காயல்பட்டினம் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து கலந்தாலோசனை செய்வதற்காக, வரும் 18.12.2010 அன்று இக்ராஃ கல்விச் சங்கத்தில் நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, இக்ராஃ செயலர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஆண்டுதோறும் காயல்பட்டினம் நகர மாணவியரைக் காட்டிலும் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் மற்றும் பாடவாரியாக மதிப்பெண்களின் அளவு மிகவும் குன்றிப்போயிருப்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பின்னடைவுக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றைக் களைந்து, அவர்களது கல்வித் தரத்தை மேம்படுத்திடும் பொருட்டு, நகர பள்ளிக்கூடங்களின் தலைமையாசிரியர்களை அழைத்து கலந்தாலோசனை செய்யப்பட வேண்டுமென அண்மையில் நடைபெற்ற இக்ராஃ செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், வரும் 18.12.2010 சனிக்கிழமையன்று மாலை 04.30 மணிக்கு, நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம், உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில், அதன் தலைவரும் சிங்கப்பூர் காயல் நல மன்றத் தலைவருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, காயல்பட்டினம் நகர பள்ளிகளான சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களின் தலைமையாசிரியர்கள் முறைப்படி அழைக்கப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் கலந்தாலோசனை செய்யப்பட்டதன் அடிப்படையில் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு, அவை தொடராக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
K.M.T.சுலைமான்,
துணைச் செயலாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம். |