கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கி வரும் பெங்களூரு காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சிகள், மழலையர் - பெரியோருக்கான பல்சுவைப் போட்டிகள் மற்றும் களறி விருந்துடன் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் இப்றாஹீம் நவ்ஷாத் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது பெங்களூரு காயல் நல மன்றத்தின் 6ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்குழுக் கூட்டம் மற்றும் 2ஆவது காயலர் சங்கம நிகழ்ச்சிகள், பெங்களூரு தேவனஹல்லியிலுள்ள ஆடிட்டர் புகாரீ ஃபார்ம் ஹவுஸ் தோட்டத்தில், இம்மாதம் 07ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.
முன்னேற்பாடுகள்:
பல நாட்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டு, சுமார் ஒரு மாத கால ஏற்பாட்டுப் பணிகளையடுத்து இப்பொதுக்குழுக் கூட்டமும், குடும்ப சங்கம நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளன.
நிகழ்வு நாளுக்கு முந்திய நாளான சனிக்கிழமையன்று, மன்ற நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் குழு, பெங்களூரு நகரிலிருந்து சுமார் 1 மணி நேர வாகனப் பயணத் தொலைவிலுள்ள இத்தோட்டத்திலேயே முகாமிட்டு, ஏற்பாட்டுப் பணிகளைச் சிரமேற்கொண்டு செய்திருந்தது.
இருக்குமிடத்தை இன்பமயமாக்கும் பொருட்டு சிக்கன் பார்பிக்யூ சூட்டுக்கறி, இரவுக் குளியலுடன் ஏற்பாட்டுக் குழுவினர் பணிகளைச் செய்திருந்தனர். ஏற்பாட்டுக் குழுவினரின் முந்தை நாள் உணவு ஏற்பாடுகள் அனைத்திற்கும் குழுவினர் தம் சொந்தச் செலவிலேயே முழுப் பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காயலர் ஒன்றுகூடல்:
நிகழ்வு நாளான டிசம்பர் 07 ஞாயிற்றுக்கிழமையன்று 08.00 மணி துவங்கி, 10.00 மணி வரை - மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் நிகழ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர். நாற்சக்கர வாகனம் வைத்திருந்தோர் தம் குடும்பத்தினருடன் நிகழ்விடம் வந்தனர். வாகன வசதியற்ற உறுப்பினர்களுக்காக, மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேன் வாகனத்தில் இதர உறுப்பினர்கள் நிகழ்விடம் வந்தனர்.
காலைச் சிற்றுண்டி:
முற்றிலும் மரங்கள் அடர்ந்து சோலைவனமாகக் காட்சியளிக்கும் இத்தோட்டத்தில், தங்கும் வீட்டின் மாடியிலேயே பலர் குளிக்கும் வகையில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. நெடுந்தொலைவிலிருந்து வந்து சேர்ந்ததால் அலுப்பிலிருந்த பலர், வந்த வேகத்தில் குளியல் தொட்டிக்குள் விழுந்து இன்பக் குளியல் நடத்தினர். கட்டிடத்தின் தென்புறத்தில் சுண்டலுடன் சுவையான இஞ்சி தேனீர் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. மறுபுறத்தில், மதிய உணவு ஆயத்தம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.
பொதுக்குழுக் கூட்டம்:
11.15 மணியளவில் மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், ஹாஃபிழ் எம்.எம்.அப்துல்லாஹ் ஸாஹிப் கிராஅத்துடன் முறைப்படி துவங்கியது. ஹாஃபிழ் அப்துல்லாஹ் முஹாஜிர், ஹாஃபிழ் மன்னர் செய்யித் அப்துர்ரஹ்மான் ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். கம்பல்பக்ஷ் எம்.எம்.ஷாஹுல் ஹமீது் வரவேற்புரையாற்றினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
மன்றத்தின் கடந்த கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் இதுநாள் வரையிலான செயல்பாடுகள் மற்றும் சேவைகள் குறித்து, செயலாளர் இப்றாஹீம் நவ்ஷாத் விபரப் பட்டியலுடன் விளக்கிப் பேசினார்.
தலைமையுரை:
இப்பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தபோதிலும், தொழில் தேவைக்காக மன்றத் தலைவர் பீ.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் வெளிநாடு சென்றுள்ளதால், துணைத்தலைவர் விஞ்ஞானி ‘ஹனீவெல்’ இப்றாஹீம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார்.
மன்றத் தலைவரின் ஏற்பாடுகளையும், மன்ற நடவடிக்கைகளுக்கான அவரது வழிகாட்டல்கள் மற்றும் ஊக்கத்துடன் கூடிய செயல்பாடுகளையும் புகழ்ந்து பேசிய அவர், இத்தனை ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, நிகழ்வில் தலைவர் கலந்துகொள்ள இயலாமல் போனது குறித்து வருந்திப் பேசினார்.
மன்ற உறுப்பினர்கள் தங்களாலியன்ற ஒத்துழைப்புகளைத் தந்துகொண்டிருப்பதாகவும், இன்னும் ஊக்கத்துடன் செயல்பட்டால், இதர காயல் நல மன்றங்களைப் போலவோ அல்லது அவற்றை விட மேலாகவோ பெங்களூரு காயல் நல மன்றமும் நகர்நலப் பணிகளாற்றும் என்று அவர் தனது ஆவலை வெளிப்படுத்திப் பேசினார்.
Mentor & Mentee Programme:
மன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Mentor & Mentee செயல்திட்டம் குறித்து ‘ஹனீவெல்’ ஜபரூத் விளக்கிப் பேசினார்.
இத்திட்டத்தை நகரில் செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையிலும், போதிய விழிப்புணர்வின்மை காரணமாக, மாணவர்கள் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று குறைபட்டுப் பேசிய அவர், இதுகுறித்து நகரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருக்கும் முழுமையாக விளக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் வாவு முஹம்மத் கூட்டத்தில் சமர்ப்பித்து, ஒப்புதலைப் பெற்றார்.
மூத்த உறுப்பினர்கள் உரை:
தொடர்ந்து, மன்றத்தின் மூத்த உறுப்பினர்களான மவ்லவீ ஷேக்னா மஹ்ழரீ, ஆடிட்டர் அப்துர்ரஹ்மான் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
பிற மன்றங்களுடன் ஒப்பிடுகையில், பெங்களூரு மன்றத்தின் பணிகள் இன்னும் மெருகேற்றப்பட வேண்டும் என்றும், அதற்கு அனைத்து உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்பும், ஊக்கத்துடன் கூடிய செயல்திறனும் மிகவும் அவசியப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஏழை மாணவர் ஒருவரது பட்டப்படிப்பிற்கான முழுக் கல்விச் செலவினத்திற்கும் - மன்றத்தின் சார்பில் தான் பொறுப்பேற்பதாக ஆடிட்டர் அப்துர்ரஹ்மான் தனதுரையில் அறிவித்தார். அதற்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
பெங்களூருவில் வேலைவாய்ப்பு பெற்று, மன்றத்தில் புதிதாக உறுப்பினர்களாகியுள்ள நிஹாத் (Zumi Solution), ஜாஸிர் (Zumi Solution) ஆகியோர் தம்மை கூட்டத்தில் அனைவருக்கும் அறிமுகம் செய்துகொண்டனர். பங்கேற்றோர் அவர்களுக்கு வரவேற்பளித்தனர்.
சிறப்பு விருந்தினர்கள் உரை:
காயல்பட்டினம் நகரப் பிரமுகர் பாளையம் ஹபீப் முஹம்மத், சென்னையில் பணியாற்றும் – பெங்களூரு காயல் நல மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவரும், காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் செயற்குழு உறுப்பினருமான கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், காயல்பட்டினம் ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
அவர்களது உரைச் சுருக்கம் வருமாறு:-
பாளையம் ஹபீப் முஹம்மத்:
விரல் விட்டு எண்ணுமளவில் உறுப்பினர்களைக் கொண்டு துவக்கப்பட்ட இம்மன்றம் இன்று இத்தனை பேரைக் கொண்டு சிறப்புற இயங்கி வருவதையறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
உலகம் முழுக்க காயலர்கள் வாழுமிடங்களிலெல்லாம் காயல் நல மன்றங்களை அமைத்து சிறப்புற சேவையாற்றி வருகின்றனர். அனைத்து மன்றங்களோடும் போட்டி போட்டு, இம்மன்றம் தனது சேவையை இன்னும் முடுக்கிவிட வேண்டும்.
எந்த மன்றத்திற்கும் இல்லாத சிறப்பாக இம்மன்றத்தின் சார்பில் தங்கும் விடுதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பயனளிக்கத்தக்க இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி, நம் நகரின் மாணவ சமுதாயம் ஏற்றம் காண வழிவகை செய்திட வேண்டும்.
எல்லா நல மன்றங்களின் நடவடிக்கைகளும் உடனுக்குடன் செய்தியாக வெளியிடப்படுகையில், இம்மன்றத்தின் செய்திகள் மிகவும் தாமதமாகவே வந்துகொண்டிருக்கிறது. இக்குறை போக்கப்பட வேண்டும்.
HOME திட்டத்தை அறிமுகப்படுத்தி, ஆண்டுதோறும் தகுதியுள்ள ஒருவருக்கு குறைந்த செலவில் வீடு கட்டிக் கொடுக்கலாம்.
நான் அங்கம் வகிக்கும் மக்கா மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில் ஐ.ஏ.எஸ். அகடமி சிறப்புற செயல்பட்டு வருகிறது. அதனை நமதூர் மக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது விஷயத்தில் இம்மன்றம் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். தேவையான ஒத்துழைப்புகளை வழங்க நானும் ஆயத்தமாக உள்ளேன்.
K.K.S.ஸாலிஹ்:
2009ஆம் ஆண்டு வெறும் 12 காயலர்களை மட்டும் உறுப்பினர்களாகக் கொண்டு துவக்கப்பட்ட நம் மன்றம், இன்று தங்கும் விடுதி, வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரல் என பல வழிகளில் சேவைகளாற்றி, பல காயலர்கள் பெங்களூருவில் வசிக்கக் காரணமாகத் திகழ்வது மகிழ்வளிக்கிறது.
இம்மன்றத்தைத் துவக்குவதற்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி, ஊக்கப்படுத்தி, கண்காணித்து, தூண்டிக்கொண்டேயிருந்த எஸ்.கே.ஸாலிஹ் அவர்களை இத்தருணத்தில் நான் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
ஓர் அமைப்பைத் துவக்குவது பெரிதல்ல; அதை சிறப்புற நடத்திச் செல்வதே பெரியது. அந்த அடிப்படையில், நம்மாலியன்ற சேவைகளை நம் நகருக்கு நாம் வழங்கி வருகிறபோதிலும், இவையே போதும் என்று இருந்துவிடாமல், அனைத்து உறுப்பினர்களும் இன்னும் ஊக்கத்துடனும், உத்வேகத்துடனும் குழுப்பணியாற்றிட முன்வர வேண்டும். ஒவ்வொருவரும், நான் எந்த வகையில் இம்மன்றத்திற்கு உதவலாம் என ஓர் இலக்கை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டால் இறையருளால் எல்லாமே இலகுவாக நடந்தேறும்.
இத்தனை மகிழ்ச்சிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்நிகழ்வுகளில் என்னையும் மறக்காமல் அழைத்து, நல்ல உபசரிப்பை வழங்கியமைக்காக எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன். நான் எங்கு சென்றபோதிலும், என் மனம் பெங்களூரு காயல் நல மன்றத்தோடு பிண்ணிப் பிணைந்தே இருக்கும். இம்மன்றத்திற்கு என்னாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் எங்கிருந்தாலும் இன்ஷாஅல்லாஹ் வழங்குவேன்.
எஸ்.கே.ஸாலிஹ்:
இம்மன்றம் இன்று இவ்வளவு சிறப்பாக செயல்பட ஏதோ ஒரு வகையில் தூண்டியதை எண்ணி பெருமிதமடைகிறேன். மன்ற உறுப்பினர்கள் - தாம் இங்கு இருக்கும் காலத்தில், தங்களது இலக்குகளை நிர்ணயித்து மன்றத்திற்கு ஒத்துழைப்பளித்தால், இதன் பணிகள் மிகவும் சிறப்புறும்.
இதர மன்றங்களோடு ஒப்பிட்டு, உங்களையே நீங்கள் தாழ்த்திக்கொள்ள எந்த அவசியமும் இல்லை. அவரவர் தகுதிக்கேற்ப நகர்நலப் பணிகளாற்றி வரும் நிலையில், அடிக்கடி இடமாற்றமாகும் நிலையிலிருப்பதால் உங்களாலான பணிகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறீர்கள். இவையே போதும் என்று இருந்துவிடத் தேவையில்லை. இன்னும் என்னென்ன செய்யலாம் என முன்பே திட்டமிட்டு பணிகளை வகைப்படுத்தி செய்யலாம்.
என்னைப் பொருத்த வரை, வெளிநாடுகளில் பணியாற்றுவதை விட, வளமான வாய்ப்புகள் அமையுமானால் இதுபோன்ற உள்நாட்டு நகரங்களில் பணியாற்றுவதையே நான் மேலாகக் கருதுகிறேன். இது சரியெனப்பட்டால், நமதூரின் தகுதியுள்ள பலருக்கு இந்நகரில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதை இம்மன்றத்தின் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பெங்களூரில் பணியாற்றும் பல காயலர்கள் இன்னும் கூட இம்மன்றத்தில் இணைய வாய்ப்பு ஏற்படவில்லை என்பதை அறிகையில், மனம் ஆதங்கப்படுகிறது. அவர்களை மன்ற நிர்வாகத்தின் சார்பில் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
மன்றச் செய்திகள் தாமதமாவதற்கு நான்தான் முக்கிய காரணமாக இருப்பேன் என்று கருதுகிறேன். இம்மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவரும், தற்போதைய சிறப்பு விருந்தினருமான தம்பி கே.கே.எஸ்.ஸாலிஹ் இங்கிருந்த வரை, செய்தி வாசகங்களை அவர் எழுதி எனக்கு அனுப்பி வைப்பார். தட்டச்சு செய்வது மட்டுமே என் பணியாக இருக்கும். தற்போது அந்த வாய்ப்பு இல்லாத காரணத்தால், முழுச் செய்தியையும் வடிவமைத்துத் தருவதாக நான் பொறுப்பேற்றுக்கொண்ட போதிலும், எனது இடைவெளியில்லாத பணிப்பளு காரணமாக உடனுக்குடன் செய்து தர இயலவில்லை. அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
இம்மன்றத்தின் தலைவர் ஜெய்த் நூருத்தீன் எனது பள்ளித் தோழர். அமைதியாகப் புரட்சி செய்யக்கூடியவர். அவரது பொறுப்புக் காலத்தை இம்மன்றம் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய ஐ.டீ. நிறுவனத்தை சொந்தமாகத் துவக்கியுள்ள அவருக்கு எல்லாம்வல்ல அல்லாஹ் நிறைவான வெற்றிகளை அளிக்க வேண்டும் என பிரார்த்திப்பதோடு, அவரது நிறுவனத்தில் - தகுதி வாய்ந்த காயலர்களுக்கு முன்னுரிமையளித்து வேலைவாய்ப்பளிக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறேன்.
மன்றப் பணிகளை மெருகேற்ற, சிங்கப்பூர் காயல் நல மன்றம் போல, Term Members எனும் துணைக் குழுவை 6 மாத பொறுப்பு காலத்திற்கு சுழற்சி முறையில் நியமிக்கலாம். இதன் மூலம், செயற்குழுவினர் தவிர, பொதுக்குழு உறுப்பினர்களும் மன்ற நடவடிக்கைகளில் தொடராக ஈடுபட வாய்ப்பேற்படும். மேலும், மன்றத்தின் ஒவ்வொரு செயற்குழுக் கூட்டத்திலும், சிறப்பழைப்பாளர்களாக சில பொதுக்குழு உறுப்பினர்களை மாறி மாறி அழைக்கலாம்.
நமக்காக வகை வகையாக பெருநாள் உடைகளை ஒன்றுக்கும் மேலாக எடுத்து மகிழ்கிறோம். இரு பெருநாட்களின்போதும், நமதூரிலுள்ள மிகவும் தேவையுடையோரைக் கண்டறிந்து, ஒவ்வொரு குடும்பத்தினரும் தம் குடும்பத்தின் சார்பில் ஒருவருக்கோ, பலருக்கோ பெருநாள் உடைகளை சேர்த்து வாங்கி, மன்றத்தின் சார்பில் வினியோகிக்கலாம். இது அவர்களின் மிகப்பெரிய தேவையை இலகுவாகப் பூர்த்தி செய்யும்.
நாங்கள் படித்த காலத்தில் இதுபோன்ற நல மன்றங்களோ, உதவி செய்யும் அமைப்புகளோ, தங்குமிடங்களோ இல்லாததால், பலருக்குத் தகுதியிருந்தும் மேற்படிப்பு, வேலைவாய்ப்புகள் அமையாமலே போய்விட்டது. இன்றைய மாணவ சமுதயாத்தினர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் இதுபோன்ற நல அமைப்புகளை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்காக அமைப்புகளும் நன்றாகப் பயன்படும் வகையில் தம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினர்.
நினைவுப் பரிசுகள்:
சிறப்பு விருந்தினர்கள் மூவருக்கும் மன்றத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டது.
ஜாஃபர் ஸுலைமான் நன்றியுரையாற்றினார். துவக்கமாக எல்லாம்வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்து உரையைத் துவக்கிய அவர், நிகழ்வுகள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடந்தேற - அனைத்து வசதிகளுடன் கூடிய இவ்விடத்தைத் தந்துதவியமைக்காக மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி குடும்பத்தினருக்கும், ஒலிபெருக்கி அமைப்புகளைச் செய்தளித்த ‘நேஷனல்’ ஜுல்ஃபீ மற்றும் மன்றத்தின் மகளிர் குழுவினருக்கும், காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி சமையல் செய்தளித்த சமையலர் காதருக்கும், மன்ற ஏற்பாட்டுப் பணிகளைச் செய்த மன்னர் செய்யித் அப்துர்ரஹ்மான், வி.டி.என்.மஹ்மூத், குலாம், ஷேக் சுலைமான், ஷேக் அப்துல் காதிர் உள்ளிட்டோருக்கும், நிகழ்வுகளுக்கான டிஜிட்டல் பதாகையை வடிவமைத்துத் தந்தமைக்காக அபூதபீயிலிருக்கும் பொறியாளர் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீனுக்கும், அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைத்து, முறையான வழிகாட்டல்களை வழங்கியமைக்காக மன்றத் தலைவர் பீ.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீனுக்கும் அவர் இப்பொதுக்குழுக் கூட்டம் வாயிலாக நன்றி தெரிவித்தார்.
ஹாஃபிழ் என்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் துஆவுடன் பொதுக்குழுக் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
குளியல்:
மதிய உணவு ஆயத்தமாக உள்ளதாகவும், குளியல் - ளுஹ்ர் தொழுகையை நிறைவேற்றிய பின் அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்படவுள்ளதாகவும், இடைப்பட்ட நேரத்தில் மகளிருக்கு விருந்துபசரிப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆண்கள் அனைவரும் குளியல் தொட்டிக்குள் இறங்கி, நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.
ளுஹ்ர் தொழுகை:
குளியலை முடித்துக்கொண்டு, அனைவரும் ளுஹ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் (கூட்டாக) நிறைவேற்றினர்.
மதிய உணவு விருந்துபசரிப்பு:
இப்பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் சங்கம நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் ஊரிலிருக்கும் மகிழ்ச்சியை அளிப்பதற்காக, காயல்பட்டினத்திலிருந்து சமையலர் வரவழைக்கப்பட்டு, உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
காலை உணவாக சிக்கன் சேமியா, மதிய உணவாக காயல்பட்டினம் பாரம்பரிய களறி சாப்பாடு ஆகியவற்றையும், காயல்பட்டினத்தின் இஞ்சி தேனீரையும் அவர் ஊரின் சுவை மாறாது நிறைவாக தயாரித்திருந்தது, பங்கேற்ற அனைவருக்கும் - குறிப்பாக மகளிருக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது. ஸஹன் முறையிலும், தனித்தட்டுக்களிலும் அனைவரும் மதிய உணவுண்டனர்.
பின்னர் சிறிது நேரம் ஓய்வளிக்கப்பட்டது. ஓய்வெடுக்க விரும்பாத சில உறுப்பினர்கள் - பவுன்சர் மட்டும் வீசுவதில்லை என்ற நிபந்தனையுடன் க்ரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.
பெரியோர் - மழலையருக்கான பல்சுவைப் போட்டிகள்:
பின்னர், மன்ற உறுப்பினர்கள், மகளிர், மழலையருக்கான பல்சுவைப் போட்டிகள் நடத்தப்பட்டது. மழலையருக்கான போட்டியின்போது ஒன்று சிரிக்க, ஒன்று அழ, ஒன்று சுட்டித்தனம் செய்ய என வெவ்வேறு குணங்களுடனான மழலையரின் நடவடிக்கைகள் அனைவரது கண்களுக்கும் விருந்தளித்தன.
மகளிருக்கு பிங்கோ மற்றும் இஸ்லாமிய மார்க்க வினா-விடைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
மழலையருக்கு தவளை ஓட்டப்பந்தயம், வேகமாக கோப்பைகளை அடுக்கல், பலூன் உடைத்தல், திருமறை குர்ஆன் ஓதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
ஆண்களுக்கு, இசைப்பந்து (மியூசிகல் பால்), 60 வினாடி தொடர் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.
அஸ்ர் தொழுகை மற்றும் மாலை சிற்றுண்டி:
அனைவரும் அஸ்ர் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றினர். அனைவருக்கும் இஞ்சி தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
பரிசளிப்பு:
நடைபெற்ற போட்டிகளில் முதலிடங்களைப் பெற்றோருக்கு பலவகைப் பரிசுகள் வழங்கப்பட்டன. மழலையர் அனைவருக்கும் பரிசுகள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில், அவர்களுக்கான பரிசளிப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது. இது தவிர, அனைத்து மழலையருக்கும் ஊக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
மழலையர் போட்டிகளில் பரிசு பெற்றோர்:
பலூன் உடைத்தல்:
(1) அய்மன் (த.பெ. ஹாஃபிழ் அப்துல்லாஹ் முஹாஜிர்)
(2) ஃபாத்திமா ரிஷாதா (த.பெ. வாவு முஹம்மத்)
(3) நூரா (த.பெ. ரஃபீ)
தவளை ஓட்டம்:
(1) அப்துல்லாஹ் (த.பெ. பீ.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன்)
(2) ஸமீஹா (த.பெ. ‘ஹனீவெல்’ இப்றாஹீம்)
(3) மாஸின் (த.பெ. ஷேக்னா)
காகிதக் கோப்பை அடுக்கும் போட்டி:
(1) முத்து ஜமீலா (த.பெ. சுல்தான்)
(2) வாஃபிக் (த.பெ. ‘ஹனீவெல்’ இப்றாஹீம்)
(3) மிஸ்னா (த.பெ. ஷேக்னா)
திருக்குர்ஆன் ஓதல்:
(1) ஃபாத்திமா ஷம்சுல் ளுஹா (த.பெ. பீ.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன்)
(2) நவ்ஃபுன் நிஸா (த.பெ. ஜபரூத் மவ்லானா)
(3) ஹாஃபியா (த.பெ. மக்கீ இஸ்மாஈல்)
ஆண்கள் போட்டிகளில் பரிசு பெற்றோர்:
இசைப்பந்து:
(1) ரஃபீ
(2) எஸ்.கே.ஸாலிஹ்
60 வினாடி தொடர் பேச்சு:
(1) எம்.எச்.ஜாஃபர் சுலைமான்
(2) ஹாஃபிழ் அப்துல்லாஹ் முஹாஜிர்
மகளிர் போட்டிகளில் பரிசு பெற்றோர்:
பிங்கோ:
(1) மக்கீ இஸ்மாஈல் மனைவி & ஷேக் அப்துல் காதிர் மனைவி
(2) மக்கீ இஸ்மாஈல் மகள் & ரஃபீ மனைவி
இஸ்லாமிய மார்க்க வினாடி-வினா:
(1) ஜஸீமா, ஜென்னாஹ், ஹபீப் தாஹிரா, ஹலீமுன் நிஸா
(2) எஸ்.ஏ.காதர் உம்மா, ராபியா, ஸாரா, மர்யம்
(3) ஹாஜரா, கதீஜா பத்தூல், ஹாஜி ஃபாத்திமா, நுஸ்ஹா
இப்போட்டியை ஜைனப் வழிநடத்தினார்.
காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி சுவையான உணவுகளை சமைத்தளித்தமைக்காக, காயல்பட்டினத்தைச் சேர்ந்த சமையலர் காதிருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பரிசுகளை, மன்றத்தின் மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.
மஃரிப் தொழுகை:
18.30 மணியளவில் மஃரிப் தொழுகையை நிறைவேற்றிய பின், குழுப்படம் எடுத்துக்கொண்டவர்களாக, பிரிய மனமின்றி அனைவரும் வசிப்பிடம் திரும்பினர்.
[குழுப்படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
ஷேக் அப்துல் காதிர்
இஜாஸ் மீரான்
ஹாஃபிழ் P.Z.A.அப்துல் காதிர்
‘நேஷனல்’ ஜுல்ஃபிகார் அஹ்மத்
தகவல்:
ஹாஃபிழ் மன்னர் செய்யித் அப்துர்ரஹ்மான்
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
பெங்களூரு காயல் நல மன்றத்தின் சார்பில் இதற்கு முன் நடத்தப்பட்ட காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
பெங்களூரு காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |