காயல்பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கான நிலம் வாங்க நிதி தேவைப்படுவதாகவும், உலக காயலர்கள் உதவுமாறும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து, பேரவைத்தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தெரிவித்துள்ளதாவது:-
நமதூரில் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, மின்சார உபயோகம் கனிசமான அளவுக்கு உயர்ந்து வருகிறது.
தற்போது, ஆறுமுகநேரி துணை மின் நிலையம் வழியாகவே நமதூருக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு மற்றும் வருங்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, நமதூரில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டால் நாம் தங்குதடையின்றி மின்சாரத்தை உபயோகித்துக்கொள்ள இயலும்.
இதுகுறித்து, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை கூட்ட அரங்கில், நகர்நல விரும்பிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் 22.12.2010 அன்று நடைபெற்றது. நமது பேரவையின் நெடுநாள் கோரிக்கையான “காயல்பட்டினத்தில் துணை மின் நிலையம்” செயல்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்காக ஒரு ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், ஒரு மாதத்திற்குள் இடம் கிடைக்காவிடில் ஆத்தூரில் துணை மின் நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, கே.எம்.டி.யில் நடைபெற்ற அக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இதுகுறித்து நாங்கள் ஆலோசித்தோம்.
தனி நபர்களிடமிருந்து நிலமாக வாங்குவதென்பது குறுகிய காலத்தில் செயல்படுத்த முடியாது என்பதால், நன்கொடை வசூலித்து, தேவைப்படும் நிலத்தை கிரயத்திற்குப் பெற்றுக்கொள்ளலாம் என அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து ஒருமனதாக ஏற்கப்பட்டது.
சுமார் 20 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. துவக்கமாக, நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா கல்லூரி நிறுவனருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் அவர்கள் ஒரு லட்சம் ரூபாயும்,
ஹாஜி லேண்ட்மார்க் ராவண்ணா அபுல்ஹஸன் அவர்கள் ஒரு லட்சம் ரூபாயும்,
வாவு சகோதரர்கள் 50 ஆயிரம் ரூபாயும்,
எனது (உவைஸ் ஹாஜி) பங்களிப்பாக 50 ஆயிரம் ரூபாயும்,
ஹாஜி கத்தீப் மீராஸாஹிப் அவர்கள் 50 ஆயிரம் ரூபாயும்,
ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்கள் 50 ஆயிரம் ரூபாயும்
ஆக மொத்தம், இந்த ஆலோசனைக் கூட்டத்திலேயே நான்கு லட்சம் ரூபாய் இந்த வகைக்காக நன்கொடை தொகைக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இன்னும் தேவைப்படும் தொகையை விரைவாகப் பெற்றிடும் பொருட்டு, உலக காயலர்களாகிய உங்களிடம் நான் அன்புடன் வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
காலத்தின் அருமை கருதியும், நமதூரின் இந்த அத்தியாவசியத் தேவையைக் கருத்தில் கொண்டும், இந்த வாய்ப்பை நழுவ விட்டால் நாம் சந்திக்க வேண்டிய இழப்பை மனதிற்கொண்டும், தாராளமாக நன்கொடைகளைத் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
உங்களில் பலர் ஊரிலிருந்தால் உரிமையோடு நீங்கள் இந்த வகைக்காக தந்துதவி, மேற்சொன்ன பட்டியலில் நீங்களும் இடம்பெற்றிருப்பீர்கள் என்பதை அறிவேன். கடல் கடந்து நீங்கள் வாழுகின்ற காரணத்தால், உங்களிடம் நான் இதை கோரிக்கையாக மட்டுமே வைக்க வேண்டியுள்ளது. நாம் அனைவரும் இணைந்து இந்த நற்காரியத்தைச் செய்து முடிப்போம்.
இந்த வகைக்காக நன்கொடையளிக்க விருப்பமுள்ளவர்கள், நமது பேரவையை, (அலுவலக தொலைபேசி எண்: +91 4639 285200) தொடர்புகொண்டு தங்களது ஒப்புதலை விரைவாகத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நாம் கிரயத்திற்கு வாங்கிக் கொடுக்கும் நிலத்திற்கு அரசாங்கம் நிர்ணயித்துள்ள தொகையை மின்வாரியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதை அறியத் தருகிறேன்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நம் யாவருக்கும் நிறைவான அபிவிருத்தியை நல்குவானாக, ஆமீன்.
இவ்வாறு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தெரிவித்துள்ளார். |