உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் நடப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், தம் மன்றங்களில் பேசப்பட்டவை குறித்த கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காகவும், சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றம் சார்பில் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, ஹாஜி சாளை நாஸர், ஹாஜி பி.எம்.கே.ரிஃபாய், அம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி ஏ.எம்.இஸ்மாயீல் நஜீப் ஆகியோரும்,
அமீரக காயல் நல மன்றம் அங்கமாக ஹாஜி முஹம்மத் இப்றாஹீம் (48), தம்மாம் காயல் நற்பணி மன்றம் சார்பாக செய்யித் ஹஸன், வட அமெரிக்க காயல் நல மன்றம் சார்பாக ஏ.எம்.தவ்ஃபீக் ஆகியோரும் இக்ராஃ அலுவலகத்தில் 23.12.2010 அன்று இரவு 07.00 மணியளவில் கலந்தாலோசனை செய்தனர்.
இக்ராஃ தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இக்ராஃ செயலாளர் ஏ.தர்வேஷ் முஹம்மத், துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் இக்ராஃவின் நடப்பு செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளித்தனர்.
பின்னர் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தில், பள்ளிக்கூடங்களில் பயிலும் ஏழை மாணவ-மாணவியரின் கல்விக் கட்டண வகைக்காக இயன்றளவுக்கு உதவிட தம் அமைப்பு விரும்புவதாகவும், அதுகுறித்து விரைவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனறும், வட அமெரிக்க காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.தவ்ஃபீக் தெரிவித்தார்.
நகரில் நன்றாகப் படித்துத் தேறும் மாணவர்கள் கூட, வேலைவாய்ப்புக்காக நடத்தப்படும் நேர்காணலில் ஆங்கில பேச்சுத்திறன் இல்லாத காரணத்தால் நல்ல நல்ல வேலைவாயப்புகளை இழந்துவிடுவதாகவும், அக்குறையைப் போக்கிடும் வகையில், பள்ளிக்கூடங்களில் ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும் என்றும், அதற்காகும் செலவுகளுக்கு அனுசரணையளிப்பது குறித்து தம் மன்றத்தினர் பரிசீலித்து வருவதாகவும், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, சாளை நாஸர் ஆகியோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, நகரின் அனைத்துப் பள்ளி நிர்வாகங்களுடன் பேசி, வாராந்திர பாடவகுப்புகள் இதற்காக நடத்துவது குறித்து செயல்திட்டம் வகுக்கப்படும் என இக்ராஃ சார்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது.
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், நகரில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை இன்னும் மும்முரமாகச் செய்வது குறித்தும், புற்றுநோய் குறித்த குறும்படம் தயாரிப்பது குறித்தும் அப்போது அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
உலக காயல் நல மன்றங்கள் நடத்த விரும்பும் கல்வி நிகழ்ச்சிகளை இக்ராஃ மூலமே நடத்தி உதவுமாறும், இதனால் நகர மாணவ சமுதாயத்திற்கு ஒருங்கிணைந்த முறையில் சேவையாற்றிட இயலும் என்றும், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மன்றங்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதால் ஏற்படும் நடைமுறை சிக்கல் இதன்மூலம் தவிர்க்கப்படும் என்றும் அப்போது இக்ராஃ தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் கேட்டுக்கொண்டார்.
இரவு 08.30 மணியுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நிறைவுற்றது.
தகவல்:
K.M.T.சுலைமான்,
துணைச் செயலாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம். |