காயல்பட்டினத்தைச் சேர்ந்த - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள நோயாளிகளுக்கு, ஷிஃபாவின் அவசர கால மருத்துவ உதவி வைப்பு நிதி வகைக்காக 25 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் .
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் நல்லருளால், எமது தாய்லாந்து காயல் நல மன்றத்தின் (தக்வா) பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 06ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 13.30 மணியளவில் பாங்காக் ஜெம் ஹவுஸ் இல்லத்தில், மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையில் நடைபெற்றது.
பாங்காக் நகரில் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளதன் மூலம், தக்வாவின் புதிய உறுப்பினராகியுள்ள ஹாஃபிழ் ஏ.எம்.முஹ்யித்தீன் தம்பி கிராஅத் ஓதி, கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
கடைசியாக நடைபெற்ற மன்றத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கை, அவற்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அவற்றின் மீதான நடவடிக்கைகள் குறித்து, மன்றச் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் விளக்கிப் பேசினார்.
ஷிஃபா குறித்த தகவல்கள்:
உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ உதவித்துறை கூட்டமைப்பான ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பிடமிருந்து மன்றத்தால் பெறப்பட்ட மின்னஞ்சல்களை படித்துக் காண்பித்த அவர், ஷிஃபா மூலம் இதுவரை 42 ஏழை நோயாளிகளுக்கு 13 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய செயலாளர், ஷிஃபாவிடம் நிலுவையிலுள்ள மனுக்கள், வாரந்தோறும் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் குறித்தும் விளக்கினார்.
அவசர மருத்துவ உதவி கோரி வரும் மனுக்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்குவதற்காக, அவசர கால வைப்பு நிதி என கனிசமான ஒரு தொகையை ஒதுக்கீடு செய்ய ஷிஃபாவிடம் திட்டமுள்ளதாகவும், அந்த வகைக்காக தக்வாவும் நிதி வழங்கக் கோரியும் ஷிஃபாவிடமிருந்து பெறப்பட்ட வேண்டுகோளை கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:-
செயலர் உரை:
மருத்தவ உதவி என்பது கல்வி, தொழிலுக்கு வழங்கப்படும் உதவிகள் போன்று பட்ஜெட் போட்டு ஒதுக்கீடு செய்ய இயலாது. நோயின் தன்மை, நோயாளிகளிடமிருந்து வரும் மனுக்களின் எண்ணிக்கை ஆகியன குறித்து எவ்வித அனுமானமும் செய்யமுடியாது. ஏனெனில், புற்று நோய், இதய நோய், சிறுநீரக நோய் என பெரும் செலவை ஏற்படுத்தக் கூடிய நோய்களுக்கே அதிக மனுக்கள் வருவதைக் காண்கிறோம்.
ஆனால் நம்மிடம் சேரும் சந்தா தொகையோ குறைவு. அதைக் கொண்டு ஆண்டு தோறும் நாம் வழமையாகக் கொடுக்கும்
நமதூரிலுள்ள 3 பைத்துல்மால்களுக்கான உதவித்தொகை,
கே.எம்.டி.மருத்துவமனை ஏழைகள் நிதி,
இக்ராஃ மூலம் 5 மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை,
இக்ராஃ மற்றும் ஷிஃபாவிற்கான வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்காக நிதி,
இமாம் பிலால்களுக்கான ரமலான் ஊக்கத் தொகை,
தக்வா தானாகவோ அல்லது வேறு அமைப்புகளுடன் சேர்ந்தோ அவ்வப்போது முன்னின்று செய்யும் மேலும் சில திட்டங்களுக்கான செலவுகள்
என நிறைய செலவினங்கள் உள்ளன. எனினும், இவற்றையெல்லாம் காரணமாகக் கூறி மருத்துவ உதவிகளை வழங்காமல் இருந்துவிட முடியாது.
ஒவ்வொரு மனு வரும்போதும் - அதை அனைத்து அங்கத்தினருக்கும் அனுப்பி வைத்து, அவர்களிடமிருந்து வசூல் செய்வதும் சிரமமான காரியமாக உள்ளது. எனவே, நாம் மருத்துவத்திருக்கென ஒரு ஜகாத் நிதியை மொத்தமாக வசூல் செய்து வைத்துக்கொண்டு, அதிலிருந்து மருத்துவ மனுக்களுக்கு கொடுக்க செயற்குழுவிற்கு அதிகாரம் வழங்கினால், தேவை உடையோருக்கு தேவையான நேரத்தில் உதவியைச் சேர்க்க முடியும்..
ஷிஃபா அவசர கால மருத்துவ உதவி வைப்பு நிதி:
மேலும், ஷிஃபாவில் அவசர மருத்துவத் தேவைக்கென ஒரு தொகையை வைப்புத் தொகையாக வைத்திருக்கும் பொருட்டு எல்லா மன்றங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். இது கண்டிப்பாக தேவையான ஒன்று. சில நோய்களுக்கு அவசர தீவிர சிகிச்சை அளிக்கும் நிர்பந்தம் ஏற்படும்போது, அவசரமாக உதவ வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இந்த மாதிரி EMERGENCY FUND இருந்தால் முதலில் உதவியை அளித்து விட்டு, பின்னர் வழமை போல் மன்றங்களிடம் வசூல் செய்து கொள்ளலாம். அந்த வகைக்காக ஒரு தொகையை தக்வாவின் சார்பாக ஒதுக்கீடு செய்து கொடுக்கலாம். செயற்குழுவில் அதன் வகைக்கு ரூ.25,000 கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுக்குழுவும் அதற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டுகிறேன்.
ஷிஃபா பிரதிநிதி:
அடுத்து, ஷிஃபாவை சட்டப்படி ஓர் அமைப்பாக பதிவு செய்யவிருக்கின்றனர். தக்வாவும் அதன் செயற்குழுவில் இருப்பதால் நமது காயல் நகரப் பிரதிநியாக ஊரிலேயே அதிகம் இருக்கும் ஒருவரின் பெயரை கேட்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன் கூடிய நம் செயற்குழு - சகோதரர் என்.எஸ்.சாலிஹ் அவர்களைப் பரிந்துரைச் செய்கிறது. பொதுக்குழு வேறு யாருடைய பெயரையும் பரிந்துரை செய்தால் அதை பரிசீலனைக்கு எடுக்கலாம். (இவ்வாறு அவர் கூறியதும், அனைவரும் என்.எஸ்.ஸாலிஹ் அவர்களையே நியமிக்க அங்கீகாரம் வழங்கினர்.)
கடற்கரை தொழுமிட மேம்பாடு:
அடுத்தாக, சென்ற பொதுக்குழு கூட்டத்தில், நம்மூர் கடற்கரை தூய்மைப் படுத்துதல் முயற்சிக்கு நம் பங்கு பற்றி நான் பேசும்போது, ஒரு சகோதரர் கடற்கரை தொழுமிடத்தில் நாய்கள் சுற்றித் திரிவதாகவும், அந்த இடத்தை அசுத்தம் செய்வதைத் தான் பார்த்ததாகவும் அதை நிறுத்த ஒரு முயற்சி எடுக்கலாமே என்றும் சொன்னார்.
இன்னொரு சகோதரர் கடற்கரையில் மக்ரிப் இமாம் ஜமாஅத்துடன் தொழச் சென்றால் ஒழு செய்யும் இடத்தில் கூட்டமாக இருப்பதால் ஜமாஅத் தவறி விடுகிறது. எனவே அங்கு தக்வா சார்பாக குழாய் வசதி ஏற்படுத்திக் கொடுக்கலாமே என்றும் பேசினார்.
கடற்கரை தொழுமிடம் குருவித்துறைப் பள்ளி நிர்வாகத்திற்கு உட்பட்டதாகும். அவர்களிடம் நாம் கோரிக்கையை வைக்கலாம். ஆனால், அவர்கள் அனுமதி தந்தாலும் நம்மால் மட்டும் இதைச் செய்ய இயலாது. ஏனெனில், நாய்களை விட்டும் பாதுகாப்பதற்கு, சுற்றி வேலி அமைக்க வேண்டும் அல்லது தொழுமிடத்தை உயர்த்திக் கட்ட வேண்டும். அடுத்து, ஒழு செய்யும் இடத்தில் குழாய் அமைப்பதற்கு முதலில் மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டும், மேலும் நீர் உறிஞ்சி, மின் வசதி, இவற்றுக்கென ஓர் அறை என பல கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு அதிக செலவு ஆகும்.
ஆரம்பமாக, பள்ளி நிர்வாகத்திற்கு தக்வாவின் சார்பாக இது சம்பந்தமாக ஒரு மடல் எழுதுவோம், சாதகமான பதில் வருவதைப் பொருத்து, அடுத்த கூட்டத்தில் நம் பங்களிப்பை இன்ஷா அல்லாஹ் முடிவு செய்யலாம்.
இவ்வாறு தக்வா செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் பேசினார்.
தலைவர் உரை:
மன்ற உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் பேசினார். அவரது உரைச்சுருக்கம்:
நிதி திரட்ட தனிக்குழு:
மருத்துவத்திற்கு உதவ அதிக நிதி தேவைப்படுவதால் நம் சந்தாவிலிருந்து கொடுக்க முடியாத நிலைமையில் இருக்கிறோம். ஜகாத் மற்றும் நன்கொடை மூலம் திரட்டுவதுதான் சிறந்தது. எனவே அதைத் திரட்ட ஒரு துணைக் குழுவைத் தேர்ந்தெடுப்போம். அவர்கள் அந்த நிதியைத் திரட்டித் தருவார்கள். இதில் யாரையும் கட்டாயப் படுத்தி வாங்க மாட்டார்கள்.
ஆனால், நீங்கள் உங்களால் முடிந்த அளவு அதிகம் அதிகம் கொடுக்க முயலுங்கள். ஏனெலில், மருத்துவச் செலவிற்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது. நீங்கள் உங்கள் ஜகாத் தொகையிலிருந்து தாராளமாகக் கொடுக்கலாம்.
என்னுடைய கருத்து
பொருளாளர் என்.எஸ்.ஹனீபா,
துணைச் செயலாளர் எம்.எச்.அபுல் மஆலீ,
ஆர்.காஜா நவாஸ்
ஆகிய மூவரையும் மருத்துவ நிதி வசூல் செய்யும் பொறுப்பாளர்களாக நியமிக்கலாம். பொதுக்குழு இதை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இமாம் - பிலால் ஊக்கத் தொகை திட்டத்திற்கு நிதி திரட்ட தனிக்குழு:
அடுத்து, நமதூர் பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம் - பிலால்களுக்கான ரமழான் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு வசூல் செய்யும் பொறுப்பைக் கவனிக்கவும், அது தொடர்பாக காயல் நல மன்றங்கள் மற்றும் தனி நபர்களைத் தொடர்பு கொள்வதற்கும்
1, ஆர்.காஜா நவாஸ்,
2, காதர் சுலைமான்,
3, ஹாஃபிழ் எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப்,
4, கே.எஸ்.எம்.பி.ஸூஃபீ ஹுஸைன்
ஆகியோரைப் பொறுப்பாளர்களாக நியமிக்கலாம்.
(இவ்வாறு, தலைவரால் முன்மொழியப்பட்ட பொறுப்பாளர்கள் நியமனத்திற்கு, கூட்டம் ஒப்புதல் அளித்தது.)
ஷிஃபா அவசர கால உதவிக்காக ரூ.25,000 வழங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அடுத்து, பொருளாளர் என்.எஸ்.ஹனீபா வரவு செலவு கணக்கறிக்கையைத் தாக்கல் செய்தார். இவ்வாண்டு கொடுக்கவுள்ள ஒதுக்கீடுகள், அழகிய கடனாகக் கொடுக்கப்பட்டவை பற்றிய தகவல்களையும் அளித்தார்.
டபிள்யு.எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் நன்றி கூறினார். மவ்லவீ ஷாதுலீ ஃபாஸீ துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
மண விருந்து:
நிறைவில், தக்வா அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ் அவர்களது மகன் புதிதாக திருமணம் செய்துகொண்ட - யு.மொகுதூம் முஹம்மத் சார்பில் அனைவருக்கும் மீன் பிரியாணி மதிய உணவாக விருந்துபசரிப்பு செய்யப்பட்டது. மன்ற அங்கத்தினர் 45 பேர், காயல்பட்டினத்திலிருந்து விடுமுறையில் ஊர் வந்திருந்த சிலர், சிறுவர் - சிறுமியர் என மொத்தம் 60 பேர் இவ்விருந்தில் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல் & படங்கள்:
கம்பல்பக்ஷ் எஸ்.ஏ.அஹ்மத் இர்ஃபான்
ஹாஃபிழ் மிஸ்கீன் ஸாஹிப் |