டாக்டர்கள் பற்றாக்குறையை நீக்க, நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டில் இருந்து 10 ஆயிரம் இடங்களை அதிகரிக்க அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தால் நாடு முழுவதும் இப்போது டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் போதிய அளவு டாக்டர்கள் இல்லாத சூழ்நிலை உள்ளது. இது பற்றி ஆராய்ந்த அகில இந்திய மருத்துவக் கவுன்சில், மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிப்பது பற்றி பரிசீலித்து வந்தது.
டெல்லியில் மருத்துவக் கவுன்சில் தலைவர் சிவகுமார் சரின் தலைமையில் நேற்று நடைபெற்ற கவுன்சில் நிர்வாகிகள் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டது. இதில், எம்.பி.பி.எஸ். சீட்களை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டில் இருந்து 10 ஆயிரம் எம்.பி. பி.எஸ். இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படுகிறது. இப்போது ஆண்டுதோறும் 35 ஆயிரம் டாக்டர்கள் உருவாக்கப் படுகிறார்கள். இது 45 ஆயிரமாக உயரும்.
புதிதாக 66 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவும் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. மருத்துவக் கல்லூரி தொடங்க குறைந்தபட்சம் 25 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டு, 10 ஏக்கர் இருந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நகர்ப்புறங்களில் 25 ஏக்கர் நிலம் கிடைப்பது அரிதாக இருப்பதால், விதி தளர்த்தப்பட்டுள்ளது. அதே நேரம், கட்டிட வசதிகளில் சலுகை அளிக்கப்படவில்லை. ராணுவம், ரயில்வே, இ.எஸ்.ஐ. துறைகளுக்கு நாடு முழுவதும் ஏராளமான நிலங்கள் உள்ளன. எனவே, இத்துறைகள், மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதிப்பது பற்றியும் பரிசீலிக்கப்படுகிறது.
தகவல்:
தினகரன்
|