காயல்பட்டினத்தில் இன்று காலை 10.00 மணியளவில் நகரின் அனைத்து இறைச்சிக் கடைகளிலும் பரிசோதனை நடைபெற்றது. நோய் தாக்கப்பட்டதாகக் கருதப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகள் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன.
இதுகுறித்து, பரிசோதனையில் ஈடுபட்ட மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்ததாவது:-
திருச்செந்தூர் வட்டாரத்திலுள்ள காயல்பட்டினம், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளில் பரிசோதனை செய்து, விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஷ்வரன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் உமா அவர்களின் அறிவுரையின் பேரில், திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி உள்ளிட்ட திருச்செந்தூர் வட்டாரப் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளில், கால்நடை மருத்துவர் டாக்டர் சுபஸ்ரீ மற்றும் காயல்பட்டினம் நகர்மன்ற அலுவலர்கள் துணையுடன் பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்.
இறைச்சிக் கடைகளுக்கு முறையான உரிமம் பெறப்பட்டுள்ளமை, கடை சுத்தம், விற்கப்படும் இறைச்சிகளை பாதுகாப்பாக மூடி வைத்து விற்பனை செய்தல், இறைச்சி அறுப்பிடத்திலிருந்து (டிப்போ) முறைப்படி முத்திரை பதிக்கப்பட்ட இறைச்சி விற்பனை ஆகிய அம்சங்கள் குறித்து இன்று காயல்பட்டினம் நகரிலுள்ள இறைச்சிக் கடைகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பல கடைகளில் முறைப்படி டிப்போவின் முத்திரை பெறப்படாத இறைச்சி விற்கப்படுவதும், நோய் தாக்கப்பட்ட இறைச்சி விற்கப்படுவதும் கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டு, அந்த இடத்திலேயே பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டு, நகராட்சியின் கழிவேற்றிச் செல்லும் வாகனத்தில் அவை கொண்டு செல்லப்பட்டன.
இவ்வாறு மாவட்ட சுகாதார அலுவலர்கள் தெரிவித்தனர்.
இறைச்சிக்கடை உரிமையாளர் சங்கம் சார்பில், காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவில், ஆறாம்பள்ளிவாசலுக்கெதிரே இறைச்சிக்கடை வைத்திருக்கும் செய்யித் இப்றாஹீம் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்,
சுகாதாரமற்ற இறைச்சிகள் விற்கப்படுகின்றனவா என்று கண்டறிந்து பறிமுதல் செய்யப்படுவது வரவேற்கத்தக்கதே! எனினும், இறைச்சி வியாபாரிகள் யாரும் படித்து பட்டம் பெற்றுவிட்டு இந்த வியாபாரம் செய்வதில்லை... வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் இத்தொழிலை நாங்கள் செய்கிறோம்.
பிராணிகள் முறைப்படி அறுக்கப்படுவதையும், நோய் தாக்கப்படாத ஆரோக்கியமான பிராணிகள் அறுக்கப்படுவதையும் முறைப்படுத்துவதற்காகத்தான் நகராட்சி மன்றத்தின் அறுப்பிடம் (டிப்போ) உள்ளது. அங்கு சென்று சோதனை செய்து, நோய் தாக்கப்பட்ட இறைச்சிகளைப் பறிமுதல் செய்வதே பொருத்தமாக இருக்கும்... எதுவுமறியாமல், அங்கு எங்களுக்கு முத்திரையுடன் தரப்படும் இறைச்சிகளை இங்கு கடைகளில் வந்து பறிமுதல் செய்வது எங்கள் பிழைப்பில் மண்ணைப் போடுவதாகும்... என்றார்.
பரிசோதனை நடைபெற்றபோது அவ்விடத்திற்கு வந்த காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் நோனா ஜாஃபர் சாதிக், டிப்போவில் முறையான முத்திரையே தற்சமயம் இல்லை என்றும், முத்திரைக் கருவிக்கான (ரப்பர் ஸ்டாம்ப்) ஏற்பாடுகளைச் செய்த பின்புதான் முத்திரை பதிக்கப்படாத இறைச்சியைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், இன்றைய பரிசோதனையில் பேணப்பட்டுள்ள முறை வரவேற்கத்தக்கதல்ல என்றும் தெரிவித்தார்.
காயல்பட்டினத்தில் இன்று காலையில் நடைபெற்ற இப்பரிசோதனை காரணமாக, நகரின் முக்கிய கடைவீதிகள் பரபரப்புடன் காணப்பட்டன.
|