காயல்பட்டினத்தில் புற்றுநோய் பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்காக முதற்கட்டமாக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்குவதென கத்தர் காயல் நல மன்ற பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 10ஆவது பொதுக்குழுக் கூட்டம், மன்றத்தின் நான்காமாண்டு துவக்க விழாவாக, இறையருளால் மிகச்சிறப்புற நடந்து முடிந்துள்ளது, அல்ஹம்து லில்லாஹ்!
சகோதரர் இஸ்மாஈல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றச் செயலாளர் வி.எம்.டி.அப்துல்லாஹ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
மன்றப் பொருளாளர் செய்யித் முஹ்யித்தீன் மன்றத்தின் நிதிநிலை அறிக்கையைப் படிக்க, கூட்டம் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. பின்னர், மன்றத்தின் துணைத்தலைவர் முஹம்மத் யூனுஸ் முன்னுரை நிகழ்த்தினார். பின்னர், புதிதாக மன்றத்தில் இணைந்துள்ள மூன்று உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து பேசிய மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் தனதுரையில்,
புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள்:
நமதூரில் தற்போது நிலவி வரும் புற்றுநோய் தாக்கம், அதை ஒழிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவரித்துப் பேசினார். இந்த முயற்சியில், உலக காயல் நல மன்றங்கள் அனைத்தும் ஓரணியில் நின்று செயல்பட வேண்டும் என அவர் அப்போது அழைப்பு விடுத்தார்.
ரூ.50,000/- தொகை ஒதுக்கீடு:
புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்காக முதற்கட்டமாக கத்தர் காயல் நல மன்றம் சார்பில் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய நிர்வாகக் குழு:
மன்றத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் நிறைவுற்றுள்ளதால், அதனைக் கலைத்துவிட்டு, புதிய நிர்வாகக் குழுவைத் தேர்வு செய்யலாம் என அப்போது அவர் மேலும் தெரிவித்தார்.
அதுகுறித்து கருத்து தெரிவித் மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களும், செயற்குழு உறுப்பினர்களும், தற்போதிருக்கும் மன்றத் தலைவரே அடுத்த இரண்டாண்டுகளுக்கு தலைவராக இருக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர். பொதுக்குழு உறுப்பினர்கள் அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
செயற்குழுவிற்கு புதிதாக நான்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களின் குழுமங்களை ஒழுங்கு செய்ய, மன்றத்தின் புதிய தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.
பரிசுகள்:
கூட்டத்திற்கு சுவை சேர்க்கும் வகையில், மன்ற உறுப்பினர்களுக்கு தனித்தனியே நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டு, குலுக்கல் முறையில் ஐவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - புதிய நிர்வாகக் குழு:
மன்றத்தின் தற்போதைய தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் அடுத்த இரண்டாண்டுகளுக்கு தலைவராக நீடிப்பார் என்று தீர்மானிப்பதோடு, புதிய செயற்குழு உறுப்பினர்களையும் இணைத்து, செயற்குழு உறுப்பினர்களுக்கான பணிகளை அவரே குழுவாரியாக ஒதுக்கீடு செய்வதற்கு இக்கூட்டம் அவரை பணிக்கிறது.
தீர்மானம் 2 - புற்றுநோய் தடுப்பு முயற்சிகளுக்கு நிதி:
காயல்பட்டினத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கத்தர் காயல் நல மன்றம் சார்பில் முதற்கட்டமாக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்குவதென்றும், உலகின் அனைத்து காயல் நல மன்றங்களும் இவ்வகைக்காக இயன்றளவுக்கு தாராள நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்வதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - காயல்பட்டினம் வருங்கால செயல்திட்ட முன்வடிவுக்கு ஆதரவு:
உலக காயல் நல மன்றங்களையும் ஒரு மஹல்லாவாகக் கருத்தில் கொண்டு வரையப்பட்டு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “வருங்கால காயல்பட்டினம் - செயல்திட்ட முன்வடிவு” என்ற தலைப்பிலான செயல்திட்ட முன்வடிவுக்கு இக்கூட்டம் தனது மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
நகர்நலன் கருதி, உலக காயல் நல மன்றங்கள் அனைத்தும் இத்திட்டத்தை ஆதரித்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டுமென இக்கூட்டம் உலக காயல் நல மன்றங்களைக் கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியில், மன்ற துணைச் செயலாளர் மீரான் நன்றி கூற, “முத்துச்சுடர்” மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் நிறைவாகக் கலந்துகொண்டனர்.
கூட்ட நிறைவுக்குப் பின் அனைவருக்கும் சுவையான மதிய உணவு விருந்தாக பரிமாறப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |