காயல்பட்டினம் கே.வி.ஏ.டி. புஹாரி ஹாஜி அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், நகர்நல செயல்திட்டங்களுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அறக்கட்டளை செய்தித் தொடர்பாளர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கே.வி.ஏ.டி. புஹாரி ஹாஜி அறக்கட்டளை சார்பில், அது யாருடைய பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ அந்த மர்ஹூம் கே.வி.ஏ.டி. புஹாரி ஹாஜி அவர்களின் நினைவு தினமான டிசம்பர் 22ஆம் தேதியன்று அன்னாரின் நினைவாக மருத்துவ முகாம் நடத்தவும், இலவச பள்ளிச் சீருடைகள் வினியோகம் செய்யவும், துவக்கப்பள்ளிக்கான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் 47ஏ, புதுக்கடைத் தெருவிலுள்ள கண்ணாடி ஆலிம் இல்லத்தில், அறக்கட்டளையின் உயர்மட்டக் குழு உறுப்பினர் ஹாஜி எம்.என்.எல்.சுலைமான் தலைமையில் நடைபெற்றது.
நடத்தப்படவுள்ள மருத்துவ முகாம், இலவச பள்ளிச் சீருடை வினியோகம் மற்றும் துவக்கப்பள்ளிக்கான அடிப்படை வசதிகள் குறித்து, அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப் விளக்கிப் பேசினார்.
அறக்கட்டளை பொறுப்பாளர் ஹாஜி கே.வி.ஏ.டி. செய்யித் அஹ்மத் கபீர், ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அப்துல் ரஸ்ஸாக், அறக்கட்டளை உறுப்பினர்கள் துளிர் ஷேக்னா லெப்பை, ஆசிரியர் மீராஸாஹிப் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பின்வரும் தீர்மானங்கள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மருத்துவ முகாம் நடத்தல்:
வரும் 22.12.2010 அன்று, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில், பொதுமக்களுக்கான கண் பரிசோதனை, நெஞ்சக நோய் மருத்துவ பரிசோதனை, பொது மருத்துவம் ஆகிய முகாம்களை இலவசமாக நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - இலவச சீருடை வினியோகம்:
அறக்கட்டளை சார்பில் நடப்பு கல்வியாண்டின் இலவச சீருடை வினியோகத் திட்டத்தின் கீழ், இதுவரை வழங்கப்படாத - காயல்பட்டினம் சிவன்கோயில் தெருவிலுள்ள, தைக்கா பள்ளி என்றழைக்கப்படும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் மாணவ-மாணவியருக்கான சீருடைகளை இலவசமாக வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 – தீவுத்தெரு துவக்கப்பள்ளிக்கு அடிப்படை வசதிகள்:
காயல்பட்டினம் தீவுத்தெருவிலுள்ள திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்ந்தறிந்து, அப்பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளில் இயன்றவற்றை செய்து கொடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |