வீடுகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துவித நுகர்வோர்களுக்குமான மின் கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மின் கட்டண உயர்வு வெள்ளிக்கிழமை (டிச.12) முதல் அமலுக்கு வரும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தானாக முன்வந்து மின் கட்டணம் (electricity tariff) மற்றும் மின் செலுத்துதல் கட்டணங்களை (Transmission tariff) மாற்றி அமைப்பது தொடர்பான பொது அறிவிப்பினை 23-9-2014 மற்றும் 24-9-2014 அன்று
முன்னோடி செய்தித்தாள்களிலும் ஆணையத்தின் இணையதளத்திலும் வெளியிட்டு பொதுமக்கள் / சம்மந்தப்பட்ட நபர்களின் ஆட்சேபனைகள் / ஆலோசனைகள் கோரப்பட்டன.
ஆட்சேபனைகள் / ஆலோசனைகள் அனுப்புவதற்கான கடைசி நாள் 31-10-2014 என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆணையத்தின் மின் கட்டணம் மற்றும் மின் செலுத்துதல் கட்டணங்களை மாற்றியமைப்பதற்கான செயற்குறிப்பு 13-10-2014 அன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மாநில ஆலோசனைக் குழுவின் 28வது கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. ஆணையத்தின் இந்த செயற்குறிப்பு மீது பொதுமக்கள் /
சம்மந்தப்பட்ட நபர்களின் ஆட்சேபனைகள் / ஆலோசனைகள் பெறுவதற்காக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் 24-10-2014 அன்று சென்னையிலும், 28-10-2014 அன்று திருநெல்வேலியிலும் மற்றும் 31-10-2014 அன்று ஈரோட்டிலும் நடத்தப்பட்டன.
பொதுமக்கள் / சம்மந்தப்பட்ட நபர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகள் / ஆலோசனைகளை கருத்தில் கொண்டு பல்வேறு மின்நுகர்வோர் வகையினருக்கான மின் கட்டணம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்திற்கான மின் செலுத்துதல் கட்டணங்களை பின்னினைப்பில் கண்டுள்ளவாறு 12.12.2014 முதற்கொண்டு நடைமுறைக்கு வருமாறு ஆணையம் மாற்றி அமைத்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வு
அனைத்து நுகர்வோர் வகையினருக்கும் 15 விழுக்காடு அளவு இருக்கும்.
செயலாளர்
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்
சென்னை – 600 008
- என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்களுக்கு குறைப்பு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக அறிவித்த உத்தேசக் கட்டண உயர்விலிருந்து கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்குப் பிறகு தொழில் நிறுவனங்கள், உயர் மின் அழுத்தப் பிரிவினருக்கு அறிவித்த உத்தேச மின் கட்டண உயர்வு குறைக்கப்பட்டுள்ளது.
குறைந்த மின் அழுத்தப் பிரிவில் தொழில் நிறுவனங்களுக்கு உத்தேசக் கட்டண உயர்வு யூனிட் ஒன்றுக்கு ரூ.5.50-லிருந்து ரூ.7.22-ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. இது யூனிட் ஒன்றுக்கு ரூ.6.35 என்ற விகிதத்தில் குறைக்கப்பட்டுள்ளது. உயர் மின் அழுத்தப் பிரிவிலும் இதே அளவில் உத்தேசக் கட்டண விகிதத்திலிருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
உயர் மின் அழுத்தப் பிரிவில் ரயில்வேக்கு அறிவிக்கப்பட்ட உத்தேச மின் கட்டண உயர்வு யூனிட் ரூ.7.22-லிருந்து ரூ.6.35-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. வர்த்தகப் பயன்பாடுக்கு யூனிட் ஒன்றுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.8.05-லிருந்து ரூ.8-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross