எதிர்வரும் இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்குமானால், தேசிய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும் என - திமுக தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் என்.பி.ஜெகனுக்கு ஆதரவு கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், அதன் மாநில நிர்வாகிகள் பேசியுள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கீழ், திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.
பொதுக்கூட்டம்:
அவருக்கு ஆதரவு திரட்டும் நோக்குடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இம்மாதம் 11ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று 19.00 மணிக்கு பரப்புரை பொதுக்கூட்டம், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில் நடத்தப்பட்டது.
கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் முன்னிலை வகித்தார். காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் வரவேற்றுப் பேசினார்.
திமுக சார்பில் பாலப்பா முஹம்மத் அப்துல் காதிர், ஏரல் பள்ளிவாசல் இமாம் மவ்லவீ எச்.ஷாஹுல் ஹமீத் பாக்கவீ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், திமுக காயல்பட்டினம் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர் தலைமையுரையாற்றினார்.
தேமுதிகவினர் முஸ்லிம் லீகில் இணைவு:
அதனைத் தொடர்ந்து, நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில் - மதவாத சக்தியான பாஜகவுடன், விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (தேமுதிக) கூட்டணி அமைத்துக் களம் காண்பதால், அக்கட்சியின் 5 உறுப்பினர்கள் அதிலிருந்து விலகுவதாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைவதாகவும் அறிவித்து, அவர்களது தேமுதிக உறுப்பினர் அட்டையையும் அளிக்க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவற்றைப் பெற்றுக்கொண்டு, அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றார்.
காயல் மகபூப் உரை:
அடுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் உரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம் வருமாறு:-
கஃபாவில் கேட்ட பிரார்த்தனை:
அண்மையில் சஊதி அரபிய்யா சென்ற நான் அங்கு உம்றா கிரியைகளை நிறைவு செய்து விட்டு, புனித கஃபத்துல்லாஹ்வின் திரைச்சீலையைப் பிடித்தவாறு மனமுருகி துஆ பிரார்த்தனை செய்தேன். 3 கோரிக்கைகளை இறைவனிடம் முன்வைத்தேன். அவற்றில் எதுவும் எனது சொந்தக் கோரிக்கைகள் அல்ல. இந்த நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்றும், மதவாத சக்திகள் வேரறுக்கப்பட வேண்டும் என்றும், சமுதாயத்தை வழிநடத்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும், அதன் நிர்வாகிகளும் நீடித்த ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும் நான் பிரார்த்தனை செய்தேன்.
நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில் பல துருவங்களில் பலர் போட்டியிட்டாலும், நேரடிப் போட்டி என்பது திமுக தலைமையிலான கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் இடையில்தான். இதில் அதிமுகவுக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமம்.
மோடி பிரதமரானால்...
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒருவேளை பாஜக ஆட்சியைப் பிடித்து, மோடி பிரதமரானால், இந்த நாட்டின் தேசிய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும். அதற்கு குஜராத் கலவரங்களை அவர் அமைதியாக இருந்து வழிநடத்தியதே மிகப்பெரிய சான்று.
பாஜக ஆட்சிக்கு வந்தால், கஷ்மீர் மாநில மக்கள் பாதுகாப்பு கருதி, இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள Article 370 சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டம் இல்லாமலாக்கப்படும். அவ்வாறு அவர்கள் செய்தால், அங்கு அமைதி கெட்டு, போர் வெடிக்கும். அது இந்தியா - பாகிஸ்தான் போராக மாறும். அதில் வெற்றி பெற்றதாகக் கூறி, மோடி தன்னை தேசிய கதாநாயகனாக முன்னிறுத்துவார். இது அவர்களின் திட்டங்களுள் ஒன்று.
குஜராத்தில், இரு சக்கர வாகனத்தில் வந்த முஸ்லிம் தம்பதியை வழிமறித்து, 27 வயது கணவனை - அவன் தான் இந்து என உயிருக்குப் பயந்து பொய்யுரைத்த பின்னரும், அவனது கீழாடையை உருவி, ஆண் குறியில் சுன்னத் செய்யப்பட்டதை உறுதி செய்த பின், அவனது வயிற்றில் ஆயுதத்தால் குத்திக் கிழித்து, மனைவி கண் முன்னால் அவரைப் படுகொலை செய்தனர்.
அத்தோடு விட்டுவிடாமல், வெளிறிப் போயிருந்த - நிறைமாதக் கர்ப்பிணியான அந்த இளம் முஸ்லிம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, குழந்தையை வெளியில் எடுத்து, தலைக்கு மேலே தூக்கிக் காண்பித்து ஆத்திரக் கொக்கரிப்பு செய்தது மதவாதக் கும்பல்.
அதுபோல, உயிருக்கு அஞ்சி காங்கிரஸ் எம்.பி. ஒருவரின் இல்லத்தில் அடைக்கலமான 67 முஸ்லிம்களை - வீட்டிற்குள் புகுந்து மொத்தமாகப் படுகொலை செய்தனர் கலவரக்காரர்கள்.
இந்த படுபாதக வேலைகள் நடைபெறும் முன்னரே அதுகுறித்து அம்மாநில முதல்வரான நரேந்திர மோடிக்கு தகவல் அளிக்கப்பட்ட பிறகும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்குமாறு கூறியவர்தான் இன்று நாட்டை ஆளத் துடித்துக் கொண்டிருக்கிறார்.
இத்தனையையும் செய்த பின்னரும், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நேரத்தில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தான் காரில் செல்கையில் ஒரு நாய்க்குட்டி அதில் அடிபட்டு இறந்தால் ஏற்படும் உணர்வு தனக்கு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். இது நாடு முழுவதும் அதிருப்தியாகப் பேசப்பட்ட பிறகும் கூட, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தான் வருந்துவதாகவும் - அதே நேரத்தில் தனக்கு குற்ற உணர்வு இல்லை என்றும் சொல்லிய செய்தியை பத்திரிக்கைகள் வெளியிட்டன.
இந்த மோடி குஜராத் கலவரத்திற்குக் காரணமானவர் என்பதற்காகவே அவருக்கு அமெரிக்கா செல்ல விசா வழங்கப்படவில்லை. அவரது செயலுக்கு, தான் வெட்கப்படுவதாக வாஜ்பாய் கூறியிருக்கிறார்.
நான் இங்கே மேடையில் கூறியிருப்பது சில நிகழ்வுகள் மட்டுமே. மொத்தத்தையும் கூற என்னாலும் இயலாது. அவற்றைப் பொறுமையாகக் கேட்க உங்களாலும் இயலாது. அவ்வளவு கொடுமை நிறைந்த நிகழ்வுகள் அவை.
அனைவரும் வருக!
இவ்வளவையும் செய்த மோடியுடன் கூட்டணி வைத்துள்ளதனால் அதிருப்தியுற்ற தேமுதிகவைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் 5 பேர் இன்று அதிலிருந்து விலகி, தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்துள்ளனர். இதுபோல, மதிமுக, பாமக போன்ற - பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளில் இருக்கும் முஸ்லிம்களும் விலகி வர வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஜெயலலிதா வேஷ்டி கட்டாத மோடி:
தமிழகத்தில் அதிமுகவுக்கு அளிக்கும் வாக்குகளும் பாஜகவுக்கு அளிக்கும் வாக்குகளும் ஒன்றே. இந்துத்துவக் கொள்கையில் மோடியும், ஜெயலலிதாவும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல. மோடி சேலை கட்டாத ஜெயலலிதா என்றால், ஜெயலலிதா வேஷ்டி கட்டாத மோடி. அவ்வளவுதான்.
உலகில் எங்கு இந்துக்கள் பாதிக்கப்பட்டாலும் இந்தியா அடைக்கலம் கொடுக்கும் என பாஜகவின் தேர்தல் அறிக்கை சொல்கிறது. இந்தியாவில் பல மதத்தினர் வாழ்ந்துகொண்டிருக்க, இந்துக்களை மட்டும் தனியாகக் குறிப்பிட்டு இவ்வாறு அறிவிப்பதன் நோக்கம், இந்த நாட்டை இந்து நாடாக மாற்றுவதற்கான முயற்சியே. அது ஒருபோதும் இந்தியாவில் நடக்காது; நடக்கவும் விட மாட்டோம்.
இந்து ராஷ்ட்டிரம்:
இந்து ராஷ்ட்டிரம் என்பது ஆர்.எஸ்.எஸ். மூளையில் உதித்த சிந்தனை. பொதுமக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அதை நடைமுறைப்படுத்திட பாஜக துடித்துக்கொண்டிருக்கிறது. அதுபோல, பாகிஸ்தான் பிரிவினை என்பது முஸ்லிம்களின் விருப்பத்தில் வந்ததல்ல. மாறாக, இந்துக்களுடன் முஸ்லிம்களை இணைத்து வைத்திருக்கக் கூடாது என்ற இந்து மகா சபையின் பன்னெடுங்காலத்துக்கு முந்தைய கொள்கையே பாகிஸ்தான் பிரிவினை என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதிமுகவும், பாஜகவும் ஒன்றே!
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவதும், அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதும் பாஜகவின் நடப்பு தேர்தல் அறிக்கையில் தெளிவாகவே இடம்பெற்றுள்ளன. அந்தக் கொள்கைக்கு ஆதரவாக சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானமே இயற்றப்பட்டுள்ளது. இன்றளவும் அத்தீர்மானம் திரும்பப் பெறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாக்குகளைச் சிதற விடாதீர்!
இந்த ஊரில் சிலர் NOTAவுக்கு வாக்களிக்கவும், வேறு சிலர் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கவும் முடிவு செய்து, அதற்கான பரப்புரையிலும் இறங்கியுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியினர் நல்லவர்களா, இல்லையா என்ற ஆய்வுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால், இன்றைய காலச் சூழலில் அது நமக்குப் பாதகமான விளைவையே தரும் என்பதை அவர்களுக்குச் சொல்லி, உங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
எனவே, உங்கள் வாக்குகளைச் சிதறாமல் ஒருங்கிணைத்து, உதயசூரியன் சின்னத்தில் முத்திரையிட்டு, என்.பி.ஜெகன் அவர்களை பெருவாரியான வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிபெறச் செய்திட உங்கள் யாவரையும் அன்புடன் வேண்டி நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் பேசினார்.
பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உரை:
நிறைவாக, அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
முற்றிலும் மாறுபட்ட தேர்தல்:
நடைபெறவுள்ள இந்த மக்களவைத் தேர்தலுக்கும், முந்தைய தேர்தல்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இந்தத் தேர்தலில் தனி மனிதர் பிரதமராக முன்னிலைப்படுத்தப்படுகிறார். அதுபோல, எப்போதும் போல் அல்லாமல் இன்று 6 முனைப் போட்டியில் தேர்தல் களம் உள்ளது.
பாஜகவின் மதச்சார்பு தேர்தல் அறிக்கை:
பாஜக தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ராமர் கோயில் கட்டப்படும் என குறிப்பிட்டுள்ளது. ஒரு கோயில் அல்ல; எத்தனை கோயில்களை வேண்டுமானாலும் கட்டட்டும். ஆனால் ஒரு பள்ளியை இடித்துவிட்டு கோயில் கட்டுவதையோ, கோயிலை இடித்துவிட்டு தேவாலயம் கட்டுவதையோ, தேவாலயத்தை இடித்துவிட்டு பள்ளிவாசல் கட்டுவதையோ இந்த மதச்சார்பற்ற நாட்டில் அனுமதிக்க முடியாது.
பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அதன் தேர்தல் அறிக்கை மேலும் சொல்கிறது. அவ்வாறு கொண்டு வரப்பட்டால், முஸ்லிம்களின் திருமண தனி உரிமைகள், மண விலக்கு உரிமைகள், ஜீவனாம்சம், இறந்தவர்களை அடக்கம் செய்தல் உட்பட நம் மதம் தொடர்புடைய அனைத்து தனியார் சட்டங்களும் இல்லாமலாக்கப்படும். இதனால், இந்த மதச்சார்பற்ற நாட்டில் நமது வழிபாட்டு உரிமை பறிக்கப்படும் அதை ஒருபோதும் ஏற்க இயலாது.
ஒன்றும் செய்யாத ஜெயலலிதா:
தமிழகத்தில் ஜெயலலிதா தனது 3 ஆண்டு கால ஆட்சியில் எந்தப் புதுத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தவில்லை. முந்தைய திமுக அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்களையே பெயர்களை மாற்றித் தொடர்கிறார்.
முஸ்லிம்களுக்கு மதிப்பளிக்கும் திமுக தேர்தல் அறிக்கை:
மதச்சார்பற்ற ஆட்சி, பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் உள்ள பலவீனங்களை திருத்தல் உள்ளிட்ட - முஸ்லிம்களின் பல்வேறு கோரிக்கைகள் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. ஆனால், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அதுகுறித்து ஒரு வரி கூட இல்லை.
சிறுபான்மையினர் நலன் காத்திட திமுக தனிப் பிரிவையே துவக்கியது. 3.5 சதவிகித இட ஒதுக்கீடு தந்தது கலைஞர் தலைமையிலான அரசு. அதை இன்னும் அதிகப்படுத்த நாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளையும் அது செவிமடுத்துள்ளது. அதன் முன்னோட்டமாக, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 4 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு இடமளித்ததன் மூலம், 10 சதவிகித இட ஒதுக்கீட்டையும் வழங்கியுள்ளது.
திமுகவால் முஸ்லிம்கள் பெற்ற பயன்கள்:
இட ஒதுக்கீடு தருவது குறித்து முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் கலைஞர் அறிவிப்புச் செய்தார். அதன் பலனாக, இன்று நம் சமுதாயத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள் என பல்துறை வல்லுநர்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்து வருகிறது.
அதுபோல, தமிழகத்தின் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் - உலமாக்கள், பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட வேண்டுமென - அவரும் பங்கேற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, அடுத்த இரண்டு நாட்களில் அதையும் அறிவித்து நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக, இன்று தமிழகத்தின் அனைத்துப் பள்ளிவாசல்கள் - மத்ரஸாக்களில் பணிபுரியும் – பொருளாதாரத்தில் நலிவுற்ற இமாம்கள், பிலால்கள், ஆலிம்கள் பலன் பெற்று வருவதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
தற்போது, இட ஒதுக்கீட்டை நான்தான் தந்தேன் என இல்லாத ஒன்றைப் பொய்யாகக் கூறும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தான் பதவியிலிருந்த இந்த 3 ஆண்டுகளில் அதை உயர்த்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? வெறுமனே ஆணையம் அமைப்பதை நம்பி, காலத்தைக் கடத்த முஸ்லிம்கள் அறிவிலிகள் இல்லை.
காயல்பட்டினத்திற்கு வேட்பாளரின் உறுதிமொழிகள்:
இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்ட சில நாட்களில், தூத்துக்குடியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக வேட்பாளர் என்.பி.ஜெகன் அவர்கள், காயல்பட்டினம் நகரின் முக்கிய கோரிக்கைகளான - கிழக்குக் கடற்கரை சாலை, ரயில் நிலைய நடைமேடைப் பணிகள் உள்ளிட்டவற்றை தான் நாடாளுமன்ற உறுப்பினரானால் நிறைவேற்றித் தருவதாக வாக்களித்துள்ளதை இங்கே நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
களத்தில் இரண்டு அணிகளே!
தமிழகத்தில், திமுக - அதிமுக என இரண்டே அணிகள்தான் உள்ளன. அவற்றுக்கிடையில்தான் போட்டி. எனவே, இவ்விரண்டில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான திமுக அணிக்கு நாம் யாவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டியது அவசியம். குழப்பமான சிந்தனைகளுக்கு இடமளிக்க வேண்டாம்.
இன்று பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்கள், நரேந்திர மோடி செய்த பாவங்களுக்குப் பொறுப்பாகி, இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டியதிருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
எனவே, நமக்குப் பாதுகாப்பான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் என்.பி.ஜெகன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்களும் வாக்களிப்பதோடு, உங்களைச் சார்ந்த அனைவருக்கும் அதைப் பரப்புரை செய்ய வேண்டியவனாக எனதுரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார்.
முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், முஸ்லிம் லீக் உட்பட ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
முன்னதாக, கூட்டம் நடைபெற்ற ஏப்ரல் 11ஆம் நாளன்று மாலையில், முகவை சீனி முஹம்மத் குழுவினரின் இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது.
படங்களுள் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |