தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் 19-1-2014 மற்றும் 23-2-2014 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசு செய்திக்குறிப்பு வருமாறு:
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் 19-1-2014 மற்றும் 23-2-2014 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ் நாட்டில் 43,051 சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள்/அரசு மருத்துவமனைகள்/அங்கன்வாடி மையங்கள்/சத்துணவு மையங்கள்/பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்கள்:
1. சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.
2. அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் 19-1-2014 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு தவணையும் மீண்டும் 23-2-2014 (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் தவணையும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
3. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
4. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் (New Borns) முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.
5. சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படுகிறது. இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது.
6. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
7. இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
பயணம் மேற்கொள்ளும் மற்றும் தொலைதுhர பகுதி வாழ் குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடு: தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1652 நகரும்
மையங்கள் (Transit booth) நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
சொட்டு மருந்து முகாமில் ஈடுபடும் பணியாளர்கள்:
19-01-2014 அன்று போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா பணியாளர்கள், ரோட்டரி இண்டர்நேஷனல் போன்ற சங்கங்களை சார்ந்த பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுகிறார்கள்.
தமிழ் நாடு போலியோ இல்லாத 10- வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீறிய முயற்சியின் விளைவாக போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்றதால், தமிழ் நாடு, பல ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். இத்தருணத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் முக்கியத்துவத்தை அனைத்து பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் விளம்பரம் செய்ய வேண்டும். அனைத்து
தாய்மார்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
“இந்த பூமியிலிருந்து போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம்”
இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை - 9. |