தேயிலைத் தூளில் கலப்படம் செய்து விற்பனை செய்யும் தேயிலைத் தூள் வணிகர்கள், தேனீர் கடை வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-
டீ தூளில் கலப்படம் செய்தால் 7 ஆண்டு சிறைத்தண்டனை!
ஏழை - எளியவர்கள் முதல் பண வசதி படைத்தோர் வரை அனைவரும் அன்றாடம் பருகும் தேனீர் தயாரிக்க பயன்படும் டீ தூளில் அண்மைக்காலமாக கலப்படங்கள் அதிகரித்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறையினரால் அறியப்பட்டுள்ளது மட்டுமின்றி, இதுகுறித்த புகார்களும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் ஆலோசனை பெறப்பட்டதன் பேரில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மருத்துவர் எம்.ஜெகதீஷ் சந்திரபோஸ் தெரிவித்துள்ளதாவது:-
அன்றாம் மிகுதியாகப் பயன்படுத்தப்படும் தேயிலையில் லாப நோக்கம் கருதி கலப்படம் செய்வது அதிகரித்து வருகிறது.
பயன்படுத்தப்பட்ட தேயிலைத்தூள், மட்டரகமான தேயிலை ஆகியவற்றுடன் முந்திரி தோல், புளியங்கொட்டை ஆகியவற்றின் தூளை கலப்படம் செய்து, செயற்கையான வாசனைப் பொருட்களும், அபாயகரமான கரி தாரின் சாயத்தையும் கலந்து, போலி தேயிலைத்தூள் தயாரிக்கப்படுகிறது.
இவ்வகையான போலி தேயிலைத்தூளை குளிர்ந்த நீரில் கலந்தவுடன் மிகுதியான ஆரஞ்சு கலந்த சிவப்பு வண்ணத்தை உமிழ்வதிலிருந்து அதிலுள்ள கலப்படத்தை அறியலாம்.
இந்தப் போலி தேயிலையிலிருந்து தயாரிக்கப்படும் தேனீரை அருந்துவதால், குடல் - கல்லீரல் ஆகியன பாதிப்படையும். குடல் புண் (அல்சர்) தோன்றும். நாளடைவில் அபாயகரமான புற்றுநோயையும் உருவாக்கும்.
இந்தியாவின் தேசிய பானமாகத் திகழும் தேனீரில் இவ்வளவு அபாயத்தை உருவாக்கும் கலப்படத்தால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவது வேதனையானதும், தவிர்க்கப்பட வேண்டியதுமாகும்.
ஆகையால், உணவு பாதுகாப்புத் துறையினரால் மாவட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வுகளில், கலப்படமானது என சந்தேகிக்கப்பட்ட போலி தேயிலையின் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு எடுத்தனுப்பப்பட்டுள்ளது.
தேயிலையில் எவ்வித சாயப்பொருளும் கலக்க அனுமதியில்லாத நிலையில், பகுப்பாய்வு அறிக்கையில் டீ தூளில் சாயப்பொருட்கள் கலக்கப்பட்டிருப்பது நிரூபணமானால், கலப்படம் செய்த குற்றவாளிக்கு ரூ.10 லட்சம் வரை அபராதமும், ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் உறுதியாக வழங்கப்படும்.
ஆகையால், தேயிலை மற்றும் தேனீர் வணிகர்கள் தரமான மற்றும் பாதுகாப்பான விற்பனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும், இது தொடர்பான புகார்களை பொதுமக்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இயங்கி வரும் உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் அவர்களின் அலுவலகத்தில் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவரது தொலைபேசி எண்: +91 461 2340699.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[செய்தி திருத்தப்பட்டுள்ளது @ 21:32 / 06.11.2012] |