காயல்பட்டினம் அரிமா சங்கத்திற்கு, மாவட்ட அரிமா ஆளுநர் நேற்று (19.12.2010) வருகை தந்ததையொட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், நகர பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
காயல்பட்டினம் துளிர் கேளரங்கில், நேற்று காலை 11.00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. நகர அரிமா சங்க தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.சதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தலைமை தாங்கினார். பொருளாளர் எம்.எல்.ஷேக்னாலெப்பை கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். ஆசிரியர் அப்துர்ரஸ்ஸாக் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.
வி.டி.என்.அன்சாரி அரிமா வழிபாட்டு வாசகங்களை வாசித்தார். அரிமா கொடி வாழ்த்துக்குப் பின்னர், உலக சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக ஒரு நிமிடம் அமைதி காக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தலைவர் முன்னுரை வழங்கினார். பின்னர் அரிமா நகர செயலாளர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம் அறிக்கை சமர்ப்பித்தார். அரிமா சமூக நலப்பணிகளுக்கான கேபினட் செயலர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், அரிமா மாவட்ட ஆளுநரை அறிமுகப்படுத்திப் பேசினார்.
பின்னர் அரிமா மாவட்ட ஆளுநர் பி.ஓ.பி.ராமசாமி சிறப்புரையாற்றினார். அவர் தனதுரையில், காயல்பட்டினம் அரிமா சங்கத்தின் வரவேற்கத்தக்க செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசினார். உரையின் இறுதியில், அரிமா புதிய உறுப்பினர்களை ஆளுநர் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து நகர பயனாளிகளுக்கு, மிக்ஸி, தையல் இயந்திரம், எரிவாயு அடுப்பு, பாடநூற்கள், மருத்துவ நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆளுநர் மற்றும் நகர நிர்வாகிகள் இணைந்து இந்த உதவிகளை தமது கரங்களால் வழங்கினர்.
பின்னர் மேடையில் அமர்ந்திருந்த அரிமா மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாகுபுரம், காயல்பட்டினம் கிளை நிர்வாகிகளுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. மாவட்ட ஆளுநர் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.
நன்றியுரைக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. இந்நிகழ்ச்சியில், நகரின் பல பாகங்களிலிருந்தும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு விருந்து பரிமாறப்பட்டது.
முன்னதாக, அரிமா மாவட்ட ஆளுநர் உள்ளிட்ட அரிமா நிர்வாகிகள் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையிலுள்ள உள்நோயாளிகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கினர்.
பின்னர் காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டம் பகுதியைச் சார்ந்த மீனவ குடும்பங்களுக்கு அரிமா சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்ட கூரை வீடுகளைப் பார்வையிட்டனர்.
தொடர்ந்து, கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ,
L.K.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |