திண்டுக்கல் யூஸுஃபிய்யா அரபிக்கல்லூரியின் முதல்வரும், தமிழ்நாடு ஷரீஅத் பேரவையின் நிர்வாகியும், நாடறிந்த நாவலருமான மவ்லவீ கலீல் அஹ்மத் கீரனூரி ஹஜ்ரத் 16.12.2010 அன்று மாலையில் காலமானார். மறுநாள் காலை 11.00 மணிக்கு, அவரது சொந்த ஊரான பழனி கீரனூர் பெரிய பள்ளிவாசலில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவையொட்டி, அவருக்காக பிரார்த்திக்கும் பொருட்டு காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரி வளாகத்தில் நேற்று (17.12.2010) இரவு இஷா தொழுகைக்குப் பின் காயிப் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது. காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ தொழுகையை வழிநடத்தினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், பன்னூல் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ, ஜாவியா அரபிக்கல்லூரி மற்றும் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி ஆகியவற்றின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ ஆகியோர் மறைந்த ஹஜ்ரத் அவர்களின் மார்க்கச் சேவை குறித்து இரங்கல் உரையாற்றினர்.
நகரின் பல பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். |