தம் பிள்ளைகளின் ஒழுக்கம் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காக பெற்றோர் சில தியாகங்களைச் செய்தேயாக வேண்டும் என, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட - நகர பள்ளிக்கூடங்களின் தலைமையாசிரியர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்தில் தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.
இக்கூட்டம் குறித்து, இக்ராஃ செயலர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
மாணவியரை விட மாணவர்களின் கல்வித்தரம் ஆண்டுதோறும் படிப்படியாக குறைந்துகொண்டு வருவதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் கல்வித் தரத்தை முன்னேற்றுவதற்கான காரணிகளை ஆய்ந்தறிந்து செயல்படுத்திட வேண்டும் என்பதற்காக, முதற்கட்டமாக காயல்பட்டினம் நகர பள்ளிக்கூடங்களின் தலைமையாசிரியர்களை ஒன்றுகூட்டி கருத்துக் கேட்பது என்று அண்மையில் நடைபெற்ற இக்ராஃ செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் இக்ராஃ தலைவரும், சிங்கப்பூர் காயல் நல மன்றத் தலைவருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமையில், இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்றது.
கலந்துகொண்டோர்:
நகரின் 06ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தனர்.
எல்.கே.மேனிலைப்பள்ளி சார்பில் அதன் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சார்பில் அதன் தலைமையாசிரியர் ஸ்டீஃபன்,
அரசு மகளிர் மேனிலைப்பள்ளி சார்பில் அதன் தலைமையாசிரியை யு.திருமலை,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி சார்பில் அதன் தலைமையாசிரியை ஜெஸீமா,
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சார்பில் அதன் தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி ஆகியோர் கலந்துகொண்டனர்.
சென்டரல் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் காஜா முகைதீன் தம் குடும்ப நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக வெளியூர் சென்றுவிட்டதால், அவரது பிரதிநிதியாக அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர் வந்திருந்தார்.
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை மீனா சேகர் மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் சென்றுவிட்டதால் அவரது பிரதிநிதியாக அப்பள்ளியின் அரபி ஆசிரியை முஹம்மத் ஃபாத்திமா, வரலாற்று ஆசிரியை அந்தோனியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் எண்ணிக்கை குறைவுக்கான காரணம்:
அரசு பொதுத்தேர்வுகளில் - குறிப்பாக பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் கலந்துகொள்ளும் மாணவியரை விட மாணவர்களின் எண்ணிக்கை குறையக் காரணமென்ன என்று துவக்கமாக வினவினார் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன்.
பிறப்பு விகிதத்தில் பெண்களை விட ஆண்கள் குறைவு...
வெளியூர்களில் படிப்பவர்கள் பெண்களை விட ஆண்கள் அதிகம்...
பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு, தொழிற்கல்வி (ஐ.டி.ஐ., பாலிடெக்னிக்) பயிலச் செல்லல்... கடைகளுக்கு வேலை பார்க்கச் செல்லல்...
ஆகியவற்றில் மாணவியரை விட மாணவர்களின் எண்ணிக்கை கூடுதல் ஆகியன காரணமாக இருக்கலாம் என தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.
அரசு உதவிகள் நிறைவாகக் கிடைக்கின்றனவா?
சிறுபான்மை மாணவர்கள் உள்ளிட்ட மாணவ-மாணவியருக்கு அரசு வழங்கும் உதவித்தொகைகள் முறையாக அவர்களுக்குக் கிடைக்கின்றனவா என்று வினவப்பட்டது.
இதற்கு ஒரே சொல்லில் விடை தர இயலாது...
குறிப்பிட்ட அளவிலான மாணவ-மாணவியருக்குக் கிடைக்கிறது என்றாலும், விண்ணப்பிக்கும் எல்லா மாணவ-மாணவியருக்கும் அது கிடைப்பதில்லை...
சில வசதியான மாணவர்களுக்கு கிடைக்கும் அதே உதவித்தொகை, ஏழை மாணவர்களுக்கு கிடைக்காமலும் போய்விடுகிறது.
இதற்கான காரணம் என்னவென்று உறுதியாகத் தெரியவில்லை...
உதவித்தொகை வழங்கப்படுவதற்கான மாணவர்களின் விண்ணப்பங்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது என்பது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கலாம்...
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களின் கல்வித் தரம் குறையக் காரணம் என்ன?
மாணவியருடன் ஒப்பிடுகையில் மாணவர்களின் கல்வித்தரம் குறையக் காரணமென்ன என்று வினவப்பட்டது.
இதற்கு அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் பல்வேறு கருத்துக்களை பின்வருமாறு தெரிவித்தனர்:-
எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா - தலைமையாசிரியர், எல்.கே.மேனிலைப்பள்ளி:
கவனச்சிதைவு:
மாணவர்களின் கவனம் இந்நகரில் மிகக் கடுமையாக சிதைக்கப்படுகிறது...
மாணவர்களில் ஏழை - பணக்காரர் என்ற பாகுபாடின்றி, பெரும்பாலும் அனைத்து மாணவர்களிடமும் மோட்டார் பைக், மொபைல் ஃபோன் உள்ளது...
பெற்றோர் ஒத்துழையாமை:
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பெற்றோர் ஒத்துழைப்பு மிக மிகக் குறைவு...
மாணவர்களின் நலனுக்காக அவர்களை சில நேரங்களில் கண்டிக்கவும், தண்டிக்கவும் வேண்டிய அவசியம் உள்ளது. எனினும், தற்காலத்தில் அது விஷயத்தில் அரசின் சட்டங்கள் ஆசிரியர்களுக்கு சாதகமாக இல்லை என்பது, தவறு செய்யும் மாணவர்கள் அதே வழியில் தொடர வாய்ப்பேற்படுத்திக் கொடுத்துள்ளதை உணர முடிகிறது...
எங்கே சட்டம் நம்மை தண்டித்துவிடுமோ என்ற அச்சத்தில் ஆசிரியர்களும் தண்டிப்பு, கண்டிப்பு எதையும் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்...
தீய நண்பர் வட்டம்:
சில மாணவர்கள் இயற்கையில் நல்லவர்களாக இருந்தாலும், அவர்களுடன் சேரும் நண்பர்கள் அவ்வாறில்லாத நிலையில், தொடர்ச்சியாக அவர்களுடனேயே இருந்திருந்து, இவர்களும் கல்வியில் ஆர்வம் குன்றியவர்களாகவும், தீச்செயல்கள் புரிவோராகவும் உள்ளனர்...
இப்போது நடைபெற்று முடிந்துள்ள அரையாண்டுத் தேர்வின்போது கூட, நாளை முக்கியமான ஒரு தேர்வு இருக்கையில், இன்று மாலையில் மேல்நிலை மாணவன் ஒருவன் கையில் க்ரிக்கெட் விளையாடுவதற்கான உபகரணங்களுடன் வீரநடை போட்டு விளையாடச் சென்றுகொண்டிருப்பதை நானே நேரடியாகக் கண்டும் ஒன்றுமே சொல்ல இயலாத நிலை...
தேர்வில் முறைகேடு:
வகுப்பிற்குள் ஆசிரியர் நடத்தும் பாடத் தேர்வுகளில் கூட மாணவர்கள் பிட் எடுத்து வந்து முறைகேடுகளைச் செய்யும் நிலை...
பிட் எழுதுவதைக் கொண்டாவது அப்பாடத்தின் சில பகுதிகளில் மண்டையில் ஏறும் என்று கூறலாமோ என்று தோன்றுகிறது... அதையும் ஒழிக்கும் விதமாக நகரின் நகலகங்களில் (ஜெராக்ஸ் கடைகள்) நுண்ணகல் (மைக்ரோ ஜெராக்ஸ்) எடுத்துக் கொடுப்பதன் மூலம், அந்த வாய்ப்பும் போய்விட்டது. இதுபோன்ற ஜெராக்ஸ் எடுத்துக் கொடுக்கக் கூடாது என அக்கடை உரிமையாளர்களிடம் வலியுறுத்தப்பட வேண்டும்.
விடைத்தாள்கள் படும் பாடு:
மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களை மதிப்பெண் இட்டு, ஆசிரியர்கள் அவர்களிடம் வழங்குகின்றனர். அதைப் பார்த்து, எதற்காக தனது மதிப்பெண் குறைந்தது என்று கூட பார்க்கத் தேவையில்லை... அந்த பாடவேளை முடியும் வரையிலாவது மாணவர்கள் அதைத் தம் கையில் வைத்துக் கொள்கிறார்களா என்றால் இல்லை.
அவர்கள் அந்த இடத்திலேயே அவற்றை சுக்குநூறாகக் கிழித்து, வகுப்பறையிலேயே போட்டு, வகுப்பறையையே குப்பையாக்கி விடுகின்றனர். அதன் பிறகு அங்கு துப்புரவுப் பணி மேற்கொண்டால், ஒரு பெரும் காகிதப் பொதியையே சுமக்க வேண்டியிருக்கும். அவ்வளவு குப்பைகள்...
இப்படியிருந்தால், அவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களின் மனது என்ன பாடுபடும் என்று பாருங்கள்...
மாணவர்கள் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இல்லை:
மாணவர்கள் பெற்றோரின் - குறிப்பாக தாய்மாரின் கட்டுப்பாட்டிலேயே இல்லை என்று சொல்ல வேண்டும். சில நேரங்களில் ஒரு மாணவனின் தாயாரோ, தந்தையோ, வீட்டிலுள்ள மூத்த ஆண்களோ நம்மிடம் வந்து, அம்மாணவன் குறித்த சில குறைகளைத் தெரிவித்துவிட்டு, “சார்... இதை நீங்களே சுயமாக சொல்வது போல சொல்லுங்க சார்! நான்தான் சொன்னேன் என்று மட்டும் அவனுக்குத் தெரிந்துவிட்டால் வீட்டையே ஒரு வழி பண்ணிவிடுவான் சார்... நான் இங்கு வந்து போனதைக் கூட எக்காரணம் கொண்டும் அவனிடம் வெளிப்படுத்தி விடாதீங்க சார்...” என்று மிகுந்த பயத்துடன் சொல்லும் அவல நிலை!
இவ்வாறு எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா தெரிவித்தார்.
யு.திருமலை - தலைமையாசிரியை, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி:
மாணவர்களின் தவறுகளை ஊடகங்கள் பெரிதுபடுத்தல்:
இன்று, “ஆசிரியர் கண்டித்ததால் மாணவி தற்கொலை... மாணவர் தற்கொலை” என்று செய்திகள் வெளிவராத நாளே இல்லை... நாளேடுகளும், தொலைக்காட்சி அலைவரிசைகளும் வரிந்து கட்டிக்கொண்டு இதுகுறித்து தொடர் செய்திகளை வெளியிடுவதால், தவறு செய்யும் மாணவர்களிடையே அதே வழியில் ஊக்கமும், நியாயத்திற்காக கண்டிக்கும் ஆசிரியர்களுக்கு, “நமக்கேன் வம்பு... பாடத்தை மட்டும் நடத்திக்கொண்டு போவோம்... அவள் படித்தால் என்ன? படிக்காவிட்டால் என்ன...?” என்ற மனநிலை இயற்கையாகவே வந்துவிடுகிறது.
ஆசிரியையரின் தியாகம்:
பொதுவாக அரசுப் பள்ளிக்கூடங்களில் விதித்த நேரங்களில் மட்டுமே ஆசிரியர்கள் பணியாற்றுவர் என்றுள்ள நிலையில், இத்தனை சங்கடங்களையும் தாண்டி எம் பள்ளி ஆசிரியையர் வார விடுமுறை நாட்களில் கூட மாணவியருக்கு சிறப்பு பாட வகுப்புகளை நடத்துவதற்காக தியாக மனப்பான்மையுடன் வந்து சென்று கொண்டிருக்கின்றனர்...
இவ்வாறு அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை யு.திருமலை தெரிவித்தார்.
ஸ்டீஃபன் - தலைமையாசிரியர், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி:
பெற்றோருடன் கலந்தாய்வு:
மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக தற்போது தலைமையாசிரியர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடத்துவதைப் போல, அனைத்துப் பெற்றோரும் கலந்துகொள்ளும் வகையில் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையில் நேரடி நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்...
பொது அரங்கங்களில் அவர்கள் அனைவரையும் அவசியம் வரவழைத்து, அங்கு இதுபோன்ற கல்வி ஆர்வலர்களின் மனக்குறைகளை வெளிப்படுத்த வேண்டும்...
சிறப்பு வகுப்புகளில் மாணவர்களின் வருகை:
தேர்வு காலம் நெருங்குகையில், மாணவர்களை எப்படியேனும் சிறந்த தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகளை (special classes) நடத்துகின்றனர். ஆனால், ஒரு வகுப்பில் பாதியளவுக்குக் கூட மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை எனும்போது, ஆசிரியர்களின் ஆர்வம் என்ன பாடுபடும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்!
அவர்கள் நன்மைக்காகத்தான் நாம் அழைக்கிறோம் என்ற உணர்வு கூட இல்லாமல் மாணவர்கள் செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது...
இவ்வாறு முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஸ்டீஃபன் தெரிவித்தார்.
எம்.ஜெஸீமா - தலைமையாசிரியை, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி:
மாணவ-மாணவியர் உடல்நலனில் பெற்றோர் அக்கறை செலுத்தல்:
மாணவ-மாணவியரின் உடல் நலன் விஷயத்தில் பெற்றோர் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். குறிப்பாக, அரசுப் பொதுத்தேர்வு நடைபெறும் காலங்களில் அவர்களின் உடல் நலன் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அவர்களின் படிப்புக்கு வீட்டில் வசதி செய்து தரப்பட வேண்டும். மாணவ-மாணவியரை - அவர்கள் டியூஷன் சென்று படித்தாலும், அவர்களின் படிப்பு நிலவரங்கள் குறித்து பெற்றோர் தினமும் விசாரித்துக்கொள்ள வேண்டும்.
தேர்வு காலங்களில் இதர அரசுப்பணிகளை ஆசிரியர் மீது சுமத்தல்:
மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஆசிரியர்கள் கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்வுக் காலங்களின்போது, மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல் சேகரிப்பு உள்ளிட்ட அரசுத்துறை வேலைகளை ஆசிரியர்கள் மீது சுமத்துவது போன்ற நடவடிக்கைகள் மாணவ-மாணவியரின் கல்வித்தரத்தை நிச்சயம் பாதிக்கவே செய்யும்.
அரசு கட்டளையிடும்போது ஆசிரியர்களால் அதை மறுக்கவியலாது. அதே நேரத்தில், மாணவர்களின் தேர்ச்சி பின்தங்கும்போது ஆசிரியர்களால் என்ன சொல்ல முடியும் என்று நினைக்கவே பாரமாக உள்ளது. வரும் பிப்ரவரி மாதத்திலும் இதுபோன்று ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று சில பட்டியல்களைச் சேகரிக்க பணிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை எம்.ஜெஸீமா தெரிவித்தார்.
செண்பகவல்லி - தலைமையாசிரியை, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி:
இக்ராஃவில், அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட பின்னர், சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் செண்பகவல்லி, தன் பள்ளி ஆசிரியையருடன் ஒரு கலந்தாய்வை நடத்தி, அதில் தீர்மானிக்கப்பட்டவற்றை அறிக்கையாக ஆயத்தம் செய்துகொண்டு வந்து, சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
பெற்றோர் கேபிள் டிவி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்...
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியரின் பெற்றோர் வீட்டில் கேபிள் டிவி பாரப்பதை தங்களின் குழந்தைகளுக்காக தியாகம் செய்யவேண்டும்.
பெற்றோர் கண்காணிப்பு:
டியூஷன் மற்றும் பள்ளியில் படிப்பதை, படித்த பெற்றோராக இருந்தால் தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி, அவர்களுடன் நட்பாக பேசிக்கொண்டே படித்ததை செக் பண்ணலாம். படிக்காத பெற்றோரெனில், வீட்டில் உள்ள சகோதர-சகோதரிகளின் மூலம் இவ்வாறு செய்யலாம்.
பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தில் பங்கேற்றல்:
பள்ளியில் நடத்தப்படும் பெற்றோர்-ஆசிரியர கூட்டத்தில் பெற்றோர் தவறாது கலந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்தக் குழந்தையின் படிப்பு மற்றும் நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்ள முடியும். பெற்றோரில் பெரும்பாலோர் அவ்வாறு கலந்துகொள்வதே கிடையாது.
மாணவியர் விடுமுறை எடுப்பதைத் தவிர்த்தல்:
மாணவிகள் Study Class, Special Class-க்கு அடிக்கடி விடுமுறை எடுக்காமல் வந்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற முடியும். பெற்றோரும் இதைக் கவனத்தில் கொண்டு, கண்காணிப்புடன் செயல்பட வேண்டும்.
கைபேசி நடமாட்டம்:
சில மாணவியரிடம் கைபேசி (செல்ஃபோன்) நடமாடுவதை பெற்றோர் கண்டிப்பாக அறிந்து, அதைத் தவிர்க்கச் செய்ய வேண்டும்.
இரவுப் பாடம்:
இரவு நேரங்களில் குழந்தைகள் அதிக நேரம் படிக்க வேண்டியது இல்லை. இரவு 10.30 மணிவரை படித்தாலே போதும். காலை 05.00 மணியில் இருந்து 08.00 மணி வரை புரிந்து படித்தாலே மாணவியர் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெற்றிடலாம். தினமும் இதை செய்ய வேண்டும். தேர்வு நேரங்களில் மட்டும் செய்வதால் முழுப்பயன் கிடைக்கப் போவதில்லை.
கனிவான கண்டிப்பு:
பெற்றோரும் சரி, ஆசிரியரும் சரி... மாணவ-மாணவியரைக் கண்டிக்கும்போது, அவர்கள் தம் தவறை உணரும் வகையில் அக்கண்டிப்பு இருத்தல் வேண்டும். அல்லாமல், அவர்கள் தம் படிப்பையே வெறுக்கும் அளவுக்கு அது இருக்கக் கூடாது.
ஒவ்வொரு பருவத்தேர்வு முடிந்த பிறகும், அவர்கள் பெற்ற மதிப்பெண்களைப் பார்த்து, அதற்கேற்ப அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை (கவுன்சலிங்) கொடுக்கலாம்.
பெற்றோருக்கு இதுபோன்ற கூட்ட ஏற்பாடு:
பெற்றோருக்கும் இதே மாதிரி ஒரு கூட்டம் போட்டு கருத்துக்களைக் கேட்டறியலாம்... நமது கருத்துக்களையும் அவர்களுக்குத் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை செண்பகவல்லி அறிக்கை சமர்ப்பித்தார்.
இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர் - ஆசிரியர், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி:
டியூஷன் மோகம்:
எல்.கே.ஜி. பயிலும் குழந்தைகளையும் கூட டியூஷனுக்கு அனுப்பும் பழக்கம் இந்த ஊரில்தான் உள்ளதென்று கருதுகிறோம்... பெற்றோர்கள் ஃப்ரீயாக இருப்பதற்காக பிள்ளைகளை அவ்வாறு அனுப்பி விடுகின்றனர்.
ஒழுங்காக படிக்காத மாணவர்களை மட்டுமே சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டியூஷனுக்கு அனுப்புவார்கள். ஆனால் இன்று டியூஷன் படிக்காவிட்டால் அது ஒரு கேவலம் என்றாகிவிட்டது நமதூரில்... நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் கூட டியூஷனுக்குச் சென்றுதான் படிக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.
இதனால் வீட்டில் மாணவர்கள் பாடங்களைப் படிப்பதென்பதே தற்காலத்தில் இல்லாமலாகிவிட்டது.
இவ்வாறு சென்ட்ரல் மேனிலைப்பள்ளி ஆசிரியர் இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர் தெரிவித்தார்.
அந்தோனியம்மாள் - ஆசிரியை, எல்.கே.மெட்ரிகுலேஷன் பள்ளி:
சிறு குழந்தைகளைக் கூட கண்டிக்க இயலவில்லை:
ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவர்களைக் கூட கண்டிப்பது கடினமாக உள்ளது. அப்படி அட்டகாசம் செய்கின்றனர். இவர்கள்தானே பின்னர் வளர்ந்து, பெரிய மாணவர்களாகின்றனர்...?
படித்துக் கொடுக்கும் ஆசிரியர்களையே - அவர்களின் உருவத்தைக் கிண்டல் செய்யும் அளவில் இச்சிறு மாணவர்களின் தரம் உள்ளது. நல்ல பிள்ளைகளும் இருக்கின்றனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
பொது நிகழ்ச்சிகளில் பெற்றோருக்கு அறிவுரை:
கல்வியின் முக்கியத்துவம், பிள்ளைகள் விஷயத்தில் பெற்றோரின் கடமைகள் போன்றவை குறித்து, உங்கள் பொது நிகழ்ச்சிகளில் அறிஞர்களைக் கொண்டு அடிக்கடி உபதேசம் செய்துகொண்டிருக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை தொழுகை நேர உரையிலும் இதுகுறித்து தொடர்ந்து பேசப்பட வேண்டும்.
இவ்வாறு எல்.கே.மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியை அந்தோனியம்மாள் தெரிவித்தார்.
மேற்கண்டவாறு, நகர பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்கள் அமைந்திருந்தன.
ஆசிரியர்களின் தரம்:
பின்னர், ஆசிரியர்களின் பாடம் நடத்தும் தரம் குறித்து, இக்ராஃ தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் கேட்டார்.
1980களில் முழு அளவிலும், 90களில் திருப்தியான அளவிலும் ஆசிரியர்கள் தியாக மனப்பான்மையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பாடங்களை நடத்தியதோடு, மாணவர்களையும் நெறிப்படுத்தினர் என்பதும், 2000க்குப் பிறகு அது கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்து, இன்று பெரும்பாலும் இல்லாமலாகிவிட்டதும் உண்மையே!
எனினும், இதற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. மாணவர்களின் அலட்சியம், பெற்றோரின் கட்டுப்பாடின்மை, அரசின் பல்வேறு சட்டதிட்டங்கள் இவையனைத்தும், நாம் விரும்பியோ விரும்பாமலோ மாணவ-மாணவியருக்கு அவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்த விஷயங்களில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கையில், நமக்கு எதற்கு வம்பு...? பேசாமல் பாடங்களை மட்டும் நடத்திவிட்டுச் செல்ல வேண்டியதுதான்... என்ற மன நிலைக்கு ஆசிரியர்கள் மாறி வருகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை...
இவ்வாறு ஆசிரியர் குழுவினர் தெரிவித்தனர்.
மொத்தத்தில்,
மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து சரியாக புரிய வைக்கப்பட வேண்டும்...
அவர்களுக்குக் கல்வியில் கவனச்சிதைவை ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டறிந்து களைந்திட வேண்டும்...
பெற்றோர் மாணவர்களை தம் கட்டுப்பாட்டில், கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்...
என்ற கோரிக்கைகள் இக்கலந்தாய்வுக் கூட்டத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
வந்திருந்த அனைவருக்கும் இக்ராஃ துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான் நன்றி கூற, மாலை 06.00 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு இக்ராஃ செயலாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |