டிவிடும் வரை அவ்விடத்தை விட்டும் அகலப்போவதில்லை என்று அவர்கள் அப்போது தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, அன்று மதியம் 03.00 மணியளவில், திருச்செந்தூர் வட்டாட்சியர் சங்கரநாராயணன், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சி ஆணையர் அஷோக் குமார், குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார், காயல்பட்டினம் வடபாகம் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல், நில அளவீட்டாளர் செந்தில் ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்து வந்து, பொதுமக்களுடன் பேசினர்.
அப்பகுதி மக்களின் முரண்பட்ட கருத்துக்களை ஒருமுகப்படுத்தி, நடவடிக்கை மேற்கொள்ள அவர்கள் கடும் முயற்சி செய்தனர்.
நிறைவில், மோட்டார் பம்ப் செட் மூலம் - தேங்கிய மழை நீரை தற்காலிகமாக அகற்றிட முடிவு செய்து, சில நிமிடங்களில் பணி துவக்கப்பட்டது. நகர்மன்ற அவசரக் கூட்டத்தை அன்றே கூட்டி நிரந்தரத் தீர்வு காண்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் நகர்மன்றத் தலைவர் அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். அதனையடுத்து, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ.லுக்மான், எம்.ஜஹாங்கீர், எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ரெங்கநாதன் என்ற சுகு, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் உள்ளிட்டோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
படங்களில் உதவி:
M.ஜஹாங்கீர் |