சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றம் இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து நடத்திய - காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்ற அறிவியல் கண்காட்சிப் போட்டியில், சீனியர் பிரிவில் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியும், ஜூனியர் பிரிவில் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியும் முதலிடம் பெற்றுள்ளன. விபரம் வருமாறு:-
அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டி:
பள்ளி மாணவ-மாணவியரிடையே புதைந்து கிடக்கும் அறிவியல் திறனை வெளிக்கொணரும் நோக்குடன், சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நற்பணி மன்றம் சார்பில் - காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பள்ளிகளுக்கிடையிலான அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டி 2011ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
பங்கேற்ற பள்ளிகள்:
மூன்றாமாண்டு போட்டி, 18.10.2014 சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற்றது. இப்போட்டியில், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மற்றும் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, கமலாவதி மேனிலைப்பள்ளி, விஸ்டம் பப்ளிக் பள்ளி, காஞ்சி சங்கரா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, செயின்ட் தாமஸ் மேனிலைப்பள்ளி, செந்தில் குமரன் மேனிலைப்பள்ளி, செயின்ட் ஜோஸப் மேனிலைப்பள்ளி ஆகிய - காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், திருச்செந்தூர் பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளிலிருந்து மொத்தம் 94 மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.
விஞ்ஞான ஆய்வுக்கூடங்கள், காய்கறிகள், தோட்டங்கள், சூரிய ஒளி அடிப்படையிலான அறிவியல் அம்சங்கள், கொள்ளளவை அடைந்ததும் மோட்டர் இயக்கத்தைத் துண்டிக்கும் தானியங்கிக் கருவி,புற்று நோய் காரணிகள், சுற்றுச் சூழல் பேணல் உள்ளிட்டவற்றை மாணவ-மாணவியர் காட்சிப் பொருட்களாக வைத்திருந்தனர்.
தத்தம் பள்ளிகளுள் தனித்தனியே போட்டி நடத்தி, அதில் சிறப்பிடம் பெறும் மாணவ-மாணவியரை கண்காட்சிப் போட்டியில் பங்கேற்கச் செய்யுமாறு போட்டி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவியரே இப்போட்டியில் பங்கேற்றனர்.
காலை 10:30 மணியளவில் அறிவியல் கண்காட்சிப் போட்டியை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் துவக்கி வைத்தார். காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்திருந்த பார்வையாளர்கள் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களைக் கண்டுகளித்தனர்.
விஞ்ஞான விந்தைகள் நிகழ்ச்சி:
புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ.சுப்பையா பாண்டியன் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ், பின்வருமாறு சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்:-
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ள முனைவர் திரு ஏ.சுப்பையா பாண்டியன் அவர்கள், நோபல் பரிசு பெற்ற சர். சி.வி.ராமன் போன்றோரை அங்கத்தினராகக் கொண்ட Indian National Institute of Science - INCIயின் மூலம், 2012ஆம் ஆண்டில் நல்லாரிசிரியர் விருது பெற்றவர்.
முன்பு மக்கள் தொலைக்காட்சியிலும், தற்போது தமிழன் தொலைக்காட்சியிலும் அறிவியல் விந்தை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியின் முதல்வராக தற்போது பணியாற்றி வருகிறார்.
இவ்வாறு, சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுகவுரை அமைந்திருந்தது. அறிமுகவுரையைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் முனைவர் ஏ.சுப்பையா பாண்டியன், FUN WITH SCIENCE எனும் விஞ்ஞான விந்தைகள் நிகழ்ச்சியை நடத்தினார். இதில் பள்ளி மாணவ மாணவியரும், பெற்றோரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மக்கள் பொதுவாக அறிந்து வைத்துள்ள அறிவியல் அடிப்படை அம்சங்களிலிருந்தே அவர் புதுப்புது விஞ்ஞான விந்தைகளை நிகழ்த்தியது மாணவ-மாணவியர் உள்ளிட்ட பார்வையாளர்களை மெய்ச்சிலிர்க்க வைத்தது.
மதிப்பீட்டு நிகழ்ச்சி:
விஞ்ஞான விந்தைகள் நிகழ்ச்சியை நிறைவு செய்த பின், மதியம் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவ-மாணவியர் வைத்திருந்த காட்சிப் பொருட்களை பார்வையிட்டு பரிசீலித்து பரிசுக்குரியவற்றை சிறப்பு விருந்தினர் முனைவர் ஏ.சுப்பையா பாண்டியன் தேர்வு செய்தார்.
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த காட்சிப் பொருட்களில், புதுமையான சிந்தனையின் அடிப்படையில் காட்சிப் பொருட்களை வைத்திருந்த சில மாணவ-மாணவியரை அவர் பாராட்டினார்.
அனைவருக்கும் மதிய உணவு:
கண்காட்சிப் போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவியர், அவர்களுடன் இணைந்து வந்திருந்த ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவருக்கும், தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், காலை-மாலையில் தேனீர் மற்றும் சிற்றுண்டியும், மதிய உணவு விருந்துபசரிப்பும் செய்யப்பட்டது.
பரிசளிப்பு விழா:
அன்று மாலை 05.15 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். சகோதரர்அரபி எம்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் ஸூஃபீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் ஏ.முஹம்மத் இத்ரீஸ் வரவேற்புரையாற்றியதோடு, நிகழ்ச்சியறிமுகவுரையும் ஆற்றினார்.
மாணவ-மாணவியரிடையே புதைந்து கிடக்கும் அறிவியல் திறமையை வெளிக்கொணர்ந்து ஊக்கப்படுத்தும் நோக்கத்துடனேயே இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
பரிசளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கிய - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையுரையாற்றினார்.
விழாவில் முன்னிலை வகித்த - இந்திய குடியரசுத் தலைவரின் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்ற – காஞ்சி சங்கரா மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியை செல்வ வைஷ்ணவி வாழ்த்துரையாற்றினார்.
விடுமுறையில் தாயகம் வரும் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள், பகுதி மக்களின் கல்வி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டு, இதற்கென நேரம் ஒதுக்கி இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவது மிகுந்த பாராட்டிற்குரியது என்று அவர் வெகுவாக புகழ்ந்து பேசினார்.
அவரைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் முனைவர் ஏ.சுப்பையா பாண்டியன் சிறப்புரையாற்றினார்.
பரிசளிப்பு விழாவிற்குத் தலைமை வகித்த, வாழ்த்துரைகள் வழங்கிய அனைவருக்கும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
பரிசு பெற்றோர் விபரம்:
09 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர் சீனியர் பிரிவிலும், 06 முதல் 08ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர் ஜூனியர் பிரிவிலும் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட கண்காட்சிப் போட்டிகளில், இரு பிரிவுகளிலும் முதல் மூன்றிடங்களைப் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சீனியர் பிரிவில் பரிசு பெற்றோர்:
முதல் பரிசு - ரூபாய் 8 ஆயிரம்:
எம்.ஏ.கே.சித்தி மதனீ - எம்.எஸ்.ஃபாத்திமா முனவ்வரா
(எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம்)
இரண்டாவது பரிசு - ரூபாய் 6 ஆயிரம்:
எம்.ஏ.தாஹிர் - ஏ.சி.ஹமீத் சுலைமான்
(எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம்)
மூன்றாவது பரிசு - ரூபாய் 4 ஆயிரம்:
ஜே.டயானா - ஏ.ஜெய்னுல் அரஃபா
(அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம்)
ஜூனியர் பிரிவில் பரிசு பெற்றோர்:
முதல் பரிசு - 6 ஆயிரம்:
எம்.எம்.நாச்சி நஸ்னீன் - ஏ.எஸ்.மர்யம் மாஜியா
(சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம்)
இரண்டாவது பரிசு - ரூபாய் 4 ஆயிரம்:
எஸ்.எம்.ஏ.நஃபீஸத்துல் மிஸ்ரிய்யா
(முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம்)
மூன்றாவது பரிசு - ரூபாய் 3 ஆயிரம்:
எம்.பாரதி கணேஷ் - எஸ்.ஸ்ரீஹரிவாஷ்
(கமலாவதி மேனிலைப்பள்ளி, சாகுபுரம்)
பரிசுகளை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், காஞ்சி சங்கரா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை செல்வ வைஷ்ணவி, புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ.சுப்பையா பாண்டியன் ஆகியோர் வழங்கினர்.
கண்காட்சியில் பங்கேற்கும் மாணவ-மாணவியர், அறிவியல் சார்ந்த சொந்தக் கண்டுபிடிப்புகளையேகண்காட்சியில்வைக்கவேண்டும்... அவைபுத்தகங்கள், இணையதளங்களின் மூலம் அறிந்து செய்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்... எனினும், கண்காட்சியில் பொருட்களை வைப்போர், அவை குறித்த முழு விளக்கங்களை தெளிவாக விளக்க வேண்டும்.. என்பன போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையிலேயே பரிசுக்குரியோர் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் சான்றிதழ்கள்:
கண்காட்சிப் போட்டியில் பங்கேற்ற அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருக்கான சான்றிதழ்கள் அவர்கள் சார்ந்த பள்ளிகளில் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நினைவுப் பரிசுகள்:
பரிசளிப்பு விழாவில் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கிய காஞ்சி சங்கரா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை செல்வ வைஷ்ணவி அவர்களுக்கு, தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் ஏ.முஹம்மத் இத்ரீஸ் அவர்களும், சிறப்பு விருந்தினர் முனைவர் ஏ.சுப்பையா பாண்டியன் அவர்களுக்கு தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் அவர்களும், தலைமை வகித்த காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அவர்களுக்கு, இந்நிகழ்ச்சிகளை இணைந்து நடத்திய இக்ராஃ கல்விச் சங்க தலைவரும் - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் தலைவருமான ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் அவர்களும் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் மற்றும் பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான் ஆகியோருக்கு முனைவர் ஏ.சுப்பையா பாண்டியன் சால்வை அணிவித்து பாராட்டினார்.
இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது. பரிசளிப்பு விழாவில், அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருடன் அந்தந்த பள்ளிகளின் நிர்வாகிகள் - ஆசிரியர்கள் - பெற்றோர் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஏற்பாடு:
விழா ஏற்பாடுகளை, தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர், துணைத்தலைவர் ஆகியோருடன், அதன் செயற்குழு உறுப்பினர் எம்.எம்.புகாரீ, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி, பொருளாளர் உட்பட தம்மாம் காயல் நற்பணி மன்றம், இக்ராஃ கல்விச் சங்க அங்கத்தினர் செய்திருந்தனர்.
தகவல்:
சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன்
(துணைத்தலைவர் - தம்மாம் காயல் நற்பணி மன்றம்)
படங்கள்:
இப்றாஹீம் ஃபைஸல்
மற்றும் குழுவினர்
தம்மாம் காயல் நல மன்றத்தின் சார்பில் 2012ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சிப் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தம்மாம் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |