காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் கட்டப்படுகிற தொகுப்பு வீடுகள் குறித்தும், நகரின் ஏழு பொதுநல அமைப்புகள் மூலமாக பெறப்பட்ட மனு குறித்தும் விவாதித்து முடிவெடுப்பதற்காக, அவற்றை நிரலாகக் கொண்டு காயல்பட்டினம் முஸ்லிம ஐக்கியப் பேரவையின் பொதுக்குழுக் கூட்டம், காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில், 29.12.2010 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.
பேரவைத் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார். ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஹாஜி எஸ்.எம்.கபீர், ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, ஹாஜி வாவு அப்துல் கஃப்ஃபார், ஹாஜி எஸ்.அக்பர் ஷா, ஹாஜி பிரபு சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஜி வாவு கே.எஸ்.நாஸர் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். ஹாஃபிழ் எஸ்.எல்.ஷேக் அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். வரவேற்புரையைத் தொடர்ந்து ஹாஜி எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
நகர்நலன் விஷயத்தில் ஹாஜி எஸ்.அக்பர்ஷாவின் அக்கறை குறித்து புகழ்ந்து பேசிய அவர், பேரவையின் அமைப்பு குறித்து விளக்கிப் பேசி, அது ஆற்றிவரும் பணிகள் 34 கோப்புகளாக பேரவையில் உள்ளதாக தெரிவித்தார்.
காயல்பட்டினம் கடற்கரை விஷயத்தில் பேரவையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர், பேரவை துவக்கப்படுவதற்கு முன்பு வரை ஆளும் அரசாங்கங்கள் காயல்பட்டினத்தில் தாம் தீர்மானித்தவற்றை செய்ததாகவும், பேரவை துவக்கப்பட்ட பின்னர் அதன் நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகே எந்தவொரு விஷயத்திலும் அரசாங்கங்கள் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
நகர்நலப் பணிகள் பல பேரவையால் செய்யப்பட்டாலும், இளைஞர்களில் கைலானீ, மஹ்மூத் நெய்னா, முஹம்மத் முஹ்யித்தீன் உள்ளிட்ட ஒரு சில இளைஞர்கள் மட்டுமே பேரவையுடன் நெருங்கிய தொடர்பு வைத்து, அதன் பணிகளில் தம்மையும் இணைத்துச் செயல்படுவதாகவும் அவர் புகழ்ந்து பேசினார்.
நகரில் புற்றுநோய் பரவல் பெரும் கவலையளித்துக் கொண்டிருக்கிற நிலையில், அதுகுறித்து விவாதித்து செயல்திட்டங்கள் வகுப்பதற்காக நகர மருத்துவர்கள் - நகர பிரமுகர்கள் அடங்கிய கலந்தாலோசனைக் கூட்டத்தை கே.எம்.டி. மருத்துவமனையில் அண்மையில் நடத்தி முடித்துள்ளதாகவும், அதுகுறித்து தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பணிகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவையும், இன்னும் பலவும் செய்து வருகிற நகர பாராளுமன்றமான காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கு நகர பொதுமக்கள் ஆலோசனைகள், ஒத்துழைப்புகள், உடலுழைப்புகளை நிறைவாகத் தருமாறு அவர் தனதுரையில் கேட்டுக் கொண்டார்.
அடுத்து, காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில், கோஸ்மரை தர்காவிற்கருகில் கட்டப்பட்டு வருகிற தொகுப்பு வீடுகள் குறித்த விபரத்தை சொளுக்கு முஹம்மத் இஸ்மாயீல் (முத்து ஹாஜி) விளக்கிப் பேசினார்.
இத்தொகுப்பு வீடுகள் கட்டுவதற்காக அரசு ஆறு கோடியே நாற்பது லட்சம் ரூபாயை நிதியாக ஒதுக்கி, மும்முரமாக வேலைகளைச் செய்து வருவதாகவும், காயல்பட்டினம் நகராட்சி மன்றத்தின் முறையான அனுமதியோ, நகர பொதுமக்களிடம் முறையான கருத்துக்கேட்போ நடத்தாமல் இத்தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும், நகரில் பூர்வீகமற்றவர்களை புதிதாக குடியமர்த்தும் திட்டத்துடன் இது நிறைவேற்றப்படுவதாக அறிவதாகவும், உள்ளூர் பொதுமக்களுக்கே போதிய நிலம் இல்லாத நிலையில் இவ்வாறு திட்டங்களை அமுல்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
இதனைக் கண்டிக்கும் பொருட்டு, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் செவிலியாகப் பணியாற்றிய பொன்செல்வி தற்கொலைச் சம்பவத்தின்போது நகர மக்கள் ஒற்றுமையுடன் அணி திரண்டது போல தற்போதும் அணி திரண்டு ஒற்றுமையுடன் நமது உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என ஹாஜி எஸ்.அக்பர்ஷா உள்ளிட்ட கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையோர் கருத்து தெரிவித்தனர்.
நீண்ட நேர கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், இப்பிரச்சினையில் அரசின் கவனத்தை ஈர்க்கவும், நகர மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திடும் பொருட்டும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் சார்பில் வரும் 04.01.2011 செவ்வாய்க்கிழமையன்று முழு கடையடைப்பும், அன்று மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை காயல்பட்டினம் பிரதான வீதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்று அப்போது தீர்மானிக்கப்பட்டது.
பின்னர், காயல்பட்டினத்தில் துணை மின் நிலையம் அமைவதற்கான நிலம் வாங்குவதற்காக ஒரு ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், பேரவை சார்பில் இதுவரை அந்த வகைக்காக நகர தனவந்தர்களின் அனுசரணையுடன் ரூபாய் நான்கு லட்சம் திரட்டப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய தொகை திரட்டப்பட வேண்டும் என்றும், கூட்டத்தில் யாரேனும் விரும்பினால் தமது பங்களிப்பை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டது.
அதனடிப்படையில், காயல்பட்டினம் ஜெஸ்மின் பாரடைஸ் நிறுவனம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தனர். தனது பங்களிப்பையும் நிறைவாகத் தருவதாக ஹாஜி எஸ்.அக்பர்ஷா தெரிவித்தார்.
துணை மின் நிலையத்திற்கு இடம் கொடுக்க நகரில் நிறைய புறம்போக்கு நிலங்கள் இருக்கையில், ஏன் புதிதாக நிலம் வாங்க வேண்டும் என கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேட்க, ஒரு மாத கால அவகாசத்திற்குள் நிலம் காண்பித்தாக வேண்டிய நிலையில், அதற்காக இன்னும் தாமதித்துக் கொண்டிருந்தால் கிடைத்த வாய்ப்பு பறிபோகும் என்றும், அதற்காகத்தான் இம்முயற்சியை பேரவை மும்முரமாகச் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், கூட்டத்தின் இரண்டாவது நிரலான - நகரின் 7 பொதுநல அமைப்புகள் மூலமாக தரப்பட்ட மனு குறித்து விவாதிக்கப்பட்டது. “தொலைநோக்குப் பார்வையில் காயல்பட்டினம் - செயல்திட்ட முன்வடிவு” என்ற தலைப்பில் பேரவை நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட அந்த செயல்திட்ட முன்வடிவை என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் வாசித்தார். பின்னர் அதுகுறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.
இதனிடையே, அச்செயல்திட்ட முன்வடிவை முன்வைத்த அமைப்புகளில் ஒன்றான காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம், அதனை பேரவையிடம் சமர்ப்பித்தவர்கள் பேரவையின் நடப்பு நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்ததாகக் கூறி, ஒப்புதலைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக, அதன் தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் ஆகியோர் கூட்டத்தில் தெரிவித்தனர்.
துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
|