வெளிநாடுகளில் தங்கிவிட்டு நாடு திரும்பும் பெற்றோர்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தங்கள் பிள்ளைகளின் தொடரும் கல்வி. மொழி பாடங்கள் ஒரு பிரச்சனை என்றாலும், மற்றொரு முக்கிய பிரச்சனை சான்றிதழ்களில் பெறவேண்டிய ஒப்புதல் கையெழுத்துகள்.
நகரில் உள்ள சில பள்ளிகூடங்களின் நிர்வாகிகள் - சான்றிதழ்களை பள்ளியில் சேரும்போது மாணவர்கள் சமர்ப்பிக்கும் வேளையில், அனைத்து சான்றிதழ்களும் இதற்கு முன்னர் குடியிருந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து கையெழுத்து பெறப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்கள். பல காரணத்திற்காக அது சாத்தியம் இல்லாத பட்சத்தில், அம்மாணவர்களை வேறு பள்ளிகூடங்களில் சேர்க்க நேர்ந்துள்ளது .
இவ்வாறு கையெழுத்து பெற்ற சான்றிதழ்களை பள்ளிக்கூட நிர்வாகிகள் கேட்பது சட்டரீதியாக அவசியமா என ஹாங்காங் வாழ் காயலர் அரபி ஹாஜா முஹைதீன் தகவல் அறியும் சட்டத்தின் (Right to Information Act) கீழ் தமிழக தகவல் ஆணையர் கே.எஸ்.திரிபாதி IAS யிடம் வினவியிருந்தார். அதற்கான பதிலை தற்போது Matriculation பள்ளிக்கூடங்களுக்கான இணை இயக்குநர் வழங்கியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது :-
1) ஓர் இந்தியர், ஜூலை 31 அன்று ஐந்து வயதை பூர்த்தி செய்திருந்தால், அவர் ஒன்றாம் வகுப்பில் சேர தகுதிபெற்றவர்
2) கட்டாய கல்வி சட்டத்தின்படி (Right to Education Act) - வெளிநாட்டில் இருந்து திரும்பி, இந்திய பள்ளிகூடங்களில் படிக்க விரும்பும் மாணவரின் எந்த தகுதி சான்றிதழிலும் இந்திய தூதரக முத்திரை/கையெழுத்து தேவை இல்லை. ஆனால் அம்மாணவர் பள்ளியில் சேரும்பொழுது அவரின் பாஸ்போர்டையும், இந்திய தூதரக கையெழுத்து கொண்ட விசா நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். (அதாவது இந்திய தூதரக கையெழுத்து அவசியம் தேவையான சான்றிதழ் விசா நகல் மட்டும் தான்)
3) சில பெற்றோர்கள் அவசரமாக நாடு திரும்பவேண்டிய சூழலில் மாணவர் குறித்த எந்த சான்றிதழையும் கொண்டு வராமல் இருந்திருக்கலாம்.
அப்படி இல்லாவிட்டாலும், பொதுவாக பள்ளிக்கூடங்கள் மாணவர் பள்ளியில் சேர விண்ணப்பிக்கும் போது, அவர்களுக்கு சில பாடங்களில் (உதாரணமாக கணிதம், அறிவியல், ஆங்கிலம்) தேர்வு நடத்தி, அதன் அடிப்படையில் மாணவரை பள்ளியில் சேர்ப்பதா, வேண்டாமா என முடிவெடுக்கலாமா என்ற கேள்விக்கு சட்டம் அது போன்ற பரிட்சைகளை பரிந்துரைக்கவில்லை என பதில் கூறப்பட்டுள்ளது
4) (ஏதாவது) பள்ளியில் படிப்பினை பாதியில் நிறுத்தியதற்கான (Dropout Certificate/Discontinued Certificate) சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கவேண்டுமா என்ற கேள்விக்கு அதற்கு அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
5) மேலும் மொழி பாடம் குறித்த வினாவிற்கு - Tamil Nadu Learning Act, 2006 விதிகளின்படி - வகுப்புகள் 1 முதல் 10 வரை தமிழ் கட்டாய பாடம் ஆகும். மாணவர்கள் - பகுதி 1ல் தமிழையும், பகுதி 2ல் ஆங்கிலத்தையும், பகுதி 3ல் கணிதம், அறிவியல், வரலாறு போன்ற பிற பாடங்களையும் பயில வேண்டும். அவரின் தாய் மொழி தமிழ் அல்லது ஆங்கிலம் இல்லாத பட்சத்தில், பகுதி 4ஆக தன் தாய் மொழியை பயிலலாம்
இவ்வாறு கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட்டுள்ளது.
தகவல்:
அரபி ஹாஜா முஹைதீன், ஹாங்காங் |