தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக அரசுக்கு புகார் வந்தது. அதனால் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க, தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை தொடர்ந்து புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயித்தது.
இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை தனி நீதிபதி விசாரித்து, பள்ளிகளுக்கு கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணத்திற்கு தடை விதித்தார். இதை எதிர்த்து அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்து, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, தனியார் பள்ளிகளிடம் தனித்தனியாக கருத்துக்களை கேட்டு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்க வேண்டும், அதுவரை கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினர்.
இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் சதாசிவம், சவுகான் ஆகியோர் முன் நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆஜராகி, தமிழக அரசு அமைத்த கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலித்தால் பள்ளிகளை நடத்த முடியாது. கமிட்டி மிக குறைவான கட்டணத்தை நிர்ணயித்து உள்ளது. ஆசிரியர்களுக்கு சரியான சம்பளமும் கொடுக்க முடியாது. ஒவ்வொரு பள்ளிகளிலும் எவ்வளவு அடிப்படை வசதிகள் உள்ளது என்று தனித்தனியாக கமிட்டி கருத்துக்களை கேட்க வில்லை. கமிட்டி அவசர அவசரமாக 10 ஆயிரம் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணத்திற்கு 6400 பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஒவ்வொரு பள்ளிகளிடமும் தனித்தனியாக கருத்துக்களை கேட்டு வரவு செலவுகளை கணக்கிட்டு அதன்பிறகு தான் கல்வி கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும். அதுவரை கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலிக்க அரசு கட்டாய படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.
தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன், அரசு சிறப்பு வக்கீல் ஜி.சங்கரன் ஆகியோர் ஆஜராகி, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அதிகமாக கல்வி கட்டணம் வசூலிக்கிறது என்று பெற்றோர்களிடம் இருந்து அரசுக்கு ஏராளமாக புகார்கள் வந்தது. இதனால் தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்க தனி சட்டம் கொண்டு வரப்பட்டது. பள்ளிகளிடம் கருத்து கேட்டு தான் கல்வி கட்டணத்தை கமிட்டி நிர்ணயித்துள்ளது. இதை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஏற்றுக்கொண்டுள்ளது.
பள்ளிகள் சார்பில் சங்கங்கள் வழக்கு தாக்கல் செய்ததை ஏற்க கூடாது. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஒவ்வொரு பள்ளிகளிடமும் கருத்து கேட்டு கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. இந்த பணி தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
தனியார் பள்ளிகளிடம் தற்போது தனித்தனியாக கருத்துக்கள் கேட்டு நீதிபதி ரவிராஜ்பாண்டியன் கமிட்டி விசாரித்து வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த பணி நடந்து வருகிறது. இதற்கு தடை விதிக்க முடியாது. இந்த பணியை கமிட்டி விரைவாக முடிக்க வேண்டும். பள்ளி கல்வி கட்டணம் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. இது சரியானது தான். எனவே இந்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம். இதுதொடர்பாக மேலும் சில வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த வழக்குகளை ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.
தகவல்:
தினகரன்
|