காயல்பட்டினத்தின் நீண்டகால குடிநீர் பிரச்சினையைத் தீர்த்திடும் முகமாக விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது 2ஆவது பைப்லைன் குடிநீர் வினியோகத் திட்டம்.
இத்திட்டத்தின் கீழ், பொன்னன்குறிச்சியிலிருந்து காயல்பட்டினத்திற்கென தனிக்குழாய் அமைத்து, நேரடியாக குடிநீர் நகர் முழுக்க வினியோகிக்கப்படும்.
செலவு மதிப்பீட்டுத் தொகை:
இத்திட்டத்திற்கான மொத்த செலவு மதிப்பீட்டுத் தொகை ரூ.29,67,00,000/-
இத்தொகையில் மத்திய அரசு மானியமாக வழங்கும் 80% தொகை, மாநில அரசு மானியமாக வழங்கும் 10% தொகை போக, நகர்மன்றம் செலுத்த வேண்டிய எஞ்சிய 10% தொகை ரூ.2,96,70,000/-
இத்தொகையில், நகர்மன்ற பொதுநிதியிலிருந்து ரூ.1,50,00,000/- கொடுக்கப்படவுள்ளது.
நகர்மன்றத் தலைவர் நன்கொடை:
நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தனது பொறுப்பில் ரூ.50,00,000/- நன்கொடையாக வழங்க ஒப்புதலளித்துள்ளார்.
இவை போக, தேவைப்படும் எஞ்சிய தொகையான ஒரு கோடி ரூபாயை திரட்டுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை கூட்ட அரங்கில் 22.12.2010 அன்று இரவு 07.15 மணிக்கு நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டம்:
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்திற்கு பேரவைத் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார்.
நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், பேரவை துணைத்தலைவர் மற்றும் கே.எம்.டி. தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஹாஜி வாவு அப்துல் கஃப்ஃபார், நகர்மன்ற துணைத்தலைவர் கஸ்ஸாலி மரைக்கார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரவை துணைச் செயலாளர் ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். மவ்லவீ ஹாஃபிழ் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். பேரவை ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
தலைமையுரையைத் தொடர்ந்து, இரண்டாவது பைப்லைன் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து, நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்ட நகர பிரமுகர்களின் இதுகுறித்த சந்தேகங்களுக்கு நகர்மன்றத் துணைத்தலைவர் கஸ்ஸாலி மரைக்கார் விளக்கமளித்தார்.
நகரின் தற்போதைய குடிநீர் வினியோக முறை:
காயல்பட்டினத்தில் குடிநீர் சேகரிப்புத் தொட்டிகள் (வாட்டர் டேங்க்) 14 உள்ளதாகவும், அவற்றின் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே நகர மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருவதாகவும், 2ஆவது பைப்லைன் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், 45 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்படும் என்றும், தொய்வின்றி தினசரி குடிநீர் வினியோகம் நடைபெறும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
புதிய குடிநீர் திட்டத்தால் விளையப்போகும் நன்மைகள்:
அதுபோல, குடிநீர் இணைப்பைப் புதிதாக பெறுவதற்கு இனி காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், மின் இணைப்பு போல விண்ணப்பித்த சில நாட்களிலேயே கிடைக்கப்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இனி, புதிய இணைப்பு - பழைய இணைப்பு என்றெல்லாம் குடிநீர் இணைப்புகள் இருக்காதென்றும், அனைவருக்கும் ஒரே இணைப்பு மூலம், ஒரே நேரத்தில் குடிநீர் வினியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பொதுமக்களிடமிருந்து புதிய இணைப்புத் தொகை நிதியாகப் பெறல்:
நகர்மன்றம் செலுத்த வேண்டிய ஒன்றரை கோடி ரூபாயில், நகர்மன்றத் தலைவர் செலுத்தும் 50 லட்சம் ரூபாய் போக எஞ்சிய ஒரு கோடி ரூபாயை அரசு கடனாகக் கூட தந்துவிடும்... ஆனால், நமது பொதுமக்களின் குடிநீர் மாதாந்திர கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால், அதைத் தவிர்த்திடும் பொருட்டு, 2ஆவது பைப்லைன் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் உபரியாக வழங்கப்படவுள்ள 2000 புதிய குடிநீர் இணைப்புகளுக்கு இணைப்பொன்றுக்கு ரூ.5,100 வீதம் முற்கூட்டியே பெற்றுக்கொண்டு, அதன் மொத்தத் தொகையான ஒரு கோடி ரூபாயை இந்த வகைக்காக தருவதென இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் படி, பொதுமக்களுக்கு முறையாக இதுகுறித்த தகவல் அறிவிக்கப்படும் என்றும், அதன் பின்னர், தேவைப்படுவோர் தமக்கு புதிய இணைப்பை கட்டணம் செலுத்தி முற்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
செலுத்தப்படும் இந்தத் தொகைக்கான இணைப்பு அனுமதி உடனடியாகத் தரப்படும் என்றும், அதை பிற்பாடு யாருடைய பெயரில் வேண்டுமானாலும் அவர்கள் மாற்றி எடுத்துக்கொள்ளலாம் என்றும், கொடுக்கும் தொகைக்கான புதிய இணைப்பைப் பெறுவதற்குள் புதிய நகர்மன்ற ஆட்சிக்குழு மாறினாலும், தொகைக்கு முழு பாதுகாப்பளிக்கப்பட்டு, குடிநீர் இணைப்பு புதிதாக வழங்கும் வகையில் தீர்மானமியற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பேரவை வசூலிக்கும்!
புதிய குடிநீர் இணைப்புக்கான பொதுமக்களின் தொகைகளை மக்கள் நல அமைப்பொன்றின் மூலம் வசூலித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அப்பொறுப்பை எடுத்துக்கொள்ளும் என்றும், பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் புதிய குடிநீர் இணைப்புத் தொகைக்கு பேரவை ரசீது வழங்கும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
டெண்டர் அறிவிப்பு:
2ஆவது பைப்லைன் திட்டம் நிறைவேற்றுவதற்காக Tamilnadu Water Supply and Drainage - TWAD துறையால் டெண்டர் விடப்படும் என்றும், டெண்டர் விடப்பட்ட 18 மாதத்திற்குள் (ஒன்றரை ஆண்டுக்குள்) 2ஆவது பைப்லைன் திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும் என்றும், டெண்டர் எந்நேரத்திலும் விடப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் இக்கூட்டத்தில் நகர்மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக, மவ்லவீ சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ நன்றி கூறி துஆ ஓத, அத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
கலந்துகொண்டோர்:
ஹாஜி பிரபு சுல்தான், ஹாஜி பிரபுத்தம்பி, ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், ஹாஜி சொளுக்கு முஹம்மத் இஸ்மாயீல் (முத்து ஹாஜி), ஹாஜி வாவு எஸ்.காதர் ஸாஹிப், ஹாஜி சுல்தான், ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி காக்கா, ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், ஏ.கே.பீர் முஹம்மத், சென்னை காயல்பட்டினம் ஐக்கிய சங்க நிர்வாகி காதர், ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், ஹாஜி மஹ்மூத் நெய்னா, ஹாஜி வாவு மொஹுதஸீம், ஜெய்ப்பூர் ஹாஜி அபூதாஹிர், எல்.எம்.இ.கைலானீ, ஹாஜி ஏ.ஆர்.இக்பால், ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, லண்டன் டாக்டர் செய்யித் அஹ்மத், ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, ஹாஃபிழ் சுலைமான், கோமான் லுக்மான், ஹாஜி ஹஸன், ஹாஜி எஸ்.ஏ.கே.பாவா நவாஸ், ஹாஜி கத்தீப் மீராஸாஹிப், ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ, தம்மாம் செய்யித் ஹஸன் மற்றும் பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
|