காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவில், மரைக்கார் பள்ளிக்கெதிரில் அமைந்துள்ளது ரஹ்மானிய்யா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி. அரசு அங்கீகாரம் பெற்ற இப்பள்ளியின் சார்பில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக் கூட்டம் 22.12.2010 அன்று மாலை 05.30 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
அப்பள்ளியின் கல்வி வளர்ச்சி ஆலோசனைக் குழுவைச் சார்ந்த ஓவியர் லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். பள்ளி மாணவ-மாணவியர் மூவர் இணைந்து கிராஅத் ஓதி, கூட்டத்தைத் துவக்கி வைத்தனர்.
சஊதி அரபிய்யா யான்புவில் வசிக்கும் கராத்தே முன்னாள் வீரர் ஜாஃபர் ஸாதிக், சென்னை ஜாஹிர் ஹுஸைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கராத்தே மாஸ்டர் பேட்டை இர்ஃபான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர்களை பள்ளி தலைமையாசிரியை ஆஸியா அறிமுகப்படுத்திப் பேசினார்.
பின்னர், சர்வதேச கராத்தேயின் நிலை குறித்தும், மனம் சுறுசுறுப்பாக இருக்கவும், உடல் வலிமை பெறவும் இத்தற்காப்பு கலை மிகவும் அவசியம் என்றும் சிறப்பு விருந்தினர் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோருக்கு விளக்கிப் பேசினார். தாம் காயல்பட்டினத்தின் பல பள்ளிக்கூடங்களுக்கும் சென்று மாணவ-மாணவியருக்கு கராத்தே பயிற்சி தருவதாகவும், வரும் ஜனவரி மாதம் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று, சர்வதேச கராத்தே மாஸ்டர் மலேசியா ஷிஹான் டோனி பொன்னையா காயல்பட்டினத்திற்கு வரவுள்ளதாகவும், இங்கு கராத்தே பயிற்சி பெற்ற மாணவ-மாணவியருக்கு பெல்ட் வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பின்னர், அப்பள்ளியின் 20 மாணவ-மாணவியர் கராத்தே ஆசிரியரிடம் பெற்ற பயிற்சியை பெற்றோர் முன்னிலையில் நேரடியாக செய்து காண்பித்தனர். பள்ளி ஆசிரியை ப்ரேமா நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.
தகவல்:
ரஹ்மானிய்யா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி சார்பாக,
ரஃபீக்கா மணாளன்
காயல்பட்டினம். |