காயல்பட்டினம் சுலைமான் நகர் என்றழைக்கப்படும் மாட்டுக்குளம் மற்றும் அதனையொட்டியுள்ள சல்லித்திரடு பகுதிகளில், அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக தேங்கியுள்ள மழை நீரை வழிந்தோடச் செய்வதற்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்து, காயல்பட்டினம் நகர்மன்ற அவசரக் கூட்டம், 02.11.2012 வெள்ளிக்கிழமை மாலை 04.00 மணியளவில் நகராட்சி கூட்டரங்கில் - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெற்றது. கூட்டப் பொருள் பின்வருமாறு:-
இதுகுறித்து கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்ட பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:-
1986-க்கு முன்புள்ள நில உடமை மேம்பாட்டுத் திட்டத்தின் (UDR) புல ஆவணப்படி, மேற்கண்ட பொருள் எண் 1இல் உள்ள பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆலோனைப்படி செயல்பட மன்றம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில், நகர்மன்றத் துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஏ.லுக்மான், வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், ஜெ.அந்தோணி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், ஏ.ஹைரிய்யா, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ரெங்கநாதன் என்ற சுகு, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கியஷீலா, கே.ஜமால், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கூட்டத் துளி...
பார்வையாளர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் வேண்டுகோள்:
இக்கூட்டத்தில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிலரும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட இடத்தின் நில உடமையாளர்கள் சிலரும் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
அவர்களின் இருப்பு, வெளிப்படையான விவாதத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதால், அக்கூட்டத்தில் பார்வையாளர்களாகக் கலந்துகொள்வதைத் தவிர்க்குமாறும், பின்னர் நில உடமையாளர்களை அழைத்து விபரங்களைப் பகிர்ந்துகொள்வதாகவும் நகர்மன்றத் தலைவர் மற்றும் ஆணையர் ஆகியோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, நில உடமையாளர்களும், இதர பார்வையாளர்களும் கூட்டரங்கிலிருந்து வெளியேறினர்.
இதே காரணத்திற்காக, கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்காக அமர்ந்திருந்த செய்தியாளர்களையும் ஒத்துழைக்குமாறு நகராட்சி ஆணையர் அஷோக் குமார், உறுப்பினர் ஏ.லுக்மான் ஆகியோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர்களும், கூட்டரங்கிலிருந்து வெளியேறினர்.
[செய்தி திருத்தப்பட்டுள்ளது @ 12:43 / 05.11.2012] |