தமிழகத்தில் விரைவில் மேல் சபை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேல்சபை 78 உறுப்பினர்களை உள்ளடக்கியது. இதில் 26 உறுப்பினர்கள் எம்எல்ஏக்கள் மூலமும், 26 உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் தொகுதியில் இருந்தும், 7 பேர் ஆசிரியர்கள் தொகுதியில் இருந்தும், 7 பேர் பட்டதாரிகள் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவர். 12 உறுப்பினர்கள் கவர்னரால் நியமனம் செய்யப்படுவர்.
தமிழகத்தில் மேல்சபை தேர்தலுக்காக தலா 7 பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான வாக்காளர் சேர்ப்பு பணி நடந்து வருகிறது. பட்டதாரிகள் தொகுதிக்கு படிவம் 18 மூலமும், ஆசிரியர்கள் தொகுதிக்கு படிவம் 19 மூலமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மேல்சபை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை நடந்தது. இதைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 22ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் வாக்காளர் சேர்க்கும் பணியும் நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிப்பது நேற்றுடன் (டிசம்பர் 16) நிறைவு பெற்றது.
முன்னதாக இறுதி வாக்காளர் பட்டியல் டிசம்பர் 29 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இறுதி பட்டியல் ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் பட்டியலில் சேர 431,059 பேரும், ஆசிரியர்கள் பட்டியலில் சேர 68,060 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
|