காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டம், 22.10.2012 திங்கட்கிழமை காலை 12.00 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெற்றது.
இதற்கு முந்தைய 3 கூட்டங்கள் உறுப்பினர்களின் வெளிநடப்பின் காரணமாக நடைபெறாத காரணத்தால், அப்போதைய கூட்டப்பொருட்களையும் இணைத்து, இக்கூட்டத்தில் மொத்தம் 50 கூட்டப்பொருட்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டப்பொருட்களும், அதுகுறித்து நடைபெற்ற விவாதங்களும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் பின்வருமாறு:-
நகர்மன்றத் தலைவர் தற்போது இருக்கும் அறையை ஆணையருக்கு வழங்கலாம் என்றும், தலைவருக்கு தனியறையை விரைவில் ஏற்பாடு செய்யலாம் என்றும், அதுவரை நகர்மன்றத் தலைவர் தற்போதுள்ள அறையிலேயே தன் பணிகளைக் கவனிக்க வழிவகை செய்யப்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
பணியை நிறைவேற்ற மன்றம் அனுமதி வழங்கி, டெண்டர் விடப்பட்ட பிறகும் பணி செய்யப்படாததற்கான காரணம் வினவப்பட்டது. அதுகுறித்து பதிலளித்த நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார், கூலி கட்டுப்படியாகாத காரணத்தால் ஒப்பந்தக்காரர்கள் இப்பணியை செய்யத் தயங்குவதாகத் தெரிவித்தார்.
எடுத்த பணியை முடிக்காமல் நொண்டிச் சாக்கு சொல்லும் ஒப்பந்தக்காரர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என நகர்மன்ற துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் தெரிவித்தார்.
வால்வு தொட்டிகள் சரிசெய்யும் பணியைப் போல, அவையனைத்திற்கும் மூடி போடுவது அவசியம் என்பதையும் கவனத்திற்கொள்ளுமாறு 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.
குறிப்பிடத்தக்க அளவில் விவாதம் எதுவுமில்லை.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நகர்மன்றத் தலைவர், தற்போது நகரிலிருக்கும் தெருவிளக்குகளின் பயன்பாட்டுக் கணக்கை விட அதிகளவில் மின் கட்டணத்தொகை உள்ளதாக அறிவதாகத் தெரிவித்தார்.
தெரு விளக்கு பராமரிப்பை தனியாருக்கு அளிக்கும் திட்டம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், ஒரு நாளுக்கு இத்தனை விளக்குகளை மட்டும்தான் பார்ப்பேன் என்பன போன்ற எந்த நிபந்தனையுமின்றி தனியார் ஒப்புக்கொண்டால், பணியை அவர்களிடம் வழங்குவதில் தவறில்லை என்றார்.
குறிப்பிடத்தக்க அளவில் விவாதம் எதுவுமில்லை.
நகராட்சியின் தற்காலிகப் பணியாளர்கள் பலரின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடமிருந்து வருவதாகவும், அவர்களின் வருகைப் பதிவு, பணி செய்த விபரம் உள்ளிட்ட தகவல்களை பதவியேற்ற காலம் தொட்டு ஆணையரிடம் தொடர்ந்து கேட்டு வருவதாகவும், ஆனால் இதுவரை ஆணையர் தகவல் தரவில்லை என்றும் தெரிவித்தார்.
வரும் 31.12.2012 வரை தற்காலிகப் பணியாளர்களின் ஒப்பந்தத்தை நீட்டிக்கலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பிடத்தக்க அளவில் விவாதம் எதுவுமில்லை.
குறிப்பிடத்தக்க அளவில் விவாதம் எதுவுமில்லை.
நகர்மன்றக் கூட்டங்களை ஏன் வீடியோ பதிவு செய்யக்கூடாது என்று பெண் உறுப்பினர்கள் முதலில் கருத்து தெரிவிக்குமாறு 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி தெரிவித்தார். ஆனால் பெண் உறுப்பினர்கள் யாரும் இதுகுறித்து கருத்து தெரிவிக்காத நிலையில் வேறு திசையில் விவாதம் சென்றது.
பெரும்பாலான உறுப்பினர்கள் அதை அப்போது எதிர்த்த நிலையிலும், நகர்மன்றத் தலைவர் தன்னிச்சையாக அத்தீர்மானத்தை நிறைவேற்றிக்கொண்டார் என்று 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு தெரிவித்தார்.
பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஓரம்சத்தை தீர்மானமாகக் கொண்டுவருவதற்கு தனக்கு எந்த அவசியமும் இல்லை என்றும், ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே பழைய கூட்டத்தில் இதுகுறித்து பேசியதாகவும், மற்றவர்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் அப்போது நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
குறிப்பிடத்தக்க அளவில் விவாதம் எதுவுமில்லை.
குறிப்பிடத்தக்க அளவில் விவாதம் எதுவுமில்லை.
நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் தண்ணீர் வினியோகிக்கும் நிரந்தர கால அட்டவணையை குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் அளித்தால், மின்வாரிய அதிகாரிகளிடம் முயற்சித்துப் பார்க்கலாம் என்று நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
நகருக்கு ஆத்தூரிலிருந்து அனுப்பப்படும் தண்ணீர் அதே அளவில் கிடைக்கிறதா என்பதைக் கணக்கிடும் மீட்டரை முதலில் பொருத்திவிட்டு அடுத்த நடவடிக்கைகளில் இறங்குவதே சரியானது என்று 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.
அதற்கான ஆய்வுகள் நடைபெற்றுள்ளதாகவும், விரைவில் மீட்டர் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
ஆத்தூரிலிருந்து காயல்பட்டினத்தின் நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படும் பம்பிங் லைனிலிருந்து இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும், நகரில் மின்மோட்டார் கொண்டு தண்ணீர் உறிஞ்சப்படுவதும் தண்ணீர் குறைவுக்குக் காரணமாக இருக்கக் கூடும் என்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக நகர்மன்றத் தலைவர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அதுகுறித்து கருத்து தெரிவித்த 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சொல்வதையெல்லாம் அப்படியே நம்பத் தேவையில்லை என்றார்.
பின்னர் பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், நகருக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் அதே அளவில் பெறப்படுவதை உறுதி செய்யாத நிலையில் - குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நகராட்சி செலுத்த வேண்டிய 40 லட்சம் நிலுவைத் தொகையை அளித்ததேன் என்றும், ஒருவை மீட்டர் பொருத்தப்பட்ட பின்னர் தண்ணீர் பெறப்படும் அளவு குறைந்திருந்தால், இழப்பிற்கான தொகையை திரும்பப் பெற இயலுமா என்றும் கேள்வியெழுப்பினார்.
அதுகுறித்து கருத்து தெரிவித்த குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார், 2ஆவது பைப்லைன் திட்டம் செயலாக்கப்படவுள்ள நிலையில் நிலுவைத்தொகை எதுவும் இருக்கக்கூடாது என்று பெறப்பட்ட அறிவுறுத்தலின் பேரிலேயே நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும். ஒருவேளை - பெறப்படும் தண்ணீர் குறைந்தளவில் இருந்தால், இழப்புத் தொகையை திரும்பக் கேட்டுப் பெறலாம் என்றும் தெரிவித்தார். அதனையடுத்து பேசிய உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், அது நடந்தால் வியப்புதான் என்று தெரிவித்தார்.
நகராட்சியால் வினியோகிக்கப்படும் குடிநீரை முறைகேடாக எடுப்போர் குற்றம் செய்பவர்கள்.. அவர்களைத் தண்டிக்க சட்டத்தில் இடமுண்டு. அதை தீர்மானமாகக் கொண்டு வந்துதான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை என கூட்டத்தில் பல உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
குறைந்த விலைப்புள்ளியாக எவ்வளவு தொகை கோரப்பட்டுள்ளது என 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கேள்வியெழுப்பினார். லாரிக்கு 2100 தொகையும், தண்ணீருக்கு 300 தொகையும் என மொத்தம் ரூபாய் 2,400 கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்பு 2,300 தொகைக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டபோது அதைக் கடுமையாக எதிர்த்தவர்கள், இன்று அதை விட கூடுதல் தொகையை அமைதியாக ஏற்றுக்கொண்டுள்ளது ஏன் என அவர் மீண்டும் கேட்டார்.
குறிப்பிடத்தக்க அளவில் விவாதம் எதுவுமில்லை.
12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அவ்வளவு பெரிய வாகனமெல்லாம் தேவையில்லை என்றும், நகராட்சியின் ட்ராக்டர் வாகனமே போதும் என்றும் 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு தெரிவித்தார். 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு வாகனத்தை வாங்கலாம் என 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி தெரிவித்தார்.
குறிப்பிடத்தக்க அளவில் விவாதம் எதுவுமில்லை.
குடிநீர் பழுது பார்த்தல் பணியைப் பொருத்த வரையில், நகரில் என்ன நடைபெறுகிறது என்பதையே அலுவலர்கள் யாருக்கும் தெரிவிப்பதில்லை என்று நகர்மன்றத் தலைவர் கூறினார்.
குடிநீர் பழுதுகள் சரிசெய்யப்படும் முன் அந்த வார்டு உறுப்பினரிடம் ஒப்புதல் பெறத் தேவையில்லை என நகராட்சி மண்டல நிர்வாக அலுவலர் (RDMA) தெரிவித்துள்ளதாக 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி தெரிவித்தார்.
வார்டு உறுப்பினரிடம் ஒப்புதல் பெற வேண்டுமென்பது லஞ்சத்தை ஊக்குவிக்கும் என்று 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார்.
இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினரிடம் ஒப்புதல் பெறுவது என்பதை விட்டுவிட்டு, முற்கூட்டியே அதிகாரிகள் அவருக்குத் தகவல் அளிக்க வலியுறுத்தலாம் என்று 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.
இனி மேற்கொள்ளப்படும் பணிகளில் அந்தந்த வார்டு உறுப்பினர்களுக்கு முற்கூட்டியே தகவல் தரப்படும் என குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் தெரிவித்தார்.
நகராட்சியால் ஆயத்தம் செய்யப்படும் நகர்மன்றக் கூட்டப்பொருளில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளில், வழமை போல அந்தந்த வார்டு உறுப்பினரின் பெயர் வெளியிடப்பட வேண்டும் என்று 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.
நகரின் தெருக்களில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து மின் கம்பங்களுக்கும் தெருவிளக்கு போடுவது என்று செய்யாமல், குறிப்பிட்ட இடைவெளி என்ற அடிப்படையில் தெரு விளக்குகளை புதிதாக அமைக்கலாம் என 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார்.
எந்தெந்தப் பகுதிகளில் புதிதாக தெருவிளக்கு தேவை என்பதை ஆய்ந்தறிய குழு நியமிக்கப்பட வேண்டுமென 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு தெரிவித்தார்.
தெரு விளக்கு பராமரிப்பிற்காக மின் வாரியத்திடம் தனியாக ஊழியர் ஒருவரைக் கேட்டுப் பெற வேண்டும் என 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தெரிவித்தார்.
குறிப்பிடத்தக்க அளவில் விவாதம் எதுவுமில்லை.
அறிக்கை எங்கே என்று 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கேள்வியெழுப்பினார். RDMAக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆணையர் தெரிவித்தார். பார்வையிடப்படாத அறிக்கைக்கு மன்ற அனுமதியை எப்படிக் கோர இயலும் என்று உறுப்பினர் கேள்வியெழுப்பியதுடன், இதுகுறித்து ஒத்திவைப்புத் தீர்மானம் நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
அரசுப் பதிவின் அடிப்படையில் தெருப்பெயர்களைத் தெரிவிக்கும் பலகைகளை நிறுவலாம் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நகராட்சியின் பொதுநிதியிலிருந்துதான் இப்பணி மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் இப்போது அவசரப்படத் தேவையில்லை என்று 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார். நகராட்சி பொதுநிதியிலிருந்து தொகையை செலவழித்து மீண்டும் அதைப் பெற்றுக்கொள்ளலாம் என திட்ட உதவி அலுவலர் செந்தில் குமார் தெரிவித்தார். அதில் தனக்கு நம்பிக்கையில்லை என உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.
பதிவுப் புத்தகம் இல்லாத வாகனத்திற்கு எண் எவ்வாறு வந்தது என்று நகர்மன்றத் தலைவர் கேள்வியெழுப்பினார். பெயிண்டர் தவறுதலாக எண்ணைப் பதிந்துவிட்டார் என பொருத்துநர் நிஸார் தெரிவித்தார்.
பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்த்த நிலையில் கடந்த கூட்டத்தில் எவ்வாறு தீர்மானம் மாற்றியெழுதப்பட்டது என்று 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் கேள்வியெழுப்பினார். அதே கேள்வியை 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகுவும் வலியுறுத்தினார்.
அன்றைய கூட்டத்தில் இதுகுறித்து ஒரு சில உறுப்பினர்கள் மட்டுமே கருத்து தெரிவித்ததாகவும், கூட்டத்தில் பங்கேற்ற இதர உறுப்பினர்கள் எவரும் இவ்விஷயத்தில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
தற்போது எதிர்ப்பு தெரிவிக்கும் உறுப்பினர் சுகு பழைய நகர்மன்றத்திலும் உறுப்பினராக இருந்துள்ளார் என்றும், கடந்த 20 வருடங்களாக ஆவணம் இல்லாமல் ஓடிய வண்டி குறித்து தெரிந்திருந்தும் அவர் பழைய நகர்மன்றத்தில் தெரிவிக்காதது ஏன் என்றும் நகர்மன்றத் தலைவர் கேள்வியெழுப்பினார்.
இவ்வாறாக, செய்யாததையெல்லாம் செய்ததாகவும், செய்ததையெல்லாம் செய்யவில்லை என்றும் தலைவராகிய தானோ - உறுப்பினர்களோ மாற்றிப் பேசும் வாய்ப்பை ஆதாரப்பூர்வமாகப் போக்கிடவே கூட்டங்களை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என தான் தெரிவிப்பதாகவுமு் அவர் மேலும் தெரிவித்தார்.
“தெரியாமல் செய்துவிட்டேன்” என்று ஒரு வார்த்தை சொல்ல வேண்டியதுதானே என்று 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் தெரிவித்தார். தெரியாமல் செய்ய இதில் ஒன்றுமில்லை என்றும், அன்று எதிர்த்து கருத்து தெரிவிக்காத பல உறுப்பினர்கள் இன்று அதுகுறித்து கருத்து தெரிவிப்து வியப்பளிப்பதாகவும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
வாடகைக்கு வாகனம் எடுக்கவே அக்கூட்டத்தில் அனைவரும் ஒப்புக்கொண்டதாக 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார். அதனை மறுத்துப் பேசிய நகர்மன்றத் தலைவர், நகராட்சி பொது நிதியிலிருந்து பெருந்தொகையை வாடகைக்காகவே கொடுக்க வேண்டியிருக்கிறதே என்ற ஆதங்கத்தில்தான் பழைய வாகனத்தைப் பழுது பார்க்கும் அம்சம் கூட்டப் பொருளில் சேர்க்கப்பட்டதாகவும், இன்று சொல்லப்படும் பலதரப்பட்ட தகவல்களை அன்று ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள்தான் தெரிவிக்க வேண்டும் என்ற நிலையிலும் அவர்கள் தெரிவிக்காமல் இருந்துவிட்டனர் என்றும் தெரிவித்தார்.
வீடியோ ஆதாரமிருந்தால் இதுபோன்ற விமர்சனங்களை தானும், உறுப்பினர்களும் முன்வைக்க வேண்டிய அவசியமே இருக்காது என்று நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அரசு விதிப்படி RDMA மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், 3 நாட்களுக்குள் நகராட்சி அறிவிப்புப் பலகையில் ஒட்டினாலே போதும் என்றும், வீடியோ பதிவு செய்துதான் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை என்றும் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.
நகராட்சியின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ள தீர்மான நகலை அடுத்த 48 மணி நேரத்திற்குள் உறுப்பினர்கள் பார்வையிட்டு, மறுப்பு இருப்பின் நகர்மன்றத் தலைவருக்கு அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும், நகர்மன்றத் தலைவர் அதனை மாவட்ட ஆட்சியருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் விதி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் (RDMA) இடமிருந்து பெறப்பட்ட கடிதம் எங்கே என்று உறுப்பினர்கள் கேட்க, அதற்கு ஆணையர் சரியான விடையளிக்காத நிலையில், அதுகுறித்து ஒத்திவைப்பு தீர்மானம் நிறைவேற்றுமாறு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
செலவுத் தொகைக்கான பில் எங்கே என நகர்மன்றத் துணைத்தலைவரும், 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் கேள்வியெழுப்பியதுடன், நகராட்சியில் செலவு குறித்த எந்த ஒன்றானாலும் அதற்கான பில்லை கண்ணில் காட்டிய பின்னர் ஒப்புதல் கோருமாறு தெரிவித்தார்.
இவ்வாறு 27 கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட்ட நிலையில் கூட்டம் இடைநிறுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் மாலை 04.40 மணியளவில் துவங்கியது.
இப்போது நடைமுறையில் உள்ளது போல் தொடரட்டும் என்றும், இதில் தலையிட்டால் தேவையற்ற பிரச்சினைதான் வரும் என்றும் 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் தெரிவித்தார்.
அடுத்து பேசிய நகர்மன்றத் தலைவர், மீன் சந்தை குறித்து துவக்கமாக பிரச்சினையைக் கொண்டு வந்ததே உறுப்பினர் பத்ருல் ஹக்தான் என்று தெரிவித்தார்.
பின்னர், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தண்ணீர் வராத காரணத்தை நேரில் ஆய்ந்தறிந்து அறியத் தருமாறு அதிகாரிகளை நகர்மன்றத் தலைவர் கேட்டுக்கொண்டார்.
இது தனிநபர் பிரச்சினை என்பதால், தொடர்புடைய வீட்டுக்காரர் மின் வாரியத்திற்கு நேரடியாக அணுகி தீர்வு பெற்றுக்கொள்ளலாம் என்றும், இதற்காக நகர்மன்றக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, அவ்விடத்தைப் பார்வையிட்டு முடிவெடுக்கலாம் என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டிய உறுப்பினர் (இரண்டாவது அமர்வில்) வருகை தராத காரணத்தால், ஒத்திவைப்பு தீர்மானம் நிறைவேற்றுமாறு உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஒவ்வொரு கூட்டத்தின்போதும் முந்தைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து அடுத்த கூட்டத்தில் ஆணையர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
இது நடைமுறைக்கு சரிவராது என 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் தெரிவித்தார்.
நகராட்சியில் வைக்கப்படும் கோரிக்கை மனுவுக்கு ஏற்புச் சீட்டு வழங்க வேண்டுமென்பது ஒருபுறமிருக்க, மனுவையே அலுவலர்கள் தொலைத்துவிடுவதாக 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி தெரிவித்தார்.
நீர்நிலைகளை ஆய்வு செய்யும் அம்சம் தற்போது நடைமுறை சாத்தியமற்றது என்றும், ரெட் ஸ்டார் சங்க தண்ணீர் தொட்டி வளாகத்தை வேலியிட்டு, மரங்கள் நட்டு பாதுகாக்கலாம் என்றும், இணையதள விவகாரம் குறித்து ஏற்கனவே ஒத்திவைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தை வீடியோ பதிவு செய்துதான் ஆக வேண்டும் என்றோ, இணையதளங்கள் நேரில் வந்துதான் செய்தி சேகரிக்க வேண்டும் என்றோ கருதத் தேவையில்லை என்றும், இணையதளங்கள் கூட்டம் முடிந்த பிறகு கூட இணையதளங்கள் விபரங்களைக் கேட்டறிந்து செய்தி வெளியிடலாம் என்றும் 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா தெரிவித்தார்.
இப்பொருளில் 3ஆவது அம்சமாக உள்ள ஈக்கியப்பா தைக்கா முதல் சிங்கித்துறை வரையிலான சாலையைப் பொருத்த வரை, அங்கு குடியிருப்புகள் இல்லாததால் உடனடியாக செய்துதான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை என 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தெரிவித்தார்.
அப்பகுதியில் சாலை அமைப்பது நில வணிகர்களுக்கு பலனளிக்கும் என்பதைத் தவிர மக்களுக்கு ஒரு நன்மையும் இல்லை என்றும், இதுபற்றி விளக்க வேண்டிய 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி (இரண்டாவது அமர்விற்கு) வருகை தராத நிலையில் அந்த அம்சத்தின் மீதான நடவடிக்கையை மட்டும் ஒத்தி வைக்கலாம் என 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.
புதிதாக வாங்கப்படும் குப்பைத் தொட்டியை (Bin) அனைத்து வார்டுகளிலும் சமஅளவில் வைக்கலாம் என்றும், தொட்டி வைக்கப்படும் இடங்களில் முன்னனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
உறுப்பினர்களின் கோரிக்கைகளை கூட்டப்பொருளில் இடம்பெறச் செய்யும்போது, அதற்கான செலவு மதிப்பீட்டையும் இணைத்தே தருவதன் மூலம் தேவையற்ற காலதாமதத்தைத் தவிர்க்குமாறு ஆணையரிடம் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
இதுகுறித்து முந்தைய கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பணி மேற்பார்வையாளர் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கோரிய உறுப்பினரின் பெயர் கூட்டப்பொருளில் இடம்பெறாதது ஏன் என்று 16அவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன் கேள்வியெழுப்பினார்.
இதுகுறித்து ஏற்கனவே தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதாகவும், அத்தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
குறிப்பிடத்தக்க அளவில் விவாதம் எதுவுமில்லை.
இதற்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியைப் பெற்றுத் தர முயற்சித்த நகர்மன்றத் துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா தெரிவித்தார்.
சட்ட விதிமுறைகளுக்குட்பட்டே இப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தரம் குறைந்த நிலையில் எந்த வேலையும் செய்யப்படக் கூடாது என்றும் கூட்டத்தில் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அதுகுறித்து கருத்து தெரிவித்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், தரமற்ற முறையில் பணிகள் செய்வது கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த வேலை நிறுத்தப்படும் என்று தெரிவித்தார்.
உற்பத்தி செய்யும் எரிவாயுவை எப்படி வினியோகிப்பீர்கள் என்று 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் கேள்வியெழுப்பினார். அதனை மொத்தமாக விற்பனை செய்து, அந்த வருமானத்தை மாற்று செலவினத்திற்குப் பயன்படுத்தலாம் என சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.
நகராட்சியின் மூலம் குப்பைகளை சேகரிக்க வரும் வாகனங்களில் அளவுக்கதிகமான ஒலி எழுப்பப்படுவதாகவும், அனைவருக்கும் கேட்கத்தக்க அளவிலும் - பாதிப்பில்லாத வகையிலுமான ஒலியை எழுப்பி குப்பையை சேகரிக்கச் செய்யுமாறு 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்காக நகராட்சியின் வரையறையை விட குறைந்த ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளதால், எஞ்சிய தொகை சுமார் 12 லட்சம் ரூபாயை என்ன செய்யலாம் என கூட்டத்தில் கேட்கப்பட்டது.
அத்தொகையைக் கொண்டு, நகரில் ஆர்வப்படும் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை - மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்துப் போட பக்கெட் வாங்கிக் கொடுக்கலாம் என்று 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் தெரிவித்தார்.
வீடுகளிலுள்ள கழிவு நீர் தொட்டியிலிருந்து கழிவு நீர் உறிஞ்சும் வாகனம் வாங்கலாம் என்று நகர்மன்றத் தலைவர் கருத்து தெரிவித்தார்.
அனுமதி பெற்று அறுக்கப்படும் இறைச்சியில் நகராட்சியின் முத்திரை அவசியம் பதியப்பட வேண்டும் என்றும், அவ்வப்போது இறைச்சிக்கடைகளில் திடீர் சோதனை நடத்தி முறைகேடுகளைக் களைய வேண்டும் எனவும் 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர் தெரிவித்தார்.
கட்டணம் செலுத்துவதில் முறைகேடுகளைத் தவிர்த்திட, ஒவ்வொரு ஆடு - மாட்டிற்கும் உரிய கட்டணம் செலுத்தி ரசீது பெற்ற பின்னரே அறுக்க அனுமதிக்க வேண்டும் என்று நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.
புதிய அறுப்புக் கட்டணமாக ஆடு ஒன்றுக்கு ரூபாய் 40 தொகையும், மாடு ஒன்றுக்கு ரூபாய் 50 தொகையும் நிர்ணயிக்கலாம் எனவும் கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள், 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், 11ஆவது வார்டு உறுப்பினரும் - நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் ஆகியோர், கட்டண நிர்ணயத்தில் மட்டும் தங்களுக்கு மாற்றுக் கருத்து உள்ளதாகவும், ஏலம் விடும் முடிவை எதிர்க்கப் போவதில்லை என்றும் தெரிவித்தனர்.
குறிப்பிடத்தக்க அளவில் விவாதம் எதுவுமில்லை.
குறிப்பிடத்தக்க அளவில் விவாதம் எதுவுமில்லை.
குறிப்பிடத்தக்க அளவில் விவாதம் எதுவுமில்லை.
தெருவிளக்கு மின் கம்பப் பணிகளுக்கு மட்டும் அலுவலரைப் பணியமர்த்திக் கொள்ளலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறாக கூட்டப் பொருட்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. மாலை 06.50 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.
கூட்டத் துளிகள்...
*** கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில், உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றதற்கான பணம் வழங்கப்பட்டு, உறுப்பினர்களின் கைச்சான்று பெறப்பட்டது.
*** கூட்டத்தின்போது ஒவ்வொரு பொருளும் வாசிக்கப்பட்ட பின்னர், அந்தந்த பொருளுக்கான தீர்மானத்தை மினிட் புத்தகத்தில் பதிவுசெய்யும்போது, அதற்கு ஆதரவாக எத்தனை உறுப்பினர்கள், எதிர்ப்பாக எத்தனை உறுப்பினர்கள் என்பதை கையை உயர்த்தி கேட்டறிந்து தலைவர் பதிவு செய்ய வேண்டும் என 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி தெரிவித்தையடுத்து, அதன்படி செய்யப்பட்டது..
*** கூட்டம் நண்பகல் 12.00 மணியளவில் துவங்கி, மதியம் 02.00 மணி வரையிலும், பின்னர் மாலை 04.40 மணிக்குத் துவங்கி, மாலை 06.50 மணி வரையிலும் நடைபெற்றது. காலை அமர்வில் அனைத்து உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர். மாலை அமர்வில் சில உறுப்பினர்கள் வருகை தரவில்லை.
*** இக்கூட்டத்தில், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.முஹம்மத் நூஹ், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தைச் சேர்ந்த சாளை நவாஸ், அதிமுக நகர கிளையைச் சேர்ந்த ‘மீசை’ மெய்தீன், புதுப்பள்ளி செயலாளர் ஏ.எஸ்.அஷ்ரஃப், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் நெட்காம் புகாரீ, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் துணைத்தலைவர் எஸ்.அப்துல் வாஹித், அதன் பொருளாளர் ஹாரூன் ரஷீத், ‘மெகா’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், தஃவா சென்டர் தலைவர் எம்.ஏ.புகாரீ உட்பட சுமார் 30 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
*** காலை அமர்வின்போது பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. மாலையில் ஓரிருவர் மட்டுமே பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். |