காயல்பட்டினத்தில் ஆண்டுதோறும் புதிய கல்வியாண்டில், நகரிலுள்ள ஏழை-எளிய மாணவ-மாணவியருக்காக சமுதாயத்தின் பல்வேறு பொதுநல மற்றும் அரசியலமைப்புகள் சார்பில் இலவச பள்ளிச் சீருடைகள், பாடக் குறிப்பேடுகள் வழங்கப்பட்டு வருகிறது.
வெவ்வேறு அமைப்புகள் தனித்தனியே வழங்கினாலும், பெறுவது காயல்பட்டினம் மக்கள் மட்டுமே என்பதால், ஒரு மாணவருக்கே பல அமைப்பினரும் பாடக் குறிப்பேடுகள், பள்ளிச் சீருடைகளை வினியோகிப்பதும், இதன் காரணமாக தகுதியுள்ள சில மாணவ-மாணவியருக்கு இந்த இலவச பொருட்கள் கிடைக்காமற்போவதும் தொடராக நிகழ்ந்து வருகிறது.
இக்குறையைப் போக்கிடும் வகையில், மேற்படி பொருட்களை வினியோகிக்கும் அமைப்பினர் மற்றும் தனி நபர்களை ஒருங்கிணைத்து, விண்ணப்பங்களை மட்டும், உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் தலைமையில், ஓரிடத்திலிருந்து வினியோகிக்கச் செய்வதற்காக ஆலோசனைக் கூட்டம் நடத்துவதென, அண்மையில் நடைபெற்ற இக்ராஃ செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அத்தீர்மானத்தின் அடிப்படையில் 07.12.2010 அன்று, பள்ளி இலவச பாடநூல், சீருடைகளை வினியோகிக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் முதற்கட்டமாக நடைபெற்றது.
20.12.2010 அன்று மீண்டும் கூடுவதெனவும், அக்கூட்டத்தில் மேற்படி செயல்திட்டத்திற்கு அந்தந்த அமைப்புகளின் சார்பில் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அல்லது விலகல் தகவலைத் தருவதெனவும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 20.12.2010 அன்று இரவு 07.00 மணிக்கு, இக்ராஃ அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகரில் ஏழை-எளிய மாணவர்களுக்கு பள்ளி பாடக்குறிப்பேடுகள், சீருடைகளை இலவசமாக வினியோகித்து வரும்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க.) காயல்பட்டினம் கிளை சார்பில் வாவு கே.எஸ்.எம்.புகாரீ, ஜாஹிர் ஹுஸைன், ஏ.எஸ்.முஹம்மத் நூர் ஃபிர்தவ்ஸ் ஆகியோரும்,
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை சார்பில் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர் ஆகியோரும்,
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் கே.ஜே.ஷாஹுல் ஹமீத்,
கற்புடையார்பள்ளி வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி சார்பில் முத்துச்சுடர் என்.டி.இஸ்ஹாக் லெப்பை, கே.அப்துர்ரஹ்மான் ஆகியோரும்,
அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஆசிரியர் இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர்,
அன்னை கதீஜா மகளிர் மத்ரஸா சார்பில் மாஷா அல்லாஹ் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் ஆகியோரும்,
கே.வி.ஏ.டி.புகாரீ ஹாஜி அறக்கட்டளை சார்பில் ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர், கே.முஹம்மத் ஆஷிக் ஆகியோரும்,
இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், கே.எம்.டி.சுலைமான், ஏ.தர்வேஷ் முஹம்மத், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இக்ராஃ தலைவரும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் தலைவருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமை தாங்கினார். கற்புடையார்வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளிவாசல் செயலாளர் முத்துச்சுடர் என்.டி.இஸ்ஹாக் லெப்பை கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
இக்ராஃ செயலர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், கடந்த 07.12.2010 அன்று நடைபெற்ற கூட்ட நிகழ்வுகள் குறித்த அறிக்கையை வாசித்தார்.
அனைத்து அமைப்புகளும் ஒப்புதல்:
பின்னர், பள்ளி பாடக்குறிப்பேடுகள், சீருடைகள் இலவச வினியோகத்திற்கான விண்ணப்பங்களை இக்ராஃ கல்விச் சங்கத்தின் தலைமையில், அதன் அலுவலகத்திலிருந்தே வினியோகிப்பதற்கான அமைப்புகளின் முடிவுகள் குறித்து கூட்டத் தலைவர் வினவினார். அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் தமது ஒப்புதலை முறைப்படி தெரிவித்தனர்.
செயல்திட்டம்:
அதனைத் தொடர்ந்து, விண்ணப்பங்களை வினியோகித்தல், திரும்பப் பெறல், விண்ணப்பப் படிவத்தின் அமைப்பு, இலவச பொருட்கள் வினியோகம் உள்ளிட்டவை குறித்து நீண்ட நேரம் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
இறுதியில் பின்வருமாறு செயல்திட்டம் வகுக்கப்பட்டது:-
விண்ணப்பப் படிவம்:
இக்ராஃவின் லெட்டர் பேட் போன்ற முகப்பு விண்ணப்பப் படிவத்தின் துவக்கத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.
அதற்கடுத்து, “பாடக் குறிப்பேடு / பள்ளிச் சீருடை – ஒருங்கிணைந்த இலவச வினியோகம்” என்று தலைப்பிடப்பட்டு, அதனடியில், “அனுசரணையாளர்கள்” என்ற தலைப்பில், இலவச பொருட்களை வினியோகிக்கும் நகர அமைப்புகள் மற்றும் அந்த அமைப்புகள் மூலமோ அல்லது நேரடியாகவோ உதவும் காயல் நல மன்றங்களின் பெயர்கள் வரிசையாக அச்சிடப்பட்டிருக்கும்.
அதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரரின் விபரங்கள், அவர்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியரின் முத்திரையுடன் கூடிய ஒப்பம் கோரப்பட்டிருக்கும்.
அதன் பின், நிபந்தனைகள் அச்சிடப்பட்டிருக்கும். அதனடியில், மாணவர் கையொப்பம் மற்றும் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கையொப்பம் கோரப்பட்டிருக்கும்.
விண்ணப்பத்தின் அடிப்பகுதியில், விண்ணப்ப எண், மாணவர் பெயர் மட்டும் பூர்த்தி செய்யும் வகையில் கிழித்துக் கொடுக்கும் விதத்தில் அச்சிடப்பட்டிருக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்னர், விண்ணப்பதாரர்களிடம் அத்துண்டுச் சீட்டு வழங்கப்படும். அதனைக் காண்பித்து, தமது பொருட்களை அந்தந்த அமைப்புகளிடம் விண்ணப்பதாரர் பெற்றுக்கொள்வார்.
விண்ணப்படிவம் வினியோக நாள்:
01.01.2011 அன்று இக்ராஃ அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.01.2011 என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த விபரங்கள் அடங்கிய பிரசுரங்கள் 31.12.2010 வெள்ளிக்கிழமையன்று நகரின் இரண்டு ஜும்ஆ பள்ளிகளிலும் வினியோகிக்கப்படுவதுடன், நகரின் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் அறிவிப்புப் பலகைகளில் நிறுவும் வகையில் அவற்றுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
குழு நியமனம்:
விண்ணப்பங்கள் வினியோகம், அந்தந்த அமைப்புகளுக்கு விண்ணப்பங்களை பிரித்தளித்தல் உள்ளிட்டவற்றை தங்குதடையின்றிச் செய்திடும் பொருட்டு,
(01) ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில்,
(02) கே.ஜே.ஷாஹுல் ஹமீத்,
(03) இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர்,
(04) கே.முஹம்மத் ஆஷிக்,
(05) ஜாஹிர் ஹுஸைன்,
(06) முஹம்மத் நூர் ஃபிர்தவ்ஸ்,
(07) மாஷாஅல்லாஹ் செய்யித் முஹம்மத்,
(08) கே.அப்துர்ரஹ்மான்,
(09) கே.எம்.டி.சுலைமான்,
(10) ஏ.தர்வேஷ் முஹம்மத் மற்றும்
(11) எஸ்.கே.ஸாலிஹ்
ஆகியோரடங்கிய குழு நியமனம் செய்யப்பட்டது.
தகவல்:
K.M.T.சுலைமான்,
துணைச் செயலாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம். |