காயல்பட்டினம் முத்துவாப்பா தைக்கா தெருவில், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையையடுத்து வடபுறத்தில் அமைந்துள்ளது மஹான் அஸ்ஸெய்யித் அஹ்மத் ஸாஹிப் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் அடக்கஸ்தலம்.
அன்னாரின் 139ஆம் வருட கந்தூரி நிகழ்வுகள், ஹிஜ்ரீ 1432 முஹர்ரம் முதல் நாள் துவங்கி, முஹர்ரம் 14ஆம் தின இரவு வரை நடைபெற்றது.
தினமும் அதிகாலையில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் மஹான் அவர்களின் பெயரில் கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டதுடன், மர்ழிய்யாவும் ஓதப்பட்டது.
19.12.2010 அன்று மாலையில், இமாம்களான ஹஸன், ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் மவ்லித் மஜ்லிஸ், டி.எம்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் பேஷ் இமாம் தலைமையில் நடைபெற்றது.
அன்றிரவு ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் அவ்லியா ஸாஹிப் தலைமையில் ராத்திப் மஜ்லிஸ் நடைபெற்றது. பின்னர், மத்ரஸா ஹாமிதிய்யா ஹிஃப்ழுப் பிரிவு மாணவர் எஸ்.எச்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா கிராஅத் ஓதினார்.
அதனைத் தொடர்ந்து, இமாம்களான ஹஸன், ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் வாழ்க்கைச் சரித உரையை, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் ஃபாஸீ வழங்கினார்.
ஹாமிதிய்யா ஹிஃப்ழு மத்ரஸாவின் முதன்மை பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் சித்தீக் மிஸ்பாஹீயின் துஆவுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
மறுநாள் 20.12.2010 அன்று மாலையில், மஹான் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்கள் மீதான மவ்லித் மஜ்லிஸ், குருவித்துறைப் பள்ளிவாசல் மற்றும் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் தலைவர் மவ்லவீ எஸ்.கே.எம்.ஷெய்கு அப்துல்லாஹ் ஜுமானீ தலைமையில் நடைபெற்றது.
அன்றிரவு, குருவித்துறைப்பள்ளியின் முன்னாள் பேஷ் இமாம் ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் தலைமையில் ராத்திப் மஜ்லிஸ் நடைபெற்றது. பின்னர், ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூத் கிராஅத் ஓதினார். அதனைத் தொடர்ந்து, மஹான் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் வாழ்க்கைச் சரித உரையை, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் ஃபாழில் பாக்கவீ நிகழ்த்தினார்.
இறுதியாக, ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் நன்றி கூற, ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ பாக்கவீயின் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. |