தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து லேண்ட்லைன் எஸ்.டி.டி. கட்டணங்களும், லோக்கல் கட்டணமாக குறைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பி.எஸ்.என்.எல். நிறுவனம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் அனைவரும் சேவையை பெறும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் லேண்ட்லைன் எஸ்.டி.டி. கட்டணங்கள் அனைத்தும் லோக்கல் கட்டணமாக குறைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பி.எஸ்.என்.எல். லேண்ட் லைன் போனில் இருந்து இந்தியாவில் உள்ள எந்த ஒரு லேண்ட் லைன் நம்பரையும் 3 நிமிடத்துக்கு 80 முதல் 120 பைசா என்ற கட்டண விகிதத்தில் அழைக்கலாம். இந்த கட்டண குறைப்பு பொது தொலைபேசி தவிர அனைத்து பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சலுகையின்படி மொபைல் அழைப்புகளை விட லேண்ட்லைன் அழைப்புகளுக்கு கட்டணம் மிகவும் குறைவு ஆகும். புதிதாக இணைப்பு பெறுவோருக்கு இணைப்பு கட்டணம் ரூபாய் 500 தள்ளுபடியும், புதிதாக பிராட்பேண்ட் இணைப்பு பெறுவோருக்கு இணைப்பு கட்டணம் ரூபாய் 750 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
மேலும் பி.எஸ்.என்.எல். பிரீபெய்டு ரீசார்ஜ்களுக்கான டாக்டைமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இலவச என் நண்பன் சூப்பர் சிம்கார்டு வழங்கும் திட்டம் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அனைத்து பொதுமக்களுக்கும் ரூபாய் 66 மதிப்புள்ள என் நண்பன் சூப்பர் சிம்கார்டு ரூபாய் 10 டாக்டைமுடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள ஒரு பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் நம்பருக்கு முற்றிலும் இலவசமாக பேசலாம். மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வெவ்வேறு லேண்ட்லைன் எண்ணை எஸ்.எம்.எஸ். மூலம் ரூபாய் 10 பிடித்தத்துடன் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
புதிதாக 3ஜி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வாரத்துக்கு எல்லையில்லாத டவுன்லோடு இலவசமாக வழங்கப்படுகிறது. ரூபாய் 2,500 மதிப்புள்ள 3ஜி டேட்டா கார்டு சலுகை விலையில் ரூ.2,000 வழங்கப்படுகிறது. ரூபாய் 9,861 முன்பணம் மொத்தமாக செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 19 மாதத்துக்கு 2 ஜி.பி டேட்டா டவுன்லோடு மற்றும் ரூபாய் 2 ஆயிரம் மதிப்புள்ள டேட்டா கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளை பொதுமக்கள் பயன்படுத்தி புதிய இணைப்புகளை பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் தெரிவித்து உள்ளார்.
|