காயல்பட்டினம் நகராட்சியில், கொச்சியார் தெரு, தீவுத்தெரு, அப்பாபள்ளித் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகக் குழாய் மற்றும் குடிநீர் வால்வு தொட்டியில் ஒழுக்கு ஏற்பட்டு, அதிலிருந்து ஏராளமான குடிநீர் வீணாக வழிந்தோடியது.
இதுகுறித்து, அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தம் வார்டு உறுப்பினர்களிடமும், நகர்மன்றத் தலைவரிடமும் முறையிட்டனர்.
இந்நிலையில், கொச்சியார் தெருவிலுள்ள குடிநீர் வால்வு தொட்டியின் பழுது நேற்று சரிசெய்யப்பட்டது. தீவுத்தெரு குடிநீர் வினியோகக் குழாய் உடைப்பு இன்று காலையிலும், அப்பாபள்ளித் தெரு - ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி நுழைவாயிலிலுள்ள குடிநீர் வினியோகக் குழாய் உடைப்பு இன்று மதியமும் சரிசெய்யப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சியின் குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெற்றன. பின்னர் கருத்து தெரிவித்த அவர், தெருவழிகளில் பல்வேறு தேவைகளுக்காக பள்ளம் தோண்டுவோர், எடை கூடுதலான கற்களையும், இதர பொருட்களையும் கொண்டு அப்பள்ளத்தை மூடிவிடுவதாகவும், இதன் காரணமாக அதனடியிலுள்ள பி.வி.சி.யால் ஆன குடிநீர் வினியோகக் குழாய்க்கு அழுத்தம் கூடுதலாகி, அது உடைப்பெடுப்பதாகவும் தெரிவித்தார். |