இக்ராஃவால் இதுவரை வழங்கப்பட்டு்ளள கல்வி உதவித்தொகை - ரூ.51 லட்சத்தை எட்டியுள்ளதாக, இக்ராஃ செயற்குழுக் கூட்டத்தில் - அதன் நிர்வாகி தெரிவித்துள்ளார். கூட்ட நிகழ்வுகள் குறித்து அதன் செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் நமது இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், 31.10.2012 புதன் கிழமை மாலை 07:15 மணியளவில், காயல்பட்டினம் - கதவு எண் 133/27. கே.டி.எம். தெரு என்ற முகவரியில் புதிதாக அமைந்துள்ள இக்ராஃவின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்ராஃ துணைத்தலைவரும், சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவருமான ஹாஜி டாக்டர் ஏ .முஹம்மது இத்ரீஸ் கூட்டத்திற்குத்தலைமைதாங்கினார். தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.அஹமது ரஃபீக்,ஹாஜி எம்.ஏ எஸ்.ஜரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கத்தர் காயல் நல மன்ற துணைத்தலைவர் எம்.என்.முஹம்மது யூனுஸ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த செயற்குழுக் கூட்டம் முதல் நடப்பு கூட்டம் வரையிலான இக்ராஃவின் செயல்பாடுகள் குறித்தும், வருங்காலத் திட்டங்கள் குறித்தும் இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது கூட்டத்தில் விளக்கிப் பேசினார். அவரது உரையில் இடம்பெற்ற தகவல்கள் பின்வருமாறு:-
கல்வி உதவித்தொகை:
*** இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் - சென்ற செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகும் கல்வி ஆர்வலர்கள் பலரிடமிருந்து அனுசரணைத் தொகை பெறப்பட்டுள்ளது. இதில் இருபது அனுசரணையாளர்கள் வரை இக்ராஃ தலைவரும், தாய்லாந்து காயல் நல மன்றத்தின் தலைவருமான ஹாஜி வாவு ஷம்சுத்தீன் அவர்கள் மூலமாக கிடைக்கப் பெற்றுள்ளது. (இதில் காயல்பட்டணம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் மூலமாக ஏழு அனுசரணையும், இலங்கை காயல் நலமான்றத்தின் ஒரு அனுசரணையும் அடங்கும்).
*** இவ்வாண்டு, இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தோருள், 21 மாணவர்கள், 34 மாணவியர் என மொத்தம் 55 மாணவ-மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாணவியர் 34 பேரில் 31 மாணவியர் காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியிலும், ஏனைய 3 பேர் இதர கல்லூரிகளிலும் பயின்று வருகின்றனர்.
*** கல்வி உதவித்தொகைக்காக நடப்பாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 55 மாணவ-மாணவியரும், B.Com., B.B.A., B.C.A., B.Sc. (Computer Science), Dip. in EEE, A/c Mechanic, Automobile, Dip. in Mechanical / Marine, B.Sc. (Physics), B.Sc. (Home Science - with Nutrition), Dip. in Computer Engg, B.A. (English), B.Sc.. (Maths), B.Sc. (IT) ஆகிய படிப்புகளில் இணைந்துள்ளனர்.
*** கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ-மாணவியருக்கு நடப்பாண்டிலிருந்து தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூபாய் ஐந்தாயிரம் வீதம் மொத்தம் 15,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும்.
ஜகாத் நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை:
இக்ராஃவின் ஜகாத் நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக, 2012-13ஆம் ஆண்டிற்கு நிதி சேகரிக்கப்பட்டது.
*** மொத்தம் 42 பேரிடமிருந்து ரூ.4,36,400 தொகை ஜகாத் நிதியாக நடப்பாண்டில் சேகரிக்கப்பட்டுள்ளது.
*** ஜகாத் நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் 21.09.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை இக்ராஃவின் புதிய அலுவலகத்தில் நடைபெற்றது.
*** இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி எஸ்.ஹெச் .ஷேக் அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் ஆகியோர் மாணவ-மாணவியரை நேர்காணல் செய்தனர். இக்ராஃ நிர்வாகக் குழுவினர் உடனிருந்தனர்.
*** ஜகாத் நிதியின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ-மாணவியரின் மொத்த எண்ணிக்கை 39. அவர்களுள் மாணவர்கள் 31 பேர்; மாணவியர் 08 பேர்.
*** B.E. (Mechanical), B.E. (ECE), B.E. (EEE), B.Tech. (IT), B.E. (Civil), B.E. (Computer Science), Dip. in EEE, Dip in Civil, Dip. in Mechanical, M.Sc. (Maths), MCA, B.Com. (CA), B.C.A., ITI (Fitter) ஆகிய படிப்புகளில் இணைந்துள்ள மாணவர்களுக்கும்,
B.Ed., ECE, B.B.A., M.Com., B.Sc.(Nursing), Dip. in Child Education, Dip. in Computer Application ஆகிய படிப்புகளில் இணைந்துள்ள மாணவியருக்கும் ஜகாத் நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
*** கல்வி உதவித்தொகையாக, ரூ.20,000/- 15,000/- 12,000/- 11,000/- 10,000/- 9,400/- 8,000/- 6,000/- 5,000/- என்ற அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
*** தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி ரூ.4,36,400/- (இவ்வாண்டு ஜகாத் நிதியாக சேகரிக்கப்பட்ட தொகை அனைத்தும் வழங்கி முடிக்கப்பட்டது.)
*** அதிக மதிப்பெண்கள் பெற்ற (மெரிட்) மாணவர்கள், திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ள ஹாஃபிழ் மாணவர்கள், பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம் - பிலால்களின் மக்கள் ஆகியோருக்கு இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றிட முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
ஜகாத் நிதியைப் பொருத்த வரை, மாணவியரை விட மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இவ்வாண்டும் அவ்வாறே செய்யப்பட்டது. படிப்பை முடித்த பின் நிச்சயம் வருமானமீட்டுவர் என்று நம்பப்படும் மாணவ-மாணவியர் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
(ஜகாத் நிதி உட்பட) நடப்பு கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட விபரங்கள்:
*** கல்வி உதவித்தொகை பெற்றுள்ள மொத்த மாணவ-மாணவியர் எண்ணிக்கை 94
*** அதில் மாணவர்கள் 52; மாணவியர் 42 பேர்.
*** (ஜகாத் நிதி உட்பட) நடப்பு கல்வியாண்டில் வழங்கப்பட்டுள்ள மொத்த கல்வி உதவித்தொகை ரூ.12,41,400/-
*** (ஜகாத் நிதி உட்பட) நடப்பு கல்வியாண்டில் வழங்கப்பட்டுள்ள கல்வி உதவித்தொகை மூலம் பயன்பெற்ற மொத்த மாணவ-மாணவியர் (மூன்றாமாண்டு, இரண்டாமாண்டு , முதலாமாண்டு) எண்ணிக்கை 200.
*** இக்ராஃ கல்விச் சங்கம் துவங்கப்பட்டது முதல் இதுவரை மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கல்வி உதவித்தொகை சுமார் ரூ. 51 லட்சம்.
*** இது தவிர அரசு மற்றும் தனியார் அமைப்புகள், டிரஸ்ட்டுகள் மூலம் ஏராளமான மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித் தொகைகள் கிடைத்திடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
K.C.G.C. அமைப்பின் நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு:
காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (K.C.G.C.) சார்பாக கடந்த 26.10.2012 வெள்ளிக்கிழமை மாலையில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளியில், ''இவரைப்போல் நீங்களும் சாதிக்கலாமே?" என்ற தலைப்பில், மாணவர் ஊக்குவிப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரரும், அவற்றுக்காக காப்புரிமை பெற்றவருமான - நமதூரைச் சேர்ந்த சாதனையாளர் எம்.முஹம்மது இபுராஹீம் கலந்துகொண்டு தனது சாதனைகளை விளக்கி மாணவர்களை மிகவும் ஊக்குவித்தார்.
இந்த அருமையான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் இக்ராஃ தனது முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது.
ஆயுட்கால உறுப்பினர்கள்:
ஆண்டுக்கு ரூ.300 செலுத்துவோர் சாதாரண உறுப்பினர்கள். இவர்கள் ஆண்டுதோறும் ரூ.300 சந்தா செலுத்த வேண்டும்.
ஒரேயொருமுறை ரூ.15,000 செலுத்துவோர் ஆயுட்கால உறுப்பினர்கள். அவர்கள் அதற்குப் பிறகு சந்தா தொகையாக எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
*** இதுவரை இணைந்துள்ள ஆயுட்கால உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 51.
*** அவர்களுள் இக்ராஃவில் நேரடியாக ஆயுட்கால உறுப்பினரானோர் எண்ணிக்கை 22
*** தாய்லாந்து காயல் நல மன்றம் மூலம் ஆயுட்கால உறுப்பினரானோர் எண்ணிக்கை 29.
இக்ராஃவிற்கு சொந்த இடம் வாங்குவதற்காக, சாதாரண உறுப்பினர்களாக இருக்கும் 150 பேர் வரை ஆயுட்கால உறுப்பினராக்கி, அதன் மூலம் பெறப்படும் ரூ.22.5 லட்சம் தொகையை அவ்வகைக்காக செலவு செய்யலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
(தொடர்ந்து, இக்கூட்டத்தில் ஆயுட்கால உறுப்பினராக தம்மை இணைத்துக்கொள்ள விரும்பினால் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது. அப்போது இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தைச் சேர்ந்த சாளை ஷேக் நவாஸ் ஆகியோர் இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினராவதற்கு விருப்பம் தெரிவித்ததையடுத்து, அவர்களின் பெயர் பதிவு செய்துகொள்ளப்பட்டது.)
*** இக்ராஃவின் - இதுவரை ஒப்புதலளிக்கப்பட்டுள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 377. பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்கள் 7.
புதிய அலுவலக இடமாற்ற விபரங்கள்:
காயல்பட்டினம் கே.டி.எம். தெரு - கதவிலக்கம் 133/27. என்ற முகவரியில் அமைந்துள்ள இக்ராஃவின் நடப்பு (புதிய) அலுவலகம், கல்வி ஆர்வலர் ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் அவர்கள் முயற்சியில் கிடைக்கப்பெற்றுள்ளது.
*** புதிய இடத்திற்கு முன்பணமாக ரூ.10,000 தொகை கொடுக்கப்பட்டுள்ளது.
*** மாத வாடகை ரூ.2,500 ஆகும்.
*** இடமாற்றம் மற்றும் புதிய அலுவலக கட்டமைப்புகளுக்காக ரூ.18,000 செலவழிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, இக்ராஃவின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், பல்வேறு சிரமங்களுக்கிடையில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு சொந்த இடம் வாங்குவதற்காக - இக்ராஃ தலைவரும், தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஹாஜி டாக்டர் ஏ.முஹம்மத் இத்ரீஸ் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், அரசுப் பதிவு செய்யப்பட்டுள்ள இக்ராஃவின் செயல்பாடுகள் எவ்வித சிரமமுமின்றி செயல்படுத்தப்பட சொந்த இடம் வாங்குவதன் அவசியம் - அதனைப் போர்க்கால அடிப்படையில் தேடிப் பெற வேண்டிய விபரங்கள் குறித்த தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
பின்னர், கூட்டத்தில் பங்கேற்ற செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்காக நேரம் அளிக்கப்பட்டது. இக்ராஃ நிர்வாக செயல்பாடுகள், கணக்கு - வழக்குகள் குறித்த சந்தேகங்கள், கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களை கூட்டத்தில் பங்கேற்ற செயற்குழு உறுப்பினர்கள் - சிறப்பழைப்பாளர்கள் கேட்க, இக்ராஃ நிர்வாகிகள் அவற்றுக்கு விளக்கமளித்தனர்.
பின்னர், கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 - புதிய அலுவலகத்திற்கு முயற்சித்தவருக்கு நன்றி:
இக்ராஃ கல்விச் சங்கம் அமைவதற்கு, காயல்பட்டினம் - கே.டி.எம். தெரு - கதவிலக்கம் 133/27. என்ற முகவரியில் அலுவலக இடத்தை அவசரகதியில் முயற்சித்து வாடகைக்குப் பெற்றளித்த ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் அவர்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 02 - அலுவலக இடமாற்ற செலவினங்களுக்கு ஒப்புதல்:
இக்ராஃவின் புதிய அலுவலக இடமாற்றம் - கட்டமைப்புப் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவினமான ரூ.18,000 தொகைக்கு இக்கூட்டம் ஒப்புதலளிக்கிறது.
தீர்மானம் 03 - இக்ராஃ செயல்பாடுகளை விளக்கும் வண்ண மடக்கோலை தயாரித்தல்:
இக்ராஃ கல்விச் சங்கம் ஆற்றி வரும் கல்விச் சேவைகள், வருங்கால செயல்திட்டங்கள் குறித்து அழகுற விளக்கும் வகையில் வண்ண மடக்கோலையை (Colour Pamphlet) ஆண்டுதோறும் ஆயத்தம் செய்து, அதனை நகரின் கல்வி ஆர்வலர்கள் - நகரப் பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கும், இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டங்களின் கீழ் பயன்பெற்றோருக்கும் அனுப்பி வைக்க வேண்டுமென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 04 - சொந்த இடம் பெற்றிட முயற்சி:
இக்ராஃவுக்கு சொந்த இடம் வழங்கியுதவுமாறு கோரி, காயல்பட்டினம் அப்பாபள்ளி, குட்டியாபள்ளி ஜமாஅத்துகளுக்கு முறைப்படி கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்திடவும், இந்நோக்கத்திற்காக தேவைப்படும் சாதகமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 05 - சொந்த இடம் தேட சிறப்புக் குழு:
இக்ராஃவுக்கு, நகரில் தகுதியான இடத்தில் - தகுதியான அளவில் சொந்த இடம் பெற்றிடுவதற்காக,
(1) ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்
(2) ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக்
(3) ஹாஜி ஏ.கே.கலீல்
(4) ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது
(5) கே.ஜே.ஷாஹுல் ஹமீது
(6) ஹாஜி எம்.எம்.ஷாஹுல் ஹமீது
ஆகியோரடங்கிய குழுவை இக்கூட்டம் நியமிக்கிறது. அவர்களின் நடவடிக்கைகள் குறித்து அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க மேற்படி குழுவை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 06 - KCGC அமைப்புக்கு ஒத்துழைப்பு:
கல்விப் பணிகளில் இக்ராஃவின் ஒத்துழைப்பு கோரி, காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் - KCGC அமைப்பிடமிருந்து பெறப்பட்ட கடிதம் பரிசீலிக்கப்பட்டு, இக்ராஃவின் மூலம் இயன்றளவுக்கு அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கலாம் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 07 - கல்வி நிகழ்ச்சிகளை நடத்து முன் இக்ராஃவுடன் கலந்தாலோசனை:
உலக காயல் நல மன்றங்கள் கல்வி நிகழ்ச்சிகளை நகரில் இக்ராஃவுடன் இணைந்து நடத்துவதற்காக நிகழ்ச்சி தேதியை முடிவு செய்தல் உள்ளிட்ட செயல்திட்டங்களை இறுதி செய்யும் முன், இக்ராஃவுடனும் கலந்தாலோசித்துக் கொள்ளுமாறும், அவரவர் செயல்திட்டங்களை செயல்படுத்த அந்தந்த அமைப்புகளின் சார்பில் பொறுப்பாளர்களையும் தந்துதவுமாறும் இக்கூட்டம் அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறது.
தீர்மானம் 08 - பிரத்தியேக கைபேசி எண்:
இக்ராஃவின் நிர்வாகப் பணிகளுக்காக லேண்ட்லைன் தொலைபேசி எண் உள்ளது போல், கைபேசி (மொபைல் ஃபோன்) எண் ஒன்றைப் பெற்றிடுவதென்றும், அதற்கான அவ்வப்போதைய செலவினங்களை இக்ராஃவின் நிர்வாகச் செலவினக் கணக்கிலிருந்து அளித்திடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 09 - பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை:
இக்ராஃவின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கூடிய விரைவில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 10 - மின்னஞ்சல் மூலம் செய்திக் கடிதம்:
இக்ராஃவில் நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் பேசப்படும் முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்களை மின்னஞ்சல் முகவரி வைத்துள்ள இக்ராஃவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவ்வப்போது செய்திக் கடிதமாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் நன்றி கூற, இக்ராஃ செயற்குழு உறுப்பினர் ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் துஆவுடன், கஃப்பாராவுடன் இரவு 09:45 மணியளவில் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
பங்கேற்றோர்:
இக்கூட்டத்தில், மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி எஸ்.ஹெச்.ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை, ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், ஹாஜி ஏ.ஆர்.தாஹா, ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ், ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், எம்.எம்.ஷாஹுல் ஹமீத், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரும்,
ரிதா ஃபவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த ஜெ.செய்யித் ஹஸன் (தம்மாம்), காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்ஙாக் அமைப்பைச் சேர்ந்த எஸ்.ஏ.முஹம்மது நூஹ், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தைச் சேர்ந்த சாளை நவாஸ், ரியாத் காயல் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த ஏ.டி.ஸூஃபீ இப்றாஹீம், கல்வி ஆர்வலர் ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
N.S.E.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்
இக்ராஃ கல்விச் சங்கம்
காயல்பட்டினம் |