காயல்பட்டினம் எல்.கே. மேனிலைப்பள்ளியில், இன்று மாலை தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
அப்பள்ளியின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் தலைமை தாங்கினார். எல்.கே.மேனிலைப்பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் சங்க செயலர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, தி.மு.க. நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், நகர்மன்ற உறுப்பினர்கள் எம்.என்.சொளுக்கு, மும்பை மெய்தீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் அஹ்மத் ஏ.ஜே.முஸ்தஃபா நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். ஹாஃபிழ் எம்.எச்.முஹம்மத் நூஹ் இம்ரான் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர் முஹம்மத் ஹனீஃபா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், எல்.கே.மேனிலைப்பள்ளியின் துணை தலைமையாசிரியர் தேவராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியதோடு, அப்பள்ளியின் 11ஆம் வகுப்பைச் சார்ந்த 92 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டியை வழங்கினார்.
நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. |