தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் இரா.கஸ்தூரிதங்கம் தலைமை தாங்கினார். துணை மேயர் தொம்மை சேசுவடியான், ஆணையாளர் பெ.குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் தற்போது நிலவி வரும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க, திருச்செந்தூர், திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு செல்லும் பஸ்களை பழைய பஸ்நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக புதிய பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து திருச்செந்தூர் செல்லும் பஸ்களை புதிய பஸ்நிலையத்துக்கு மாற்றக்கூடாது, தொடர்ந்து பழைய பஸ்நிலையத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் கொறடா அன்புலிங்கம் தலைமையில் கூட்ட அரங்கின் மையப்பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். கூட்டம் முடிந்த பிறகும் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாலை 3 மணி அளவில் கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் மாநகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல்:
தினத்தந்தி |