சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகளையொட்டி நடத்தப்படும் போட்டிகளின் வரிசையில், அங்குள்ள காயல்பட்டினத்தைச் சேர்ந்த மகளிரின் பங்கேற்பில், மகளிர் அறிவுத்திறன் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு, அம்மன்றத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் ஆர்வமுள்ளவர்கள், குழந்தைகள், என ஏராளமானோர் பங்குபெறுவது வழக்கம். நடப்பாண்டின் வருடாந்திர பொதுக்குழு வரும் ஏப்ரம் மாதம் 12,13 தேதிகளில் நடக்கவிருப்பதை முன்னிட்டு உறுப்பினர்களுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தி, வென்றோருக்கு பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மகளிர் அறிவுத்திறன் போட்டி:
போட்டிகளின் வரிசையில், 05.04.2014 அன்று – சிங்கப்பூர் செல்கி சாலையிலுள்ள பீஸ் சென்டர் வளாகத்திலுள்ள Eduqust Training Room என்ற உள்ளரங்கில் சனிக்கிழமை 17.00 மணி முதல் 19.00 மணி வரை, மகளிருக்கான அறிவுத்திறன் போட்டி நடைபெற்றது.
மன்ற உறுப்பினர்களின் மனைவியர் மற்றும் உறவினர்களான மகளிர் பங்கேற்ற இப்போட்டியில், மார்க்கம், பொது அறிவு, காயல் வட்டார வழக்கிற்கான பொருள், பிரபலங்களின் புகைப்படம் பார்த்து பெயர் மற்றும் அவரது பதவியைக் குறிப்பிடுதல், சுருக்கெழுத்திற்கான விரிவாக்கம், நினைவாற்றல் போன்ற ஏராளமான தகவல்களை உள்ளடக்கிய இருநூறு கேள்விகள் கொடுக்கப்பட்டிருந்தன. மன்றத்தின் போட்டிக்கான பொறுப்பாளர்களால் தொகுக்கப்பட்ட வினாத்தாள் படிவங்கள் அனைத்தும் மூடி, முத்திரையிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தன.
போட்டி துவங்கும் நேரத்தில் அவை பிரிக்கப்பட்டு, போட்டியின் பங்கேற்பாளர்களுக்கு கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டன. கிட்டத்தட்ட அரசுப் பொதுத்தேர்வு நடைமுறைகள் இப்போட்டியில் பேணப்பட்டது.
தேர்வு நடக்கவிருக்கும் அறை சகல முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் தகுந்த பாதுகாப்போடு இருத்தது. தேர்வு நடைபெற்ற அறை வாசலில் பாதுகாப்பு பொறுப்பு ஜித்தா புயல் செய்மீன் காக்காவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் பங்கெடுத்த அனைத்து மகளிரும் உற்சாகத்துடன் விடையெழுதினர். ஒரு வாரத்திற்கு முன்னரே போட்டிக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தமையால் அவர்கள் தேர்வுக்கு ஆயத்தமாகவே வந்ததை மகளிர் வழி செவிவழிச் செய்திகள் மூலம் அறிய முடிந்தது.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற தேர்வின் நிறைவில், பெறப்பட்ட விடைத்தாள்கள் பொறுப்பாளர்களால் பரிசீலிக்கப்பட்டு, முதல் 3 பரிசுகளுக்குரியோர் பெயர் அறிவிக்கப்பட்டது.
முதலிடம்:
(1) ஃபஜீனா (க.பெ. எஸ்.எச்.உதுமான்)
(2) ஸபீனா (க.பெ. ஏ.எச்.உதுமான்)
இரண்டாமிடம்:
எம்.எச்.கதீஜா பீவி (க.பெ. பாளையம் முஹம்மத் ஹஸன்)
மூன்றாமிடம்:
அஹ்மத் ஸபீனா (க.பெ. சோனா முஹம்மத் அபூபக்கர்)
போட்டிகளில் வென்றோருக்கான பரிசுகள் ஏப்ரல் மாதம் நடைபெறும் பொதுக்குழு ஒன்றுகூடலில் வழங்கப்படும் எனும் தகவலை, மன்றத் தலைவர் ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செய்தி தொடர்பாளர் எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு நடத்தப்படும் போட்டிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |