காயல்பட்னம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி சார்பில், புதுடில்லி நேஷனல் ட்ரஸ்ட், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து, தொண்டு நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் 20.12.2010 திங்கட்கிழமையன்று நடத்தப்பட்டது.
அன்று காலை 10.00 மணிக்குத் துவங்கிய கருத்தரங்கிற்கு துளிர் மறுவாழ்வுத் திட்டப் பணிகள் தலைவர் அ.வஹீதா தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார். துளிர் அறக்கட்டளை செயலர் ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தொடர்ந்து, “தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டங்கள்” (Tamilnadu Govt. Schemes for Differently Abled) என்ற தலைப்பில், தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜார்ஜ் தாஸ் உரையாற்றினார்.
இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர் கேப்ரியல், ”The Role of NGO's in the process of Empowerment and social Transformation of people with Disabilities” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இக்கருத்தரங்கில் மற்றுமொரு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட, புதுடில்லி நேஷனல் ட்ரஸ்ட்டின் சென்னை மண்டல நோடல் ஏஜென்ஸியான ஸ்பாஸ்டிக் சொஸைட்டியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் அலோசியஸ், "Salient Features of the schemes of National Trust" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர், புதுடில்லி நேஷனல் ட்ரஸ்ட்டின் குறும்படம் திரையிடப்பட்டது.
மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர், துளிர் அறக்கட்டளை நிறுவனர் வழக்குறைஞர் அஹ்மத் அப்துல் காதிர், “நேஷனல் ட்ரட்ஸ்ட் மற்றும் உள்ளூர் குழு கமிட்டி - தேசிய அறக்கட்டளைச் சட்டம் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டப்பூர்வ பாதுகாவலரை நியமித்தல்” "Role of Local Level committee & Legal Guardianship under National Trust Act 1999" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
பின்னர், துளிர் அறக்கட்டளை மற்றும் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் நிர்வாகி ஆயிஷா சாகிப் தம்பி வாழ்த்துரை வழங்கினார்.
துளிர் பள்ளியின் தொழில்வழி நுட்ப மருத்துவர் வரதராஜன் நிறைவுரையாற்ற, அப்பள்ளியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஜான் நன்றியுரையுடன் கருத்தரங்கம் நிறைவுற்றது. |