சிறுபான்மை மாணவ-மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படும் விதம் (Criteria) குறித்து சம்பந்தப்பட்ட துறையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விபரம் கேட்பதென, இக்ராஃ கல்விச் சங்க செயற்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, நிர்வாக அதிகாரி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் 6ஆவது செயற்குழுக் கூட்டம், அதன் தலைவரும், சிங்கப்பூர் காயல் நல மன்றத் தலைவருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமையில், 24.12.2010 அன்று மாலை 06.45 மணிக்கு, இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட, சஊதி அரபிய்யா - ரியாத் காஹிர் பைத்துல்மால் அமைப்பின் பொருளாளர் ஹாஜி எஸ்.எம்.நஈமுல்லாஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவர் அனைவரையும் வரவேற்று முன்னுரையாற்றினார்.
இடைக்கூட்டங்கள் பற்றிய விபரங்கள்:
அதனைத் தொடர்ந்து, பள்ளிச் சீருடைகள் - பாடக் குறிப்பேடுகளை, நகர மாணவ-மாணவியருக்கு ஆண்டுதோறும் இலவசமாக வழங்கி வரும் நகர பொதுநல அமைப்புளை ஒருங்கிணைத்து, இக்ராஃ அலுவலகத்தில் 07.12.2010 மற்றும் 20.12.2010 தேதிகளில் நடத்தப்பட்ட கூட்டங்களின் நிகழ்வுகளையும், இறுதியில் இக்ராஃ கல்விச் சங்கத்தை தலைமையாகக் கொண்டு ஒருங்கிணைந்த முறையில் அவ்வமைப்புகள் அனைத்தும் விண்ணப்பப் படிவங்களை இக்ராஃவிலிருந்தே வினியோகிக்க ஒப்புதல் தெரிவித்த விபரங்களையும், இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் விளக்கிப் பேசினார்.
நகர மாணவியரை விட மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவது குறித்து கவலைகொண்ட நிலையில், அவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களை இக்ராஃவுக்கு வரவழைத்து 18.12.2010 அன்று நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்ட நிகழ்வுகளையும் அவர் விளக்கிப் பேசினார்.
அக்கூட்டத்தில் தலைமையாசிரியர்கள் தெரிவித்த மிக முக்கியமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும், மாணவர்களின் பெற்றோரிடம் சென்றடையச் செய்திட வேண்டும் என கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இலவச வினியோகத் திட்டத்தில் இணைய ஜக்வா ஆர்வம்:
இக்ராஃவின் தலைமையில் பொதுநல அமைப்புகள் இவ்வாண்டு முதல் அமுல்படுத்தப்படவுள்ள - நகர மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை, பாடக்குறிப்பேடுகளை இலவசமாக வழங்கும் திட்டத்தில் தாமும் இணைய ஆர்வப்படுவதாக ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் ஆர்வத்துடன் உள்ளதாகவும், அதுகுறித்து தமதமைப்பின் செயற்குழு கூடி அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் என்றும் அம்மன்றத்தின் தலைவர் ஹாஜி பிரபு முஸ்தஃபா கமால், செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் ஆகியோர் தெரிவித்தனர்.
செயலர் பதவி விலகல்:
அதனைத் தொடர்ந்து இக்ராஃ செயலாளர் ஏ.தர்வேஷ் முஹம்மத், தன்னால் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து பணியாற்ற இயலாத காரணத்தால் அப்பொறுப்பிலிருந்து விலகுவதாகக் கூறி அளித்த பதவி விலகல் கடிதத்தை, தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் வாசித்தார். அதற்கான விளக்கமளிக்கப்பட்ட பின்னர், அந்த பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களுக்கிடையில், இக்ராஃ செயற்குழு உறுப்பினர் என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் வாரத்தில் இரண்டு தினங்கள் தான் இக்ராஃவிற்கு வந்து தன்னாலியன்ற உதவி, ஒத்துழைப்புகளைத் தருவதாக உறுதியளித்தார். அதனைப் பாராட்டிப் பேசிய தலைவர், அதுபோன்று பலரும் முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.
இவ்வாறாக நடைபெற்ற பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள், ஆலோசனை பகிர்தலைத் தொடர்ந்து இறுதியில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:-
தீர்மானம் 1 - செயலர் பதவி விலகல் ஏற்பு:
இதுவரை செயலாளராகப் பொறுப்பு வகித்து செயலாற்றிய ஏ.தர்வேஷ் முஹம்மத் அவர்களின் ராஜினாமா கடிதத்தை இக்கூட்டம் ஏகமனதாக ஏற்றுக்கொள்வதோடு, எதிர்வரும் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்படும் வரை, தற்போது துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் கே.எம்.டி.சுலைமான் அவர்களை செயலாளர் பொறுப்பிற்கு இக்கூட்டம் தேர்ந்தெடுக்கிறது.
தீர்மானம் 2 - இலச்சினையை முடிவு செய்ய குழு நியமனம்:
இக்ராஃவுக்கான இலச்சினையை (logo) ஏராளமானவர்கள் அனுப்பித் தந்திருப்பதால் அவற்றை சரிபார்த்து, பொருத்தமான ஒன்றைத் தேர்வு செய்ய கே.ஆர்.செய்யித், எம்.ஆர்.ரஷீத் ஜமான், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரை இக்கூட்டம் தேர்ந்தெடுக்கிறது.
தீர்மானம் 3 - தேர்வு நேரங்களில் ஆசிரியர்களை மாற்று வேலைக்கு அரசு பயன்படுத்தல்:
எதிர்வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்கு பள்ளிகளின் ஆசிரியர்களைப் பயன்படுத்திட முடிவு செய்துள்ளதாக அறிய முடிகிறது. அது தேர்வு நடைபெறும் முக்கியமான காலம் என்பதால் மாணவர்களுக்கு இதனால் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்த்தி, இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழக அரசின் கல்வித்துறைச் செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆகியோருக்கு இக்ராஃ மூலம் கோரிக்கைக் கடிதம் அனுப்ப்ப தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை குறித்த விபரங்கள் பெறல்:
அரசின் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை ஏராளமானோருக்குக் கிடைப்பதில்லை என தெரிய வருகிறது. இதுகுறித்த விளக்கத்தை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட துறையினரிடம் இக்ராஃ மூலம் கேட்டுப் பெறுவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 5 - வேலைவாய்ப்புக்கான ஆன்லைன் பதிவு ஏற்பாடுகள்:
நமது நகர மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதெனவும், ஆன்லைன் மூலம் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு விண்ணப்பித்திட மாணவர்களுக்கு உதவுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 6 - இக்ராஃவிற்கு புதிய இடம் வாங்கல்:
இக்ராஃ அலுவலகத்திற்கு கட்டிடம் கட்ட சொந்தமாக ஓர் இடம் வாங்கிட முயற்சிகளை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 7 - அலுவலர் ஊதிய உயர்வு:
அரசுப்பதிவு செய்யப்பட்டு, அதிகமான கல்விப் பணிகளாற்றி வரும் இக்ராஃ கல்விச் சங்கத்தை இன்னும் திறம்பட நடத்திடும் வழிவகைகளை ஆலோசித்திடுவதற்காக, சென்ற செயற்குழுக் கூட்டத்தில் நியமிக்கப்பட்ட ஐவர் குழு, 21.11.2010 அன்று கூடி ஆலோசித்து எடுத்த முடிவில், ஏ.தர்வேஷ் முஹம்மத் அவர்களை இக்ராஃவின் நிர்வாக அதிகாரியாக (Administrative Officer - AO) நியமிப்பதெனவும்,
அதற்கான மாத ஊதியமாக ரூ.13,000 (பதிமூன்றாயிரம் ரூபாய் மட்டும்) வழங்குவதெனவும், பெறப்படும் ஊதியத்தில் ஆண்டுதோறும் பத்து சதவிகிதம் உயர்த்திக் கொடுப்பதெனவும் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஐவர் குழுவின் இந்த முடிவை இக்கூட்டம் ஏகமனதாக ஏற்று, அதனை ஜனவரி 2011 முதல் செயல்படுத்திட ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 8 - புதிய உறுப்பினர்களின் விண்ணப்பங்கள் ஏற்பு:
இக்ராஃவின் உறுப்பினராவதற்காக புதிதாக இதுவரை பெறப்பட்டுள்ள 72 விண்ணப்பங்களை இக்கூட்டம் அங்கீகரிக்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கலந்துகொண்டோர்:
இக்கூட்டத்தில், ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன், ஹாஜி எஸ்.எம்.அஹ்மத் சுலைமான், ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், ஹாஜி எஸ்.எம்.நஈமுல்லாஹ் (ரியாத் - காஹிர் பைத்துல்மால்),
ஹாஜி எம்.எம்.அஹ்மத் ஹுஸைன் - தம்மாம் (சிறப்பு அழைப்பாளர்), கே.எம்.டி.சுலைமான், எஸ்.கே.ஸாலிஹ், ஹாஜி கே.ஏ.ஆர்.செய்யித், கே.ஜே.ஷாஹுல் ஹமீத், ரஷீத் ஜமான் (சிங்கப்பூர் காயல் நல மன்றம்), ஹாஜி எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர், ஆசிரியர் எம்.ஏ.புகாரீ, ஹாஜி ஏ.ஆர்.தாஹா, எம்.எம்.ஷாஹுல் ஹமீத்,
ஹாஜி பிரபு முஸ்தஃபா கமால் (ஜெய்ப்பூர் காயல் நல மன்றம்), ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் (ஜெய்ப்பூர் காயல் நல மன்றம்), ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி டபிள்யு.கே.எஸ்.நாஸர், ஹாஜி டபிள்யு.எச்.எம்.உவைஸ் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகவும், சிறப்பு அழைப்பாளர்களாகவும் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
K.M.T.சுலைமான்,
செயலாளர் (பொறுப்பு),
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம். |