தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்து, ஐந்து தனியார் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இக்கப்பல் போக்குவரத்து துவங்க இந்திய மற்றும் இலங்கை அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதற்காக, தூத்துக்குடி துறைமுகத்தில், 2.5 கோடி ரூபாயில், நவீன வசதிகளுடன் கூடிய கப்பல் பயணிகளுக்கான அறையை புதுப்பிக்கும் பணி நடந்துவருகிறது. இம்மாதம் 31ம் தேதிக்குள்ளாக அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் செய்து முடிக்கப்படவுள்ளன.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி இங்கு, கப்பல் போக்குவரத்திற்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், துறைமுக அதிகாரிகள், கடற்படை, கடலோரகாவல்படை, சுங்கத்துறை, குடியுரிமை சரிபார்ப்புதுறை, போலீஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, தூத்துக்குடி துறைமுக துணைத்தலைவர் சுப்பையா கூறும்போது,
தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்து, இதுவரை மொத்தம் ஐந்து தனியார் நிறுவனங்கள் எங்களிடம் விண்ணப்பித்துள்ளன. திங்கள்கிழமை (டிசம்பர் 20ம் தேதி ) மாலை மூன்று மணி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் உள்ளதால், மேலும் விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த, அனைத்து விண்ணப்பங்களையும் நாங்கள், மும்பையிலுள்ள மத்திய கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு அனுப்புவோம். தகுதியான விண்ணப்பதாரர்கள் யார்? ஒருவாரத்திற்கு மொத்தம் எத்தனை கப்பல்கள் இயக்கப்படவுள்ளன? கட்டணம் எவ்வளவு?, என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஒரு கப்பலில் 300 முதல் 400 பயணிகள் வரை பயணிக்கலாம். பயணத்தின்போது, கப்பலில் அவர்களின் பாதுகாப்புக்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் தகுந்த ஆட்களை நியமிக்க வேண்டும். அப்பயணிகளுக்கு துறைமுகத்தில், மத்திய தொழில்பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு தருவர். இந்திய - இலங்கை அரசுகளிடையே கப்பலை இயக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டவுடன், பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கும். அதற்கு, தூத்துக்குடி துறைமுகம் அனைத்து விதத்திலும் தயாராகவுள்ளது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, அடுத்தாண்டு ஜனவரி மாத இறுதிக்குள்ளாக, இக்கப்பல்போக்குவரத்து துவங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்:
தினகரன்
|