சஊதி அரபிய்யா - யான்பு - சென்ற 27 ஆம் தேதி சனி பிற்பகல், தொழிற்பேட்டை நகரமான யான்புவில் பெருநாள் ஒன்று கூடல் அழைப்பை ஏற்று ஏராளமான யான்பு காயல் சகோதரர்களும்,ஜித்தா,மதீனா போன்ற ஊர்களிலிருந்து காயல் சகோதரர்களும்,வெளியூர் அன்பர்களும், ஹாஜி "கலவா" அபூபக்கர் இல்லமாகிய "காயல் ஹவுசில்" சங்கமித்து கூடினார்கள். ஒருவருக்கொருவர் தங்கள் பெருநாள் வாழ்த்தை பரிமாறிக்கொண்டார்கள். அச்சமயம் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் காயல் நகர் நலப்பணிகளுக்கு யான்பு காயலர்களின் பங்களிப்பும், அதன் அவசியம் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜனாப்.நூஹு ஹாஜி அவர்கள் தலைமை ஏற்க, ஹாஜி கலவா அபூபக்கர் அவர்கள் முன்னிலை வகிக்க ஹாஜி மொகுதூம் அவர்கள் கிராத்துடன் தொடங்கிய அக்கலந்துரையாடல் அமர்வில் தலைமை உரையாற்றிய ஜனாப். நூஹு ஹாஜி அவர்கள் பேசும்பொழுது,ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் முக்கியதுவத்தை பற்றியும்,நமதூரில் கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களை பற்றியும்,மேலும் மசூராவின் முக்கியத்துவத்தை பற்றியும்,சந்தா,நன்கொடை விபரத்தையும் விரிவாக எடுத்துரைத்தார்கள். ஹாஜி "கலவா" அபூபக்கர் அவர்கள் புதிய உறுப்பினர்களுக்கு மன்ற உறுப்பினர் சேர்க்கை படிவம் வினியோகித்தும் நல்லதோர் கருத்துக்கள் வழங்கினார்கள்.
அடுத்து பேசிய ஹாஜி முஹம்மது ஆதம் சுல்தான் அவர்கள்.நடைபெறும் இந்த நிகழ்வின் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பாக மருத்துவ உலக காயல் நல மன்றங்களின் பொது மருத்துவ உதவிக்கான கூட்டு அமைப்பான "ஷிபா" திட்டதைப்பற்றியும் விரிவாக விளக்கினார்.
அடுத்து பேசிய ஹாஜி சுல்தான் லெப்பை அவர்கள், ஜித்தா காயல் நற்பணி மன்றத்திற்கு யான்போவிலிருந்து அனுப்பப்படும் அனைத்து கடிதங்களும், தாக்கீதுகளும் நகல் பிரதியுடன் அனுப்பி அந்த நகல் நம் யான்போவில் கோப்பில் வைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
அடுத்து பேசிய ஹாஜி பொறியாளர்,நெய்னா முஹம்மது அவர்கள்,நமதூர் அனைத்து மக்களும் காயல் சகோதரர்களே,ஊர் மக்கள் அனைவரும் ஒன்று,அவர்களுக்கு உதவுவதுதான் இந்த ஜித்தா காயல் நற்பணி மன்ற அமைப்பின் தலையாய கடமை என்று விளக்கியதோடு, உயிர் கொல்லி நோய்க்காக செலவிடும் தொகையை எந்த ஒரு ஏழை குடும்பத்தாலும் தனியாக ஈடு செய்ய முடியாது.ஆகையால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம்மால் இயன்ற உதவியை செய்தால் அதனால் ஏற்படும் பலனை வார்த்தையால் சொல்லி முடிக்கமுடியாது என்று கூறி இறைவசனத்தையும் மேற்கோள் காட்டி விரிவாக விளக்கினார்.
அடுத்து கலந்துரையாடல் நிகழ்வில் பேசிய ஜனாப் ஷாகுல் அவர்கள்,ஹாஜி கலவா இப்ராஹீம் அவர்கள், ஹாஜி ஹுசைன் ஹல்லாஜ் அவர்கள் மற்றும் யான்பு காயல் சகோதரர்கள் ஆகியோர்; 'நகர் நல மன்றங்களின் முக்கியம், பல்வேறு உடல் நலக்குறைவால் அவதியுறும் நம் நகர் மக்களின் துயரம், மருத்துவ கூட்டமைப்பின் அவசியம்' போன்ற நல்ல பல உன்னதமான செய்திகளை வந்திருந்தோர் அனைவருக்கும் எடுத்துச்சொன்னார்கள்.
கலந்துரையாடலின் சங்கமித்த அனைவரும் அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.கடந்த மாதம் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தினரின் யான்பு வருகை, அதன் நிமித்தம் யான்பு உறுப்பினர்களின் உற்சாகம், அளப்பெரும் ஆர்வம், மேலும் வீரியமாக பணிகளாற்ற வேண்டும் என்ற விவேகம், யான்பு காயல் சகோதரர் களிடம் இருந்ததை காண முடிந்தது. நம் நகர் எதிர் நோக்கும் அனைத்து தேவைகளுக்கும் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தோடு இணைந்து தேவையான உதவிகளை செய்ய யான்பு வாழ் காயல் கண்மணிகள் தயாராக உள்ளார்கள் என்பதே நடந்த கலந்துரையாடலின் கருவாக இருந்தது.
அடுத்து ஹாஜி சுல்தான் லெப்பை அவர்கள் நன்றி நவில இறைவசன துவாவுடன் கூட்டம் இனிதே நிறையுற்றது!அல்ஹம்துலில்லாஹ்.
கூட்ட முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காயல் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது சிறப்பாக நடந்து முடிந்த பெருநாள் ஒன்று கூடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் யாவரும் திரளாக கலந்து சிறப்பித்தார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் அன்றைய காலை முதல் மாலை வரை அனைத்து உணவு அனுசரணைகளை கலவா சகோதர்கள் ஹாஜி அபூபக்கர், ஹாஜி இப்ராஹீம் அவர்கள் மற்றும் காயல் ஹவுஸ் சகோதரர்களும், மிகச்சிறப்பாக செய்திருந்தனர். பெருநாள் ஒன்று கூடல் மற்றும் கருத்து பரிமாற்றங்கள் முடிந்து அனைவர்களும் சந்தோஷமாக கலைந்து சென்றனர்.
தகவல் மற்றும் நிழற்படங்கள்:
காயல் ஹவுஸ்,
யான்பு.சவுதி அரேபியா
|