காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம், அதன் ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் ஆகியவற்றின் குருதிக்கொடைச் சேவைகளுக்காக, தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டுள்ளது. அப்பாராட்டை, தன்னலம் கருதாமல் குருதிக்கொடையளித்த தன்னார்வக் கொடையாளர்களுக்கு அர்ப்பணிப்பதாக அவ்வமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ரத்த வங்கிகளுடன் இணைந்து குருதிக்கொடை முகாம்கள் நடத்தும் அமைப்புகள் கௌரவிக்கப்படும் நிகழ்ச்சி - இன்று காலை, தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் - தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மூன்று அரசு ரத்த வங்கிகளுடன் (தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர்) இணைந்து குருதிக்கொடை முகாம்கள் நடத்தும் பல்வேறு அமைப்புகள் கௌரவிக்கப்பட்டன.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் வசந்தி - மாவட்டம் முழுவதும், அரசு ரத்த வங்கிகளுடன் இணைந்து முகாம்கள் ஏற்பாடு செய்த தொண்டு அமைப்புகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி, வாழ்த்துரை வழங்கினார்.
மெகா | நடப்பது என்ன? குழுமம் சார்பாக, அதன் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, சான்றிதழ்களை பெற்றனர்.
ஏப்ரல் 2017 முதல் - மெகா | நடப்பது என்ன? குழுமம், அரசு ரத்த வங்கிகளுடன் இணைந்து - குருதிக்கொடை முகாம்கள் நடத்திவருகிறது.
2017 - 2018 காலகட்டத்தில், மெகா | நடப்பது என்ன? குழுமம் நடத்திய மூன்று முகாம்கள் மூலமாக, மொத்தம் 244 தன்னார்வலர்கள், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் அரசு ரத்தவங்கிகளுக்கு குருதிக்கொடை செய்தனர். இதில் 211 பேர் ஆண்கள், 33 பேர் பெண்கள்.
இத்தருணத்தில் - மெகா | நடப்பது என்ன? குழுமம் பெற்ற இப்பாராட்டு சான்றிதழுக்கு முழு காரணமான வல்ல இறைவனுக்கும், தன்னலம் பாராது குருதிக்கொடை அளித்த அனைத்து தன்னார்வலர்களுக்கும் - நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். எல்லாப்புகழும் இறைவனுக்கு!
மேலும் - இந்த முகாம்கள் நடத்திட இடம் தந்து அனைத்து ஒத்துழைப்பும் வழங்கிய நமதூர் மருத்துவமனைகள் / பொது நல அமைப்புகளுக்கும் (அரசு மருத்துவமனை, கே.எம்.டி.மருத்துவமனை, ரசாக் மருத்துவமனை, ரெட் ஸ்டார் சங்கம்) மற்றும் நடப்பது என்ன? குழுமத்தின் ஆண் - பெண் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், பொருளுதவி செய்த சமூக ஆர்வலர்களுக்கும் - மனமார்ந்த நன்றியினை இத்தருணத்தில் பதிவு செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 31, 2018; 4:30 pm]
[#NEPR/2018103102]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|