காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை - சொளுக்கார் தெரு - முத்துவாப்பா தைக்கா தெரு சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் வாகன விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக, நாற்புறங்களிலும் அப்பகுதி மக்களால் சிமெண்ட் மூலம் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது..
இந்த வேகத்தடைகள் உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால், தமது வாகனங்கள் அவற்றைக் கடந்து செல்கையில் சேதத்திற்குள்ளாவதாகவும், இரவு மின்தடை நேரங்களில் இது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் பொதுமக்கள் பலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், பலமுறை நகராட்சியிடம் முறையிட்டும் இன்றளவும் நகராட்சியால் வேகத்தடை அமைக்கப்படாத நிலையிலேயே தாங்கள் அமைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரிடம் வினவுகையில், நகரெங்கும் இதுபோன்று விபத்து ஏற்படும் பகுதிகளில் வேகத்தடை அமைக்க முந்தைய கூட்டமொன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதாகவும், சொற்பமான செலவுத்தொகையைக் கொண்ட இதுபோன்ற பணிகளை தனிப்பணியாக எடுத்துச் செய்வதற்கு ஒப்பந்தக்காரர்கள் எவரும் முன்வரவில்லை என்றும், அதன் காரணமாக விரைவில் நகரில் புதிய சாலைகள் அமைக்கப்படும்போது இப்பணியையும் சேர்த்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், பொதுமக்களின் அச்சத்தைப் போக்குமளவுக்கு வேகத்தடையின் அளவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கள உதவி:
ஹாஃபிழ் H.A.அப்துல்லாஹ் (மும்பை) |