காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில் - மழைநீர்த் தேக்கம் வழிந்தோடுவதற்காக, பேருந்து நிலையம் முதல் பெரிய நெசவுத் தெரு வரை கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால், சரியாகப் பராமரிக்கப்படாததால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும், தம் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் அப்பகுதியில் கடை வைத்திருப்போர் - நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
அவ்வப்போது மழை நீர் வடிகாலில் தேங்கும் குப்பைகளை அகற்றும் நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள் - அப்படியே வடிகாலின் மேற்பரப்பில் அவற்றைப் போட்டுவிட்டுச் சென்றுவிடுவதாகவும், விரைவில் அவற்றை அப்புறப்படுத்துவதாகத் தெரிவித்துச் செல்லும் அவர்கள் அதன்பிறகு அப்பக்கமே வருவதில்லை என்றும் தெரிவித்துள்ள அவர்கள், குப்பைகள் வடிகாலுக்குள் இருக்கும் வரையிலாவது அதன் நாற்றம் தம்மை அவ்வளவாகப் பாதிப்பதில்லை என்றும், துப்புரவுப் பணியாளர்கள் அவற்றைத் தோண்டியெடுத்த பின்னர் - அவற்றை அகற்றாமல் அவ்விடத்திலேயே விட்டுச் செல்வதால் ஏற்படும் நாற்றம் காரணமாக அப்பகுதியில் வணிகம் செய்யவே இயலாத சூழல் ஏற்பட்டு்ள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், மணல் - கற்களை நிரப்பி வடிகால் ஆங்காங்கே அடைக்கப்பட்டுள்ளது. குறைகள் சரிசெய்யப்படாத காரணத்தால் அப்பகுதியிலுள்ள கடை உரிமையாளர்கள் சிலர் தத்தம் கடைகளுக்கு முன்புள்ள வடிகாலுக்குள் அவ்வாறு மணல் - கற்களை நிரப்பி அடைத்துவிட்டதாகவும், நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள் அவற்றை அகற்ற முனைந்தபோது எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 05.10.2012 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்ற அவசரக் கூட்டத்தில், பெரும்பாலும் அழிந்துபோன இந்த மழைநீர் வடிகாலை மீண்டும் புதுப்பித்துக் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, 30.10.2012 செவ்வாய்க்கிழமையன்று காலை 10.00 மணியளவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சி ஆணையர் அஷோக் குமார். சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், அப்பகுதியை உள்ளடக்கிய 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், துப்புரவுப்பணி மேற்பார்வையாளர் லக்ஷ்மி உள்ளிட்டோர் கூலக்கடை பஜாருக்கு வந்து, ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகாலைப் பார்வையிட்டு, அப்பகுதியில் கடை வைத்திருப்போரிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
பின்னர், அவர்களிடம் பேசிய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அப்பகுதியில் மழைநீர் வடிகால் புதிதாகக் கட்டப்படவுள்ளதாகவும், அதுவரை - தற்போதுள்ள வடிகாலில் பராமரிப்புப் பணிகளுக்காக வரும் நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
தோண்டும் குப்பைகளையும் - சாக்கடைக் கழிவுகளையும் உடனுக்குடன் அப்புறப்படுத்தினால், அவர்களுக்கு ஒத்துழைப்பதில் தமக்கு எந்த ஆட்சேபனையுமில்லை என்று அப்போது அவர்கள் தெரிவித்தனர். அவ்வாறு மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பளிப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், பொதுநல ஆர்வலர்களும் தெரிவித்தனர்.
குறிப்பிடப்படும் குறைகள் எதுவுமின்றி வடிகாலை முறையாகப் பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
|