ஐக்கிய ராஜ்ஜிய (யு.கே.) காயல் நல மன்றத்தின் (KWAUK - க்வாக்) சார்பில் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் அம்மன்றத்திற்கான புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நிகழ்முறை:
எமது ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் இரண்டாவது பொதுகுழு கூட்டம் இறையருளால், 12.12.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 02.00 மணிக்கு, லண்டன் மாநகரம் சலோவ்வில் அமைந்துள்ள அப்டன் லீ சமூகக் கூட அரங்கில் நடைபெற்றது.
பொறியாளர் அபூபக்கர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அப்துல் ஹலீம் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கிவைத்தார்.
தவிர்க்க முடியாத பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையிலும், கடுமையான குளிர் காலத்திலும், அமைப்பின் அன்பான அழைப்பை ஏற்று, வருகை தந்த அனைவரையும் ஹாஃபிழ் அப்துல் மத்தீன் வரவேற்றுப் பேசினார்.
நகர்நலப்பணிகளுக்கு அமைப்பைப் பயன்படுத்தல்:
ஐக்கிய ராஜ்ஜியத்தில் (யு.கே.) வசிக்கும் காயலர்கள் ஒன்றுகூடுவதற்கு ஒரு களமாகவும்...
பிறருக்கு உதவும் நோக்கிலும்...
வேலை தேடியும், இதர தேவைகளுக்காகவும் காயல்பட்டினத்திலிருந்து யு.கே. வருகை தருவோருக்கு தகுந்த உதவிகளைச் செய்யும் நோக்கிலும்...
காயல்பட்டினம் நகர மக்களின் தேவைகளைக் கண்டறிந்து இயன்றளவு பூர்த்தி செய்யும் நோக்கிலும்...
இந்த அமைப்பைப் பயன்படுத்தலாம் என்று ஹாஃபிழ் அப்துல் மத்தீன் அப்போது தெரிவித்தார். இதுவரை நடந்துள்ள மன்றத்தின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும் அவர் விளக்கி கூறினார்.
பிற மன்ற செயல்பாடுகளை எடுத்துக்காட்டி தலைமையுரை:
பின்னர் தலைமையுரை ஆற்றிய பொறியாளர் அபூபக்கர், மன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் அதை எவ்வாறு செம்மையாக வழிநடத்திச் செல்லவேண்டும் என்பனவற்றை விளக்கிக் கூறினார்.
மேலும் அவர்களின் கடந்தகால சஊதி அரபிய்யாவின் மன்ற செயல்பாடுகளையும் அதை தாங்கள் வழிநடத்திச் சென்ற விதத்தையும் அழகுறு எடுத்துரைத்தார்.
நிதிநிலை அறிக்கை:
தலைமை உரையை தொடர்ந்து மன்றத்தின் நிதிநிலை அறிக்கையை சதக்கதுல்லாஹ் சமர்ப்பித்தார், மன்றத்தின் கடந்தகாலப் பணிகள் பற்றியும் அவர் விளக்கிப் பேசினார். மன்றதிற்கு மாதச் சந்தா எவ்வளவு முக்கியமானது என்பதையும், அதை எவ்வாறு அதிகபடுத்த வேண்டும் என்பதையும் அவர் தனதுரையில் விளக்கிக் கூறினார்.
புதிய நிர்வாகக் குழு:
பின்னர் மன்றத்தின் நிர்வாக குழு, உறுப்பினர்களின் ஒப்புதலுடன் பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டது:-
தலைவர்:
டாக்டர் செய்யித் அஹ்மத்
துணைத்தலைவர்:
பொறியாளர் அபூபக்கர்
செயலாளர்:
ஷாஹுல் ஜிஃப்ரீ கரீம்
துணைச்செயலாளர்:
அஸ்ஸாஹ் நூஹ் நியாஸ் (Mrs.Azzah Noohu Niyaz)
(பெண்கள் பிரதிநிதி)
பொருளாளர்:
குளம் சதக்கத்துல்லாஹ்
நிர்வாகக் குழு உறுப்பினர்கள்:
(1) செய்யித் மரைக்கார்
(2) டாக்டர் அபூதம்பி
(3) ஹஸன் மரைக்கார்
(4) அப்துல் மத்தீன் லபீப்
UK PROFESSIONAL EDUCATION & CAREER GUIDENCE Co-Ordinator:
ஸிராஜ் மஹ்மூத்
இவ்வாறு நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டது.
வினாடி-வினா QUIZ போட்டி:
பின்னர், மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட வினாடி-வினா போட்டி, ஹாஃபிழ் அப்துல் மத்தீன் தலைமையில் நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் இதில் உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பங்கேற்றனர்.
குறிப்பாக நம் தாயகமான காயல்பட்டினம் தொடர்பான வினாடி-வினா கேள்விகளுக்கு பலத்த வரவேற்பு காணப்பட்டது. முடிவில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
புற்றுநோய் தடுப்பு குறித்து கருத்துப் பரிமாற்றம்:
பின்னர் உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்ற அமர்வு நடைபெற்றது. ஊரில் தற்போது பரவலாக நிலவி வரும் புற்றுநோய் சம்பந்தமாக உறுப்பினர்கள் மிகுந்த அக்கறையுடன் கருத்துப் பரிமாற்றங்கள் செய்தனர்.
புற்றுநோய் குறித்து, டாக்டர் அபூ தம்பி விளக்கிக் கூறியதுடன், அந்நோய்க்கு உண்டான தடுப்பு முறைகளை அனைவரும் - குறிப்பாக பெண்கள் அறிந்து கொள்ளவேண்டியதன் அவசியத்தை அவர் விரிவாக எடுத்துக் கூறினார்.
புற்றுநோய் தடுப்பு முயற்சிகளுக்கு ஆதரவு:
இது சம்பந்தமாக அனைத்துலக காயல் நல மன்றங்கள் மற்றும் பொது நல அமைப்புகளால் செய்யப்படும் முயற்சிகளுக்கு எமது மன்றத்தினால் முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது .
அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழு கூட்டத்தை ஏப்ரல் 30 ஆம் தேதி டாக்டர் அபு தம்பி அவர்களின் இல்லம் அமைந்திருக்கும் நார்த் ஹாம்ப்டன் நகரில் நடத்துவதென்றும் (தற்காலிகமாக) முடிவு செய்யப்பட்டது.
UK காயலர்களுக்கு வேண்டுகோள்:
ஐக்கிய ராஜ்ஜியத்திலுள்ள காயலர்கள் அனைவரையும் இனங்கண்டு, இந்த அமைப்பில் அவர்களையும் அங்கமாக்குவதற்காக கடந்த பல மாதங்களாக தொடர் முயற்சிகள் செய்யப்பட்டு, அதன் விளைவாக இன்று இந்தளவுக்கு உறுப்பினர்களைக் கொணர முடிந்துள்ளது.
எனினும், இதுவரையிலும் மன்றத்தில் உறுப்பினராகாத ஐக்கிய ராஜ்ஜிய காயலர்கள் இதை அன்பான அழைப்பாகக் கொண்டு, முழு உரிமையுடன் தங்களை இம்மன்றத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்ளுமாறு ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றம் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
ஹாஃபிழ் அப்துல் மத்தீன் லபீப்,
நிர்வாக குழு உறுப்பினர்,
காயல் நல மன்றம்,
லண்டன், ஐக்கிய ராஜ்ஜியம். |